தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை

நன்றி குங்குமம் டாக்டர்

ரோபோடிக் ட்ரீட்மென்ட்!

இன்று சிறுநீரக பாதிப்பு ஒரு மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சிறுநீரக பாதிப்பு அடைந்த பலர், தொடர்ந்து டயாலிஸஸ் மேற்கொள்ள முடியாத நிலையில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். இன்றைய காலகட்டத்தில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையில் பலவித நவீன முன்னேற்றங்கள் வந்துவிட்டன. அதில் ஒன்றுதான் ரோபோடிக் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை. இது குறித்து காவேரி மருத்துவமனையில், தமிழகத்தின் முதல் ரோபோடிக் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை நிபுணராக இருக்கும் மருத்துவர் சுவாமிநாதன் சம்பந்தம் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை என்பது என்ன?

ஒவ்வொருவருக்கும் பிறக்கும்போதே இரண்டு சிறுநீரகங்கள் இருக்கும். ஏதாவது காரணத்தால், அந்த சிறுநீரகங்கள் பழுதடைந்துவிட்டால், அது வேலை செய்யாமல் போய்விடும். இதனால், உடலில் உள்ள அமிலம், தண்ணீர், அழுக்குகள் வெளியேற முடியாமல், உடலிலேயே தங்கிவிடும். அப்படி வெளியேறாமல் தங்கிவிட்டால், அது ஒரு கட்டத்தில் மற்ற உறுப்புகளையும் பாதித்து உயிருக்கே ஆபத்தாகிவிடும். இந்த நிலையில்தான் ஒருவருக்கு டயாலிஸஸ் தேவைப்படும்.

அதாவது, செயற்கையாக உடலில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றுவது. இந்த டயாலிஸஸ் என்பது மிஷின் மூலம் செய்வது. இது உடலில் உள்ள ரத்தத்தை வெளியே எடுத்து அதில் தேங்கியுள்ள நச்சுப்பொருட்களை அகற்றிவிட்டு, மீண்டும் நல்ல ரத்தத்தை உடலில் செலுத்துவதாகும். சிறுநீரகம் பழுதடைந்த ஒருவருக்கு இதை வாரத்தில் மூன்று நாட்களாவது செய்ய வேண்டும். ஏனென்றால் சிறுநீரகங்களை பொருத்தவரை, ஒவ்வொரு விநாடியும் வேலை செய்துகொண்டே இருக்கும்.

இதனால், ஒவ்வொரு விநாடியும் உருவாகும் கழிவுகள் தேங்கிக்கொண்டே இருக்கும். அதனால், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை டயாலிஸஸ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டே இருக்க வேண்டும். அது எல்லாருக்கும் சாத்தியமில்லை. எனவே, அறுவைசிகிச்சை மூலம் கெட்டுப்போன சிறுநீரகங்களை அகற்றிவிட்டு, வேறு சிறுநீரகத்தைப் பொருத்துவதுதான் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை எனப்படுகிறது.

சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படும் முறைகள்

சிறுநீரக அறுவைசிகிச்சை இரண்டு வகையில் மேற்கொள்ளப்படுகிறது. ஒன்று லிவிங் டோனர் அதாவது உயிருடன் இருக்கும் ஒரு நபர், சிறுநீரகம் பழுதடைந்த ஒருவருக்கு, அவரது சிறுநீரகத்தில் இருந்து ஒன்றை தானமாக வழங்குவது. இதில் ரத்த சொந்தம் உள்ள உறவுகளில் இருந்து 18 வயதுக்கு மேல் 60-65 வயதுக்குள் உள்ள ஆனோ, பெண்ணோ யார் வேண்டுமானாலும் தானமாக கொடுக்கலாம். இன்னொரு வகை, டிசிஸ் டோனர் (Disease Donar). அதாவது, நமக்கு பொருந்தக்கூடிய வகையில் உள்ள ரத்த சம்பந்தமில்லாத யாரோ ஒருவரது சிறுநீரகத்துக்காக பதிவு செய்து காத்திருப்பது. இதில் விபத்திலோ அல்லது வேறு காரணத்தாலோ இறப்பவர்களின் (கெடாவர்) உடலில் இருந்து உறுப்புகள் தானம் செய்யப்படும்போது அவர்களது உறுப்பை பெறுவதாகும். இம்முறையில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யும்போது, ஓரிரு ஆண்டுகள் வரை கூட காத்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை அதிகரித்து வருவதற்கான காரணம் என்ன?

முன்பெல்லாம் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை குறித்த பயம் மக்களிடையே அதிகமாக இருந்ததால், பலரும் அறுவை சிகிச்சையை தவிர்த்து வந்தனர். ஆனால், தற்போதுள்ள லேப்ரோஸ்கோபி, ரோபாட்டிக் போன்ற உபகரணங்களால் அறுவை சிகிச்சை மிக எளிதாக மாறியுள்ளது. மேலும், அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய சூழலோ, ஓய்வு எடுக்க வேண்டிய சூழலோ குறைந்துள்ளது. மேலும், அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நோயாளிகள் ஓரிரு நாட்களில் மீண்டு பழைய நிலைக்கு வந்துவிடுகின்றனர். இதனால், அறுவை சிகிச்சை மீதான பயம் பெரும்பாலான மக்களிடையே குறைந்துள்ளது ஒரு காரணம் எனலாம்.

மேலும், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடியாக இருப்பதால், மற்ற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பலரும் தமிழகம் வந்து சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்கின்றனர். இதுவும் தமிழகத்தில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை அதிகரிக்க ஒரு காரணமாகும். அந்தவகையில், கடந்த ஆண்டில் மட்டும் கெடாவர் உறுப்புதானம் மூலம் சுமார் 550 சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறுநீரகக் கோளாறு ஏற்படாமல் தற்காத்துக்கொள்ளும் வழிகள்

பொதுவாக சிறுநீரக பிரச்னைகள் பலவிதத்தில் வருகிறது. ஒன்று பரம்பரை காரணமாக இருக்கலாம் அல்லது சர்க்கரை நோய் காரணமாக வரலாம். சுத்தமாக இல்லாததால் வரலாம். ஹைபர் டென்ஷன், உடல் பருமன், உடலில் நீர் இழப்பு, ஏதேனும் நோய்க்காக பெயின் கில்லர் போன்ற ஹெவி டோஸ் மாத்திரைகள் அதிகமாக எடுத்துக் கொள்வது, நாட்டு மருந்துகளை உரிய மருத்துவ ஆலோசனை இன்றி பவுடர் வகையிலோ, லேகியமாகவோ உட்கொள்வது போன்றவற்றினால் சிலநேரம் ஓவர் டோஸாகி, அது சிறுநீரகத்தை பாதிக்கலாம். எனவே, நமது வாழ்க்கை முறையை ஆரோக்கியமானதாக மாற்றிக் கொண்டாலே ஓரளவு சிறுநீரக செயலிழப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் நேரடி டோனருக்கும் கெடாவர் மூலம் பெறப்படும் உறுப்புக்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா?

நேரடி உறுப்பு தானத்தில் உறுப்பு கொடுப்பவரும், பெறுபவரும் அருகருகே அறையில் இருப்பார்கள். அதனால், உடனடியாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முடிந்து விடும். ஆனால், கெடாவரில் இருந்து பெறப்படும் உறுப்பு குறிப்பிட்ட சில மணி நேரத்தில் பெறப்படுபவருக்கு பொருத்தி விட வேண்டும். அதாவது, 12 மணி நேரத்தில் இருந்து 18 மணி நேரத்திற்குள் பொருத்திவிட வேண்டும். மற்றபடி நேரடி டோனருக்கும் கெடாவர் சிறுநீரகம் பொருத்துவதிலும் எந்த மாற்றமும் இல்லை. இரண்டுமே ஒரே மாதிரிதான் வேலை செய்யும். கெடாவரில் ஒரே சிக்கல் என்னவென்றால் அது கிடைப்பதில் காலதாமதம் ஆவதே ஆகும்.

ரோபோடிக் டெக்னாலஜி குறித்து...

ரோபோடிக் அறுவைசிகிச்சை என்பதில் மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு ரோபோட் தானியங்கியாக அறுவை சிகிச்சை மேற்கொள்வது கிடையாது. மருத்துவர்தான் ரோபாட்டை இயக்கி அறுவைசிகிச்சை செய்வார். ஒருவருக்கு நேரடி அறுவைசிகிச்சை மேற்கொள்வதைவிட பத்து மடங்கு சிறப்பு இதில் உள்ளது. உதாரணமாக, நேரடி அறுவை சிகிச்சை செய்யும்போது, மருத்துவரின் கைகள் வளைய முடியாத இடங்களில் கூட ரோபோவின் கைகள் மிக எளிதாக வளைந்து சென்றுவிடும். உதாரணமாக, மருத்துவரின் கைகள், 5 டிகிரி வரைதான் நோயாளியின் உடலுக்குள் செலுத்த முடியும் என்றால், ரோபோ 7 டிகிரி வரை ஆழமாக செல்லக் கூடியது.

அதுபோன்று நேரடியாக கண்களில் பார்க்க முடியாத நுண்ணிய பகுதிகளைக் கூட மிக துல்லியமாக ரோபோ மூலம் 10 மடங்கு விரிவு செய்து பார்க்க முடியும். இதனால் அறுவைசிகிச்சை மிக எளிதாகவும், சுலபமாகவும், துல்லியமாகவும் செய்ய முடிகிறது. இதனால், ரோபோடிக் அறுவை சிகிச்சை நேரடி அறுவைசிகிச்சையைக் காட்டிலும்10 மடங்கு சிறந்த பலனைத் தருகிறது. இந்த முறையில் எல்லா வகையான அறுவைசிகிச்சைகளும் மேற்கொள்ள முடியும். உதாரணமாக, ஹெர்னியா முதல் கல்லீரல், சிறுநீரகம் போன்ற அனைத்து வகையான அறுவைசிகிச்சைகளும் மேற்கொள்ள முடியும்.

இதில் மேலும் கூடுதல் சிறப்பு என்ன வென்றால், முன்பெல்லாம் சிறுநீரக தானம் கொடுப்பவர்களுக்கும், நேரடியாக அறுவைசிகிச்சை செய்துதான் அவரது சிறுநீரகத்தை எடுத்து மற்றவருக்கு பொருத்த முடியும். ஆனால், தற்போது லேப்ரோஸ்கோபி மற்றும் ரோபோடிக் அறுவைசிகிச்சைகள் எல்லாம் வந்தபிறகு, தானம் கொடுப்பவருக்கும் பெரியளவில் பாதிப்புகள் இருக்காது. பெறுபவருக்கும் பெரிய பாதிப்பு இருக்காது. ஒரு சிறியளவிலேயே துளைகள் இட்டு சிறுநீரகத்தை எடுத்து மாற்றி பொருத்திவிட முடியும்.

பொதுவாக, நேரடி அறுவைசிகிச்சை செய்யும்போது சிலருக்கு தையல் போட்ட இடங்கள் ஆறுவதற்கு நாளாகும். சிலருக்கு புண்ணாகவும் வாய்ப்பு உண்டு. எனவே, அவர்கள் மீண்டு வர குறைந்தபட்சம் ஒரு வாரம் ஆகலாம். அதன்பிறகு, எழுந்து நடமாட இரண்டு வாரங்கள் வரை ஆகலாம். ஆனால், ரோபோடிக் மூலம் அறுவைசிகிச்சை செய்யும்போது அவர்கள் நான்கு நாளில் வீட்டிற்கு சென்றுவிடலாம். அடுத்த ஓரிரு நாளில் எழுந்து நார்மலாக நடமாடலாம்.

தற்போது நூறு கிலோ எடை உள்ள ஒருவருக்கு கூட மிக எளிதாக சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்து விட முடியும் என்றால் இது ரோபாடிக்கின் உதவியால்தான். அந்தவகையில் சமீபத்தில், நாங்கள் 118 கிலோ எடையுள்ள ஒருவருக்கு அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளோம். ரோபோடிக் அறுவைசிகிச்சையை பொருத்தவரை செலவு அதிகம் என்பதால் பலரும் தவிர்த்து வந்தனர். அதற்கு காரணம், இதில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் சிலவற்றை ஒருமுறைதான் பயன்படுத்த முடியும் என்பதால்தான்.

மேலும் முன்பெல்லாம் ரோபாடிக் அறுவைசிகிச்சை இன்சூரன்ஸில் கவர் ஆகாது. இதனாலும் பலரும் ரோபாடிக் அறுவைசிகிச்சையை தவிர்த்தனர். ஆனால், தற்போது இன்சூரன்ஸ் வசதிகள் கிடைக்கின்றன. முன்பைவிட ரோபாடிக் அறுவைசிகிச்சையின் செலவும் குறைந்துள்ளது. வருங்காலத்தில் காப்பீடு திட்டத்தின் மூலம் கூட ரோபாடிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்ற நிலை உருவாக உள்ளது. எனவே, ரோபாடிக் அறுவைசிகிச்சை அனைவருமே பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் இருக்கிறது.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்