புற்றுநோயை வெல்வோம்!
நன்றி குங்குமம் டாக்டர்
புற்றுநோய் குறித்து பல்வேறு தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் மக்களிடையே பரவி உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் அது குறித்து சரியான புரிதல்கள் நம்மில் பலருக்கு இல்லை என்பதே. எனவே, புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான ஒரே வழி அது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதும், ஆரம்பகால நோய் கண்டறிதலை மேற்கொள்வதுமே சிறந்தது என்று கிளெனீகல்ஸ் புற்றுநோயியல் அறுவைசிகிச்சை பிரிவு தலைவர் மற்றும் ரோபோடிக் திட்டப் பிரிவு இயக்குனருமான மருத்துவர் எஸ். ராஜசுந்தரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது.
புற்றுநோய் பற்றிய பொய்யான தகவல்கள் மற்றும் உண்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ம் தேதி உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மக்களிடையே விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே புற்றுநோயைத் தடுக்கவும், ஆரம்பத்திலேயே கண்டறிந்து முழுமையாக குணப்படுத்தவும் முடியும். இந்த ஆண்டு உலக புற்றுநோய் தினம் 2025-27ம் ஆண்டிற்கான ”ஒன்றுபட்ட தனித்துவம்” என்பதை வலியுறுத்தும் வகையில் கடைபிடிக்கப்படுகிறது.
அதாவது ஒவ்வொரு புற்றுநோயும் தனித்துவமானது, ஒவ்வொரு புற்றுநோய் நோயாளியும் தனித்துவமானவர், ஆனால் இவை அனைத்தும் தனித்துவமானது என்றாலும் பொதுவாக புற்றுநோய் என்பதில் ஒன்றிணைக்கப்பட்டு உள்ளது. இது புற்று நோயாளிகளுக்கு தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பின் முக்கியத்துவத்தையும், புற்றுநோய் பராமரிப்புக்கான மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையையும், ஒவ்வொரு நோயாளியின் பயணத்தின் தனித்துவத்தையும் வலியுறுத்துகிறது.
உலகளவில் 2 கோடி பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 97 லட்சம் பேர் புற்று நோயால் இறந்துள்ளனர். இந்தியாவில் புதிதாக 14 லட்சத்து 13 ஆயிரத்து 316 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர், இதில் 9 லட்சத்து 16 ஆயிரத்து 827 பேர் இறந்துள்ளனர். இது இந்தியாவில் புற்றுநோய் அதிகரித்து வரும் போக்கை காட்டுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 2022-ல் இதன் பாதிப்பு என்பது சுமார் 88,750ஆக இருந்தது. தற்போது இது அதிகரித்துள்ளது.
இந்தியப் பெண்களில் பொதுவாகக் காணப்படும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் 26.6 சதவீதமாகவும், கருப்பை வாய் புற்றுநோய் 17.7 சதவீதமாகவும், கருப்பை புற்றுநோய் 6.6 சதவீதமாகவும், உதடு, வாய் புற்றுநோய் 5 சதவீதமாகவும் மற்றும் பெருங்குடல் 3.7 சதவீதமாகவும் உள்ளது. ஆண்களைப் பொறுத்தவரை உதடு, வாய்வழி குழி புற்று நோய் 15.6 சதவீதமாகவும், நுரையீரல் 8.5 சதவீதமாகவும், உணவுக்குழாய் 6.6 சதவீதமாகவும், பெருங்குடல் 6.3 சதவீதமாகவும் மற்றும் வயிறு 6.2 சதவீதமாகவும் உள்ளது. இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாக மக்கள்தொகை வளர்ச்சி, வயது மூப்பு மற்றும் புகையிலை, மது, உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாமையும், போதிய அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ளாததே ஆகும். புற்றுநோய் அதிகரிப்புக்கு மற்றொரு முக்கிய காரணமாக காற்று மாசு உள்ளது.
30 முதல் 50 சதவீத புற்றுநோய்க்கு புகையிலை மற்றும் மதுப் பழக்கங்கள், வழக்கமான உடற்பயிற்சி இல்லாமை மற்றும் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளாததே ஆகும். HPV மற்றும் HBV தடுப்பூசிகள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் கல்லீரல் புற்றுநோயைக் குறைக்கும். ஆறாத புண்கள், ஒழுங்கற்ற குடல் பழக்கம், அசாதாரண ரத்தப்போக்கு அல்லது வெளியேற்றம், அஜீரணம், மார்பகத்திலோ அல்லது உடலின் எந்தப் பகுதியிலோ கட்டி, அசாதாரண எடை இழப்பு மற்றும் தொடர்ந்து வரும் இருமல் போன்றவை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் ஆகும். இதை யாரும் புறக்கணிக்கக் கூடாது.
இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும். ஆரம்பகால நோயறிதல், சிகிச்சையை எளிதாக்கும். மேலும் புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிவதற்கு பரிசோதனை மிகவும் முக்கியமாகும். குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்க்கான வருடாந்திர பரிசோதனை மேமோகிராம், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான பாப் ஸ்மியர், மல மறைவான ரத்தம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கான சிக்மாய்டோஸ்கோபி மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்க்கான சீரம் பிஎஸ்ஏ சோதனை. வழக்கமான சுகாதார பரிசோதனைகள் சிறுநீரக புற்றுநோய், கல்லீரல் கட்டி மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற ஆரம்பகால புற்றுநோய்களைக் கண்டறிய உதவும்.
மேலும், புற்று நோய்க்கான சிகிச்சை முறையில் ரோபோடிக் அறுவை சிகிச்சைகள், நானோ தொழில்நுட்பம் மற்றும் CAR-T செல் சிகிச்சை என அதிநவீன தொழில்நுட்ப சிகிச்சை முறைகள் உள்ளன. மருத்துவத்தில் துல்லியமான புற்றுநோயியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை வரும் காலத்தில் புற்றுநோய் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தும். புற்றுநோயை வெல்ல பொதுமக்களிடையே தடுப்பு மற்றும் ஆரம்பகால கண்டறிதல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டாலே பெரும்பாலான புற்றுநோயை தடுக்க முடியும்.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்