டீன் ஏஜ் பருவத்தினரை பாதிக்கும் கெரடோகோனஸ்!
நன்றி குங்குமம் டாக்டர்
கண் மருத்துவர் பி. கணேஷ்
இந்தியாவில், 65க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கண் சிகிச்சை மையங்களை கொண்டுள்ள மேக்ஸிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை குழுமம் முதன்முறையாக சென்னையில் அடையாறு, அண்ணாநகர் உள்ளிட்ட சுமார் பத்து இடங்களில் இரண்டு பல்நோக்கு மருத்துவமனைகள், எட்டு கண் சிகிச்சை மையங்களை தொடங்கியுள்ளனர். இதன் கிளினிக்கல் மற்றும் அகாடமிக் இயக்குநரான கண் மருத்துவர் பி. கணேஷ், டீன் ஏஜ் பருவத்தினரை பாதிக்கும் கெரடோகோனஸ் பாதிப்பு குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
கெரடோகோனஸ் என்றால் என்ன?எதனால் ஏற்படுகிறது?
கெரடோகோனஸ் என்பது இளம் பருவத்தினரை பாதிக்கும் ஒரு கண் கோளாறு. இதில், நாம் பார்ப்பதற்கு உதவும் கண்ணின் கருவிழி என்று சொல்லப்படும் கார்னியா படிப்படியாக மெலிந்து, கூம்பு வடிவமாக வளைந்துவிடும் ஒரு வகையான நோய்தான் கெரடோகோனஸ் என்று சொல்லப்படுகிறது. இது ஒரு நாளில் ஏற்படுவதில்லை. இது சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்து பாதிப்பை ஏற்படுத்தும்.
அதாவது 15 வயதில் தொடங்கி 30 வயதில் முழுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்த கெரடோகோனஸ் பெரும்பாலும் பெண் குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது.
கார்னியாவின் எலும்பு மிகவும் மெலிதாக இருந்தாலோ அல்லது அடிக்கடி கண்ணை தேய்த்துக் கொண்டு இருந்தாலோ இந்த கெரடோகோனஸ் பாதிப்பு ஏற்படலாம். இந்த கெரடோகோனஸ் எலும்பு மெலிவினால் ஏற்பட்டதா அல்லது கண்ணை தேய்த்ததால் ஏற்பட்டதா என்பதை கண்டறிய தற்போது நவீன கருவிகள் உள்ளது. அதன் மூலம் கண்டறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை அளித்து வருகிறோம்.
சிகிச்சை முறைகள்
கெரடோகோனஸ் எந்த நிலையில் இருக்கிறது என்பதை பொருத்து அதன் சிகிச்சை முறைகள் மாறுபடும். ஆரம்ப நிலையில் இருந்தால் மருந்துகள் மூலமாகவே சரி செய்துவிடலாம். அடுத்த நிலைக்குச் சென்றிருந்தால் அதற்கு தகுந்த சிகிச்சை செய்ய வேண்டும்.
கெரடோகோனஸின் அறிகுறிகள்
கெரடோகோனஸின் அறிகுறிகள் நோயின் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடும். மிகவும் பொதுவான அறிகுறிகள்:
மங்கலான பார்வை:
மங்கலான பார்வை என்பது கெரடோகோனஸின் ஆரம்ப மற்றும் மிகவும் கவனிக்கத்தக்க அறிகுறிகளில் ஒன்றாகும். கார்னியாவின் வடிவம் மாறும்போது, கண்ணுக்குள் நுழையும் ஒளி சிதறடிக்கப்படுகிறது, இதனால் பொருட்கள் தெளிவற்றதாகவோ அல்லது சிதைந்ததாகவோ தோன்றும்.
இரட்டை பார்வை
கெரடோகோனஸ் உள்ள பலருக்கு இரட்டைப் பார்வை ஏற்படுகிறது, இதில் படங்கள் நகல் அல்லது ஒன்றுடன் ஒன்றாக இருப்பது போன்று தோன்றும்.
சிதைந்த பார்வை
கார்னியாவின் ஒழுங்கற்ற வடிவம் காரணமாக, கெரடோகோனஸ் பெரும்பாலும் நேர்கோடுகள் மற்றும் பொருட்களை அலை அலையாகவோ அல்லது வளைந்ததாகவோ தோன்ற செய்யும். இந்த காட்சி சிதைவு வாசிப்பு மற்றும் பிற நெருக்கமான பணிகளை கடினமாக்குகிறது.
வெளிச்சத்திற்கு உணர்திறன்
கெரடோகோனஸ் உள்ளவர்களுக்கு ஒளிக்கு அதிகரித்த உணர்திறன் (ஃபோட்டோபோபியா) பொதுவானது. ஹெட்லைட்கள் மற்றும் சூரிய ஒளி போன்ற பிரகாசமான விளக்குகள் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும் தெளிவாகப் பார்ப்பதை கடினமாக்கும், குறிப்பாக இரவில் வாகனங்களை ஓட்டுவது சிரமமாக இருக்கும்.
கெரடோகோனஸ் ஆபத்து காரணிகள்
கெரடோகோனஸ் உருவாகும் வாய்ப்பை பல ஆபத்து காரணிகள் அதிகரிக்கின்றன, அவற்றுள்:
மரபணு முன்கணிப்பு
குடும்பத்தில் கெரடோகோனஸ் பாதிப்பு யாருக்காவது இருந்திருந்தால் அது மற்றவரை பாதிக்கலாம்.
நாள்பட்ட கண் தேய்த்தல்
குறிப்பாக ஒவ்வாமை உள்ள நபர்களில், தொடர்ந்து கண்களைத் தேய்ப்பது, கார்னியல் மெலிவதற்கு பங்களிக்கும்.
சுற்றுச்சூழல் காரணிகள்
புற ஊதா கதிர்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் வெளிப்பாடு அதிகமாக இருந்தால் கார்னியல் சிதைவு ஏற்படலாம்.
கண்களை பாதுகாக்கும் வழிகள்
பொதுவாக பிறந்த குழந்தை பருவத்திலிருந்தே கண்களை பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் பிறப்பிலேயே சில குழந்தைகளுக்கு பரம்பரை வழி நோய்களான மாலைக்கண் நோய், குளுக்கோமா, கண்புரை நோய் போன்றவை ஏற்படும். எனவே, குழந்தை பிறந்தவுடன் கண் மருத்துவரிடம் கண்களை பரிசோதித்து பிரச்னைகள் எதுவும் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளவேண்டும். அப்படி பாதிப்பு இருந்தால், அதற்கு தகுந்த சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்தபடியாக, இன்றைய உலகம் டிஜிட்டல் மயமாக மாறிவிட்டதால், ஒரு வயது குழந்தை முதலே செல்போன் பார்க்கும் பழக்கம் வந்துவிட்டது. இதனால், 5 வயது முதல் ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனைகள் செய்து கொள்வது மிகவும் நல்லது. அதுபோன்று 40 வயதை தொட்டுவிட்டால், சிலருக்கு வெள்ளழுத்து பிரச்னைகள் தொடங்கும். சிலர், மருத்துவரிடம் சென்றால் கண்ணாடி போடச் சொல்வார்கள் என்பதற்காக சிகிச்சை எடுப்பதையே தவிர்க்கிறார்கள்.
ஆரம்ப நிலையிலேயே பிரச்னையை சரி செய்யாமல், பார்வைக் கோளாறு ஏற்பட்ட பிறகே வருகின்றனர். இது மிகவும் தவறான ஒன்றாகும். அப்படியில்லாமல் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது பார்வை இழப்பை தடுக்க உதவும். எனவே, 40 வயதை தொட்டுவிட்டால், ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயமாக கண்களை பரிசோதித்துக் கொள்வது மிகவும் அவசியமாகும் என்றார்.