ஏர் ஃப்ரையர் சமையல் ஆரோக்கியமானதா!
நன்றி குங்குமம் டாக்டர்
புதிய தொழில்நுட்பங்கள் தோன்றி பல துறைகளில் பலவித நவீனங்கள் வந்துவிட்டது போலவே சமையல் கலையிலும் பல புதுமையான சமையல் முறைகள் தோன்றியுள்ளன. அதற்கு தகுந்த சமையல் உபகரணங்களும் அவ்வப்போது புதுப்புது வடிவில் தோன்றி வருகிறது. அந்தவகையில் ஒன்றுதான் ஏர் ஃப்ரையர். சமீபகாலமாக ஏர்ஃப்ரையரில் சமைப்பது டிரெண்டாகி வருகிறது. ஏர் ஃப்ரையரில் சமைப்பது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதா என்பதை தெரிந்துகொள்வோம்.
ஏர் ஃப்ரையர் என்பது ஒரு சிறிய வெப்பச்சலன அடுப்பு ஆகும். அதிக எண்ணெயைப் பயன்படுத்தாமல் உணவை வறுக்க, பொரிக்க மைக்ரோவேவ் ஓவன் போலவே இதுவும் பயன்படுத்தப்படுகிறதுஏர் ஃப்ரையர் உணவை சமைக்க குறைந்த வெப்பத்தைப் பயன்படுத்துகிறது, இதன் மூலம் டீப் ஃபிரையிங் செய்யும் எண்ணெயில் 70 முதல் 80 சதவிகிதம் குறைகிறது. ஆய்வின்படி, ஏர் ஃப்ரையர் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் அக்ரிலாமைடு (acrylamide) என்ற வேதிப்பொருளைக் குறைக்கிறது. கூடுதலாக, ஏர் ஃப்ரையரில் உணவுகளை வறுக்கும்போது, சூடானகாற்று உணவைச் சமைக்கச் செய்கிறது, டீப் ஃபிரையிங் உடன் ஒப்பிடும்போது ஏர் ஃப்ரையிங் அதிக சத்துக்களை தக்க வைக்க உதவும்.
மேலும், ஏர் ப்ரையரில் சமைக்கும் போது குறைந்த வெப்ப வெளிப்பாடு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைப் பாதுகாக்க உதவுகின்றன. டீப் ஃப்ரையிங் சமையலுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான மாற்றாக ஏர் ஃப்ரையிங் இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது.உடல் எடையை குறைக்க விரும்புவோரும், எடையை பராமரிக்கும் நபர்களுக்கும் எப்போதும் பொரித்த உணவுகள் ஆகாதவை ஆகும். அப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளை சமைத்து சாப்பிட ஏர் ஃப்ரையர் பயன்படுகிறது. இது மைக்ரோவேவ் ஓவன்களைப் போல் செயல்படக்கூடியது.
அதாவது மைக்ரோவேவ்களை கொண்டு அவன்களில் உணவு சமைக்கப்படுவதைப் போல, ஏர் ஃப்ரையரில் சூடான காற்றைக்கொண்டு உணவு சமைக்கப்படுகிறது. கன்வெக்ஷன் ஹீட்டிங்கில் குறைந்த கொழுப்புடன் கூடிய மொறுமொறுப்பான, மிருதுவான ஸ்நாக்ஸ் வகைகள் தயார் செய்யப்படுகின்றன.இதன் மூலம் பிரெஞ்ச் ஃப்ரைஸ் முதல் ஃப்ரைடு சிக்கன் வரை பல வகையான உணவு வகைகளையும் சமைக்கலாம். இதனாலேயே ஏர் ஃப்ரையர்கள் தற்போது மிகவும் டிரெண்டாகி வருகிறது. அதன் உயர்ந்த பொறியியல் மற்றும் செயல்திறன் காரணமாக சமையலை மிகவும் எளிமையான மற்றும் குறைந்த எண்ணெய் கொண்டதாக தயார் செய்கிறது.
இது ஒரு வெப்பச்சலன அடுப்பு (convection oven) போல செயல்படுகிறது. உள்ளே உள்ள ஒரு ஹீட்டிங் காயில் உணவை சூடாக்குகிறது, மேலும் ஒரு மின்விசிறி (fan) அந்த சூடான காற்றை வேகமாக சுழற்றி குறைந்த எண்ணெயில் அல்லது எண்ணெயே இல்லாமல் உணவை வறுக்க உதவுகிறது.
சமைக்கும் முறை: ஏர் ஃப்ரையர் அதன் உள்ளே சூடான காற்றை வேகமாக சுழற்றுவதன் மூலம் உணவை சமைக்கிறது. இது கிட்டத்தட்ட வறுத்த உணவைப் போன்ற சுவையையும், மிருதுவான தன்மையையும் தருகிறது.
பயன்பாடு: வறுத்த உருளைக்கிழங்கு, சிக்கன், கேக் மற்றும் பலவகையான சிற்றுண்டிகளை சமைக்க இதனைப் பயன்படுத்தலாம்.
ஆரோக்கியம்: டீப் ஃப்ரையர் மூலம் சமைப்பதை விட, ஏர் ஃப்ரையர் மூலம் சமைக்கும்போது எண்ணெயின் பயன்பாடு சுமார் (70%-80%) குறைகிறது, இது ஒரு ஆரோக்கியமான சமையல் முறையாகும்.
பயன்படுத்தும் முறை: உணவை ஏர் ஃப்ரையரின் கூடையில் வைத்து அதை சரியான வெப்பநிலைக்கு அமைத்து, குறிப்பிட்ட நேரத்திற்கு சமைக்க வேண்டும். சமைக்கும் நேரம் மற்றும் வெப்பநிலை உணவின் வகையைப் பொறுத்து மாறுபடும்.எண்ணெயில் பொரித்த வறுத்த உணவுகளை விரும்பி சாப்பிடும் நொறுக்குத்தீனி பிரியர்களுக்கு ஏர்ஃப்ரையர் ஒரு நல்ல மாற்றாக இருக்கும்.
தவிர்க்க வேண்டியவை: இறைச்சி மற்றும் சீஸ் போன்ற உணவுகள் ஏர் ஃப்ரையிங்கில் சமைக்கும் போது அதன் ஊட்டச்சத்து குறையும். ஏர் ஃப்ரையிங் போன்ற டிரை குக்கிங் மெத்தட்ஸ் மூலம் உணவுகள் அதிக வெப்பநிலைக்கு வெளிப்படும்போது, அட்வான்ஸ்டு கிளைகேஷன் எண்ட்-ப்ராடக்ட்ஸ் (AGEs) உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே, இது போன்ற உணவுகளை ஏர் ஃப்ரையரில் சமைப்பது தவிர்ப்பது நல்லது.
தொகுப்பு: ரிஷி