மூலிகை வைத்தியம்
நன்றி குங்குமம் தோழி
தும்பை: சளி, இருமல், தலைவலி, தலைபாரம், நீர்க்கோவை போன்ற பிரச்னைகளை குணப்படுத்த உதவும் சிறந்த மூலிகை. உடல் சூட்டை தணித்து, மலச்சிக்கலை போக்கும். இதை
கஷாயமாக்கி பருகலாம்.
வில்வம்: காய்ச்சல், மஞ்சள் காமாலை, அனீமியா போன்றவற்றிற்கும், காலரா தடுப்பு மருந்தாகவும் பயன்படுகிறது. இதை கஷாயமாக குடிக்கலாம்.
தூதுவளை: தூதுவளையின் இலை, பூ, பழம் என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. தூதுவளை இலைப் பொடியை பாலில் கலந்து குடிக்க இருமல், சளி, ஆஸ்துமா குணமாகும். இதன் பழத்தை நீரில் கலந்து குடித்தால் மலச்சிக்கல் தீரும்.
மஞ்சள் கரிசாலங்கண்ணி: மஞ்சள் காமாலை, கண் கோளாறு, கல்லீரல் கோளாறு போன்றவற்றிற்கு இக்கீரையை சமைத்து சாப்பிட சிறந்தது.
அவுரி இலை: தலைமுடி, சருமம், உடல் உறுப்புகள் அனைத்துக்கும் நன்மை தரும். வயிற்றில் உள்ள எல்லாவிதமான கெட்ட கிருமிகளை அழித்து ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
சிறுகுறிஞ்சான்: ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். பித்தத்தை குறைக்கும். கொழுப்பைக் குறைக்கும். ஆன்டி மைக்ரோபியல், ஆன்டி வைரல் பண்புகளை கொண்டுள்ளது.
முள் முருங்கை: கல்யாண முருங்கை என அழைக்கப்படும். இது பித்தத்தை போக்கி, நரை வராமல் தடுக்கும். காய்ச்சலை குறைக்கும். உடலிலுள்ள வீக்கத்தை குறைக்கும்.
முடக்கத்தான் கீரை: இக்கீரையை அடிக்கடி உணவில் சாப்பிட மூட்டுகளில் ஏற்படும் வலியைக் குறைக்கும்.
தொகுப்பு: எஸ்.மாரிமுத்து, சென்னை.