வீட்டு வைத்தியம்!
நன்றி குங்குமம் டாக்டர்
கர்ப்பிணிகள் சுகப்பிரசவம் ஆகச் சாப்பிட வேண்டியவை
ஒன்பதாவது மாதம் முதல் குடிக்க வேண்டிய கஷாயம் சீரகம் அல்லது சோம்பு கஷாயம். ஒரு தேக்கரண்டி சீரகம் அல்லது சோம்பு வெறும் வாணலியில் வறுத்து 2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு கப்பாக வற்றும் வரை கொதிக்கவிட்டு ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி மாலை வேளையில் பருகி வரலாம். தேவைப்பட்டால் பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்.
கறிவேப்பிலைக் காம்பு அல்லது முருங்கைக்காம்பு கஷாயம்
ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலைக்காம்பு அல்லது முருங்கைக்காம்பு வெறும் வாணலியில் வறுத்து 2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு கப்பாக வற்றும் வரை கொதிக்கவிட்டு, ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி மாலை வேளையில் பருகி வரலாம். தேவைப்பட்டால் பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்.
மலச்சிக்கல் சரியாக...
இரவில் திராட்சையை ஊறவைத்து காலையில் அதை மசித்துவிட்டு நீரை அருந்தி வர மலச்சிக்கல் சரியாகும்.
இருமல் - சளி குணமாக...
குப்பை மேனிச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் பற்று இட இருமல் கட்டுப்படும்.
வெந்நீரில் ஒரு தேக்கரண்டி அளவு தேன் கலந்து குடித்து வர இருமல் நிற்கும்.
முருங்கை இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து உள்ளங்கையில் உப்பு சேர்த்து கசக்க முருங்கைச்சாறு வரும். அதனை ஒரு தேக்கரண்டி அளவு குழந்தைகளுக்கு குடிக்கக் கொடுத்தால் அதை குடித்ததும் வாந்தி மூலம் சளி வெளியேறும். அல்லது மலத்துடன் சளி வெளியேறும்.
தேங்காய் எண்ணெயைச் சூடு செய்து அடுப்பை அணைத்து பின், பச்சைக்கற்பூரம் சேர்த்து சூடு பொறுக்க நெஞ்சில் தேய்த்தால் நெஞ்சுச் சளி குறையும். இதனை ஆறவைத்து பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டும் சளி பிடிக்கும் சமயத்தில் நெற்றி, மூச்சு, நெஞ்சுப் பகுதி போன்றவற்றில் தடவி வரலாம்.
வெற்றிலை, மிளகு, சீரகம், பூண்டு இவற்றைத்தட்டி வெந்நீரில் போட்டுக் கொதிக்க விட்டு வடிகட்டி தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிக்க சளி மட்டுப்படும். துளசி, சித்தரத்தை, மிளகு இவற்றை வறுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து அரைபாகத்திற்கு வற்றவைத்து வடிகட்டி குடிக்க சளி தொந்தரவு சரியாகும்.
பழங்கள், காய்கறிகள் போன்றவற்றைச் சமைக்காமல் சாப்பிடப் பழக வேண்டும். சமைக்காத உணவுகளில் மட்டுமே உயிர்சக்தி நிறைந்து இருக்கும். மூன்று வேளையும் முடியவில்லை என்றாலும் ஏதாவது ஒரு வேளை உணவைச் சமைக்காத இயற்கை உணவாக எடுத்துக் கொண்டால் நலமாக இருக்கும். மேலும் எந்த உணவையும் நன்கு மென்று சாப்பிட்டுவந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
தொகுப்பு: ரிஷி