தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூளைக்கழலை நோய் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

Advertisement

‘மூளைக்கழலை’ (கிளியோபிளாஸ்டோமா-GBM) என்பது வேகமாக வளரும் ஒருவகை மூளைக்கட்டியின் பாதிப்பு அறிகுறிகளாகும். இது ஒருவருக்கு ஏற்பட்டால் அவரது பேச்சு, நினைவாற்றல், மற்றும் ஆளுமையை சிறிது சிறிதாக குறைத்துவிடும் திறன் கொண்டது. இந்நோய் மருத்துவப் பரிசோதனைகளில் கண்டறியப்படுவதற்கு முன்பே ஒருவரின் சுயத்தை திருடிவிடும். மூளைக்கழலை பொதுவாக வயதானவர்களிடம் காணப்பட்டாலும், இது எந்த வயதிலும் மென்மையான, எளிதில் புலப்படாத தொடக்கமும், அதன்பிறகு வேகமான வளர்ச்சியும் ஒருவரின் உயிரையே பாதிக்கக்கூடியது என்கிறார் மூளை-நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர். அரவிந்த் சுகுமாரன்.

நமது மூளையானது, செல்கள், மின்சாரம், மற்றும் வேதியியல் ஆகியவற்றின் மென்மையான வலைப்பின்னலாக நமது சுயஉணர்வுக்கு உயிரூட்டுகிறது. இந்த இணைப்பு உயிரணுக்களிலிருந்து உருவாகும் மூளைக்கழலை நோய் மூளையின் முன்பக்க அல்லது பக்கவாட்டு மடல்களில் ஊடுருவி, நினைவாற்றல், மொழித்திறன் மற்றும் நடத்தையைச் சீர்குலைக்கிறது. அதன் அறிகுறிகளாக குழப்பம், பேசும்போது வார்த்தையில் தடுமாற்றம், ஆளுமை தினசரி நடத்தையில் மாற்றங்கள் போன்றவற்றை ஏற்படுத்தும். இவை ஆரம்பத்தில் மன அழுத்தம் அல்லது முதுமையின் அடையாளங்களைப் போலவே தோன்றலாம். எனவே, சரியான நேரத்தில் உரிய சிகிச்சை நடவடிக்கை எடுப்பதன் மூலம் மூளையின் செயல்பாடுகளைப் பாதுகாத்து, வாழ்க்கைத் தரத்தை நீட்டிக்க முடியும் என்பதால், இப்பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் இன்றியமையாதது ஆகும்.

நினைவாற்றல்: சுயத்தின் அச்சாரம்

நினைவாற்றல் என்பது நமது சுயத்தின் கட்டமைப்பாக நம்மை ஆழமாக நிலைநிறுத்துகிறது. நாம் நேசிக்கும் நபர்களின் முகத்தை அடையாளம் கண்டுணர்வது, ஒரு இசைப்பாடலின் மெட்டை முணுமுணுப்பது, கடந்து சென்ற தீபாவளி போன்ற குடும்ப விழாவை மீண்டும் நினைவுகூர்வது, அல்லது கழிவறை எங்கே இருக்கிறது, காலை சாப்பிட்டோமா, இல்லையா என்பதை அறிவது வரை அனைத்தும் நினைவின் வெளிப்பாடே. மூளைக்கழலை நோய் ஏற்பட்டால் இந்த திறனை மெல்ல மெல்ல சிதைக்கிறது; நடந்த உரையாடலை மறந்துவிடுவது, சாவியை எங்கோ வைத்துவிட்டு தேடுவது என இது சமீபத்திய நிகழ்வுகளில் இருந்து தொடங்குகிறது.

அது மூளையின் ஆழமான பகுதிகளை ஊடுருவும்போது, நோயாளிகள் தன்னிலை உணர்வை இழந்து தவிக்கிறார்கள்; உணவு பற்றித் திரும்பத் திரும்பக் கேட்பது, தங்கள் வீட்டிலேயே வழிதெரியாமல் நிற்பது என அவர்களின் நிலை மாறுகிறது. இந்த நினைவிழப்பு, ஒருவர் தன் வேர்களை இழப்பதைப் போன்ற ஓர் உணர்வைத் தருகிறது. குடும்பத்தினர் ஒரு கொடூரமான முரண்பாட்டை எதிர்கொள்கிறார்கள்: கண்முன்னே உயிருடன் இருக்கும் ஒருவர், அதே சமயம் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலையை இழப்பதை காண்பது பெரும் வேதனை. ஆனாலும், சிலர் அந்த நிலையிலும் மனவலிமையுடன், வேகமாக மாறிவிடும் அந்த மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்து வாழ்கிறார்கள்.

பேச்சு: வார்த்தைகளுக்கும் அப்பால்

பேச்சு தடுமாறும்போது, அது அந்நியமாகி எங்கோ போய்விடுகிறது. மூளைக்கழலை பாதிப்பு, ஒரு நபரின் மொழி / பேச்சுத் திறனுக்கான பகுதியை தாக்கும்போது, வார்த்தைகள் முதலில் தடுமாறுகின்றன, பின்னர் முற்றிலுமாகச் சிதைந்துவிடுகின்றன. வகுப்பறைகளில் மாணவர்களுக்கு சிறப்பான கல்வி கற்பித்து உத்வேகம் அளித்த ஒரு ஆசிரியரோ அல்லது சிறந்த கதைகளைப் படைத்த ஒரு எழுத்தாளரோ தனது குழந்தையின் பெயரைச் சொல்லவே சிரமப்படுவார்.

பேரப்பிள்ளைகளுக்கு தூங்குவதற்கு முன்பு இதுவரை பாட்டி சொல்லி வந்த உறக்க நேரக் கதைகள் மறைந்துபோகின்றன; தந்தையின் வழிகாட்டுதலும், தெளிவான அறிவுறுத்தல்களும் காணாமல் போய் மௌனமாகின்றன. ஆனாலும், மீள் இணைப்பின் சிற்பிகளான பேச்சுப் பயிற்சியாளர்கள், தலையசைப்பு, கையை இறுக்கிப் பிடிப்பது போன்ற சைகைகள், அறிகுறிகள் அல்லது பார்வைகள் மூலம் தகவல் பரிமாற்றம் சாத்தியம் என்பதை கற்றுத் தருகிறார்கள். இதன் மூலம், உண்மையான தகவல் தொடர்பு என்பது, வார்த்தைகளுக்கும் அப்பாற்பட்டது என்பதை அவர்கள் நிரூபிக்கிறார்கள்.

ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும் ஆளுமை மாற்றங்கள்

ஆளுமை மாற்றங்களே மிகவும் ஆழமாகக் காயப்படுத்துகின்றன. மூளைக்கழலை நோய், மூளையின் முன்பக்கப் புறணி போன்ற பகுதிகளை தாக்கும்போது, இதுவரை இனிமையாகப் பழகுபவர் என்று அறியப்பட்ட அற்புதமான நபர் கூட எரிச்சல் மிக்கவராகவும், அன்பானவர் அந்நியராகவும், நிதானமானவர், கணநேரத்தில் உணர்ச்சிவசப்படுபவராகவும் மாறுகிறார். அந்நபருக்குள் உள்ளிருக்கும் ஆன்மா அப்படியே தான் இருக்கிறது என்று நம்பினாலும் கூட, குடும்பத்தினர் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அந்நியரைச் சந்திப்பது போல உணர்கிறார்கள்.

அன்றாடப் பழக்கவழக்கங்களில் அன்பு தழைக்கும் நெருக்கமான வீடுகளில், இந்த நிலை அவர்களின் மன உறுதியை மிகவும் சோதிக்கிறது. ஆனாலும், எப்போதாவது வெளிப்படும் ஒரு பரிச்சயமான பார்வையும், ஒரு சில வார்த்தைகளும் நம்பிக்கையைத் தூண்டி, புதிய பிணைப்புகளை உருவாக்குகின்றன. ஒருவரை, அவர் முன்பு எப்படி இருந்தார் என்பதற்காக மட்டுமல்லாமல், இப்போது எப்படி மாறிக்கொண்டிருக்கிறார் என்பதற்காகவும் நம்மால் அன்புசெய்ய, பாசத்தை வெளிப்படுத்த முடியுமா? என்ற கேள்வி எழக்கூடும். இந்த கேள்விக்குப் பதிலளிப்பது கடினமானதே. ஆனாலும் இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட நபரின் குடும்பத்தினர் அன்பை தொலைத்துவிடாமல் பாசத்தை வெளிப்படுத்த முயற்சி செய்கின்றனர்.

தொடக்கநிலையிலேயே நோய் பாதிப்பை கண்டறிவது ஏன் முக்கியமானது. பேச வார்த்தைகளைத் தேடி பயன்படுத்துவதில் சிரமங்கள், நடத்தை மாற்றங்கள், குழப்பம் போன்ற அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் அவசியம். அநேக நேரங்களில், குடும்பத்தினர் இவற்றைச் சோர்வு அல்லது முதுமையின் அடையாளங்கள் என்று தவறாகக் கருதி, சிகிச்சை பெறுவதை தாமதப்படுத்துகின்றனர்.

எம்.ஆர்.ஐ ஸ்கேன் சோதனை முடிவை அறிந்த பிறகு, அதிர்ச்சியில் உறைந்துபோய் அமர்ந்திருந்த ஒரு குடும்பம் என் நினைவுக்கு வருகிறது. ஒருபக்கம் சோதனை முடிவை நம்ப முடியாமலும், மறுபக்கம் அந்த முடிவு தவறாக இருக்கக் கூடாதா என்ற தவிப்புடனும் அவர்கள் இருந்தார்கள். நம்ப முடியாத திகைப்பில் ஆழ்ந்துபோன சிலர் எந்த உணர்ச்சியும் இன்றி கேள்விகளைக் கேட்டனர்; மற்றவர்களோ, என்ன செய்வதென்றே தெரியாமல், சுய சிந்தனையை கைவிட்டு, அனைத்து முடிவுகளையும் மருத்துவர்களிடமே ஒப்படைத்தனர். எனவே, முதல் அறிகுறி தென்பட்ட உடனேயே மருத்துவரை அணுகினால், சரியான நேரத்தில் ஸ்கேன் செய்து, சிகிச்சையைத் தொடங்க முடியும். இது சிகிச்சையின் விளைவுகளை மேம்படுத்த உதவும்; தாமதிப்பது, கட்டி மேலும் வளர்வதற்கும், உடல் செயல்பாட்டுக் குறைபாடுகள் மோசமடைவதற்கும், அறுவை சிகிச்சையின் பலன் குறைவதற்கும் வழிவகுக்கும்.

அறுவைசிகிச்சை:

மிக முக்கிய நடவடிக்கை மூளையில் உருவாகியிருக்கும் கட்டியை பகுதியளவு அகற்றுவதோடு ஒப்பிடும்போது, அறுவை சிகிச்சை மூலம் கட்டியை முடிந்தவரை முழுமையாக அகற்றுவது, நோயாளியின் வாழ்நாள் காலத்தை நீட்டிக்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. மேம்பட்ட தொழில்நுட்பங்கள் இந்த அறுவை சிகிச்சையின் துல்லியத்தை உறுதி செய்கின்றன: நோயாளி விழித்திருக்கும் நிலையில் செய்யப்படும் மூளை அறுவை சிகிச்சைகள், நிகழ்நேரத்திலேயே பேச்சுத்திறன் மற்றும் உறுப்பு இயக்கங்களை பரிசோதிக்கின்றன.

வெளிச்சநிலை வழிகாட்டலுடன் கூடிய கட்டி அகற்றல் நுட்பமானது, கட்டியின் விளிம்புகளை தெளிவாக வெளிப்படுத்துகின்றன; நியூரோ நேவிகேஷன் வழிகாட்டல்கள், அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு ஜிபிஎஸ் போல உதவுகின்றன. மின் உடலியங்கியல் மேப்பிங் செயல்பாடு மூளையின் முக்கியமான பகுதிகளை பாதுகாக்கிறது. அறுவைசிகிச்சையின்போதே மேற்கொள்ளப்படும் அல்ட்ராசவுண்டு மற்றும் எம்ஆர்ஐ சோதனைகள் வெட்டி அகற்றப்படும் கட்டியின் அளவையும், பரப்பையும் உறுதி செய்கின்றன. இந்த கருவிகளும், தொழில்நுட்பங்களும் மூளையின் இயக்கத்தை தக்க வைப்பதற்கும் மற்றும் தீவிரமான மூளைக்கட்டியை அகற்றுவதற்கும் இடையே ஒரு சமநிலையை உருவாக்குகின்றன. இதன் மூலம், நோயாளிகளுக்கு மிகவும் அர்த்தமுள்ள வாழ்நாட்களை இவை வழங்குகின்றன.

புற்றுநோயியல் சிகிச்சை

அறுவை சிகிச்சைக்குப் பிறகு, புற்றுநோய் நிபுணர்கள், கதிரியக்க நிபுணர்கள், மற்றும் பிற சிறப்பு மருத்துவர்களை உள்ளடக்கிய புற்றுநோய் சிகிச்சை மேலாண்மைக்கான ஒரு விரிவான குழு, ஒவ்வொரு நோயாளிக்கும் பிரத்தியேகமான சிகிச்சை முறைகளைத் திட்டமிடுகிறது. இந்தக் குழு, கட்டியின் மூலக்கூறு விவரங்களின் அடிப்படையில் (உதாரணமாக, IDH மரபணு மாற்றங்கள், MGMT மெத்திலேற்றம்) கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி சிகிச்சைகளை திட்டமிட்டு வடிவமைக்கிறது.

இலக்கை குறிவைக்கும் கதிர்வீச்சு சிகிச்சை, ஆரோக்கியமான திசுக்களுக்கு ஏற்படும் சேதத்தைக் குறைக்கிறது. அதேபோல், தனிப்பயனாக்கப்பட்ட கீமோதெரபி, அருகிலுள்ள செல்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைக்கிறது. இந்த நவீன சிகிச்சை முறைகள், உடல் செயல்பாடுகளை நீண்ட காலத்திற்குப் பாதுகாத்து, வாழும் நாட்களை அர்த்தமுள்ளதாக்குகின்றன. இச்சிகிச்சையின் மூலம் சராசரி ஆயுட்காலம் 15 முதல் 18 மாதங்கள் வரை (சிகிச்சையின்றி இது 3 முதல் 4 மாதங்கள்) என இருந்தாலும், இந்த மேம்பட்ட சிகிச்சைகள் அந்த நாட்களின் தரத்தை நிச்சயம் மேம்படுத்துகின்றன.

சிகிச்சை பராமரிப்பின் முக்கியஅம்சம்

மூளைக்கழலை (GBM) சிகிச்சை என்பது, பல்வேறு மருத்துவத்துறைகள் இணைந்து செயல்படும் ஒரு அணுகுமுறையாகும். நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கட்டியை அகற்ற, புற்றுநோய் மற்றும் கதிரியக்க நிபுணர்கள் துணை சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். நரம்பியல் மருத்துவர்கள் வலிப்புத்தாக்கம் வராமல் கட்டுப்படுத்துகின்றபோது, உளவியலாளர்கள் மனச்சோர்வைக் குறைக்க உதவுகிறார்கள். பேச்சு மற்றும் தொழில்வழி சிகிச்சை நிபுணர்கள், நோயாளி நேசிக்கும் நபர்களின் பெயரை மீண்டும் எழுதக் கற்றுக் கொடுப்பது போன்ற இழக்கப்பட்ட செயல்பாடுகளை மீட்டெடுக்கின்றனர்.

வலி நிவாரண மற்றும் ஆதரவு சிகிச்சைக் குழுக்கள் வீட்டிலோ அல்லது மருத்துவப் பராமரிப்பு மையத்திலோ நோயாளிக்கு ஆறுதலான சூழலை உறுதி செய்கின்றன. செவிலியர்கள், ஆலோசகர்கள் மற்றும் மருத்துவர்கள் என அனைவரும் குடும்பத்தினரின் கவலைகளைக் கேட்டு, அவர்களுக்கு ஆறுதல் கூறி, பயத்திலிருந்து மீள வழிகாட்டுகிறார்கள். நோயின் தீவிரம் அதிகரிக்கும்போது, நம்பிக்கையின் கவனம் குணப்படுத்துதலில் இருந்து, வலி நிவாரணம், மனரீதியான ஆதரவு, கண்ணியம் போன்றவை வழங்கக்கூடிய மனஅமைதியையும், நிம்மதியையும் நோக்கியதாக மாறுகிறது.

ஆதரவுக் குழுக்கள், “நீங்கள் தனியாக இல்லை” என்று உறுதியாக எடுத்துச்சொல்லி, நோயாளியின் குடும்ப உறுப்பினர்களை ஒன்றிணைத்து ஆறுதல் அளிக்கின்றன. ஒரு மருத்துவரின் கனிவான வார்த்தைகள், ஒரு செவிலியரின் பிரார்த்தனை, பிறரோடு சேர்ந்து சிரிக்கும் தருணங்கள், போன்ற இந்த சின்னஞ்சிறு விஷயங்கள், இருள்சூழும் வேளையிலும் மகிழ்ச்சியையும், வெளிச்சத்தையும் பாய்ச்சுகின்றன.

தொகுப்பு: ஸ்ரீதேவிகுமரேசன்

Advertisement