மாரடைப்பு vs இதய செயலிழப்பு…
நன்றி குங்குமம் டாக்டர்
வேறுபாடு அறிவோம்!
இதயமே… இதயமே… ஹெல்த் கைடு!
இதயம் மற்றும் மார்பக நிபுணர் முகம்மது ரியான் சையது
மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பு: இந்தியாவில் இவ்விரு பிரச்னைகளைப் பற்றியும் தெரிந்து கொள்வது ஏன் முக்கியம்?
இந்தியாவில், பெரும்பாலானோர் தங்களது உயிரை இழப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இதயநோய் இருந்து வருகிறது. அதனால் இதயம் தொடர்பான பிரச்னைகள் குறித்த புரிதல் இன்று நமக்கு மிக அவசியமாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக, மாரடைப்பு [heart attack] மற்றும் இதய செயலிழப்பு [cardiac arrest] இந்த இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்வது அதிக முக்கியத்துவம் பெற்று இருக்கிறது.
இவை இரண்டும் குறித்த புரிதல் என்பது வெறும் மருத்துவம் சார்ந்த ஒன்றாக இல்லாமல், ஒருவருடைய உயிரைக் காப்பாற்ற உதவும் அம்சமாகி இருக்கிறது. மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பு இந்த இரண்டு சொற்களும், பெரும்பாலும் புரிந்து கொள்ளப்படாமல் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. உண்மையில் இவை இரண்டுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. இரண்டும் இடையே இருக்கும் எமர்ஜென்சி சூழல் வேறு. உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் வேறு.
மாரடைப்பு என்றால் என்ன?
மாரடைப்பு (Heart Attack) அல்லது மயோகார்டியல் இன்பார்க்சன் (Myocardial Infarction) என்பது, இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும்போது ஏற்படுகிறது. பொதுவாக கரோனரி தமனிகளில் ஏதாவது ஒன்றில் ஒரு உறைவு அல்லது அடைப்பு உருவாகுவதால் ஏற்படுகிறது. இந்த அடைப்பு, இதய தசைக்கு செல்லும் ஆக்ஸிஜன் விநியோகத்தைத் தடுக்கிறது. இத்தகைய சூழலில் இதய தமனியில் அடைப்பு உள்ளவர்களுக்கு நாம் விரைவாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது திசுக்களில் சேதத்தை ஏற்படுத்துகிறது.
இதன் விளைவாக இப்பிரச்னை உள்ளவர்களுக்கு மார்பு வலி, மூச்சுத் திணறல், வியர்வை, குமட்டல், வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். மேலும் கை, முதுகு அல்லது தாடையை நோக்கி பரவும் அசௌகரியம் உண்டாகலாம். இது போன்ற அறிகுறிகள் இருந்தால், மாரடைப்பிற்கான சிகிச்சைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
இதய செயலிழப்பு என்றால் என்ன?
இதய செயலிழப்பு (Cardiac Arrest) என்பது இதயத்தின் மின் செயல்பாடு திடீரென செயலிழந்து, இதயத் துடிப்பு முழுமையாக நின்றுவிடும் நிலையைக் குறிப்பதாகும். இதயத் துடிப்பு நின்றுவிடுவதால், மூளை மற்றும் முக்கியமான உடல் உறுப்புகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் நின்றுவிடுகிறது. இதனால் இப்பிரச்னையால் பாதிகப்படுபவர்கள், சில நொடிகளில் நிலை குலைந்து, மூச்சுப் பேச்சின்றி, சுய நினைவிழந்துவிடுவார்கள். இத்தகைய சூழ்நிலையில், நாம் மாரடைப்பு சிகிச்சைக்கு எடுத்துக்கொள்ளும் அவகாசம் போல் இதற்கு நேரம் எடுத்து கொள்ள முடியாது. உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அவர்களது நிலைமை மிக மோசமானதாகிவிடும்.
ஒவ்வொரு நொடியும் முக்கியம்
இந்தியாவின் நகர்ப்புறங்களில் அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் கடும் போக்குவரத்து நெரிசல், மேலும் இதன் விளைவாக அவசர சிகிச்சைகளை அளிப்பதில் உண்டாகும் தாமதம் போன்ற சவால்கள் நம் முன்னே இருந்து வருகின்றன. இத்தகைய சூழல், ஒருவர் இதய பாதிப்பினால் உண்டாகும் அவசரநிலையை எதிர்கொள்ள முடியாமல் இறப்புக்கும் வழி வகுத்துவிடுகிறது. மாரடைப்பு ஏற்படும் நிலைகளில், அதற்கான சிகிச்சைகளை குறிப்பாக ஆஞ்சியோப்ளாஸ்டி போன்ற மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொள்ள சில மணிநேர அவகாசம் கிடைக்கலாம்.
ஆனால் இதய செயலிழப்பு உண்டாகும் போது, உடனடியாக CPR மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், ஆட்டோமேடட் எக்ஸ்டர்னல் டிஃபிபிரிலேட்டரை (AED - Automated External Defibrillator (AED)) மிக துரிதமாக பயன்படுத்த வேண்டும். இவை மேற்கொள்ளப்படாவிட்டால், இதய செயலிழப்பினால் பாதிக்கப்பட்டவர் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 10 சதவீதம் குறைந்து கொண்டே இருக்கும்.
ஹைதராபாத்தில் 55 வயதுடைய ஒருவர், மார்புப் பகுதியில் அசௌகரியம் மற்றும் சோர்வை உணரத் தொடங்குகிறார். அவர் அதை அஜீரணத்தினால் உண்டான வாய்வு பிரச்னை என நினைத்து கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார். சில மணிநேரங்களுக்குப் பிறகு, அவர் நிலைகுலைந்து சரிந்து விழுகிறார்.
அவருக்கு ஏற்பட்டிருப்பது மாரடைப்பா அல்லது இதய செயலிழப்பா?
அது மாரடைப்பு என்றால், சரியான நேரத்தில் என்ன பிரச்னை என்பதை அறிந்து, அதற்கேற்ற சிகிச்சையை அளிப்பதன் மூலம் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் அது இதய செயலிழப்பு என்றால், CPR அறிந்த ஒருவர் அவர் அருகில் இருந்தாலோ, AED-ஐ மேற்கொள்ளும் வாய்ப்பு இருந்தாலோ மட்டுமே பாதிப்புக்குள்ளானவர் உயிர் வாழ வாய்ப்பு இருந்திருக்கும்.
எல்லோருக்கும் பொதுவான அறிகுறிகள் இல்லாமலும் போகலாம்.
குறிப்பாக பெண்கள், வயதானவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு அறிகுறிகள் மாறுபடும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். மார்பு வலி இல்லாத போது, இவர்களுக்கு ஏற்படும் கடுமையான சோர்வு, ஜீரணக் கோளாறு போன்ற அசௌகரியங்கள் அல்லது முதுகுவலி போன்றவை இவர்களுக்கு உண்டாகலாம். இந்த அறிகுறிகளை நாம் அதிகமாக தவறாகப் புரிந்து கொள்வதாலோ அல்லது கவனிக்காமல் விட்டு விடுவதாலோ உடனடியாக சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுவிடும்.
மாரடைப்பு ஏற்பட்டால் நாம் செய்ய வேண்டியது என்ன?
ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக அவசர சேவைகளை உதவிக்கு அழைக்கவும். மாரடைப்பு ஏற்பட்டிருக்கும் நபரை பதட்டப்படுத்தாமல், அமைதியாக இருக்க செய்யுங்கள். மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றுங்கள். அவர்களை மருத்துவமனைக்குச் செல்ல வாகனத்தை ஓட்டிச் செல்ல
அனுமதிக்காதீர்கள்.
ஒரு நபர் திடீரென நிலைகுலைந்து சரிந்து விழுந்தால், இதயத்துடிப்பு இல்லாமல், மூச்சு இல்லாமல் போனால் அது இதய செயலிழப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம். இதனால் பாதிப்புக்குள்ளானவருக்கு உடனடியாக CPR-ஐ செய்ய வேண்டும். மேலும் AED-ஐ பயன்படுத்தும் வாய்ப்புகள் இருந்தால், உடனடியாக அதையும் மேற்கொள்ளவும். முறைப்படி செய்யப்படும் CPR-ஆல் ஒரு நபரின் உயிர்வாழும் வாய்ப்பு இரட்டிப்பாக்கலாம் அல்லது மூன்று மடங்காக அதிகரிக்கலாம்.
இந்தியாவிற்கு முன் நிற்கும் சவால்
இந்தியாவில் மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும், CPR பற்றிய போதுமான பொது அறிவு இல்லாதது, பொது இடங்களில் குறிப்பிட்ட அளவே டிஃபிபிரிலேட்டர்களை பயன்படுத்தும் வசதி போன்ற அம்சங்களால் இந்தியா இன்றளவும் போராட வேண்டியிருக்கிறது. கிராமப்புறங்களில், இதய செயலிழப்பு பெரும்பாலும் கண்டுகொள்ளப்படாமலோ, அடையாளம் காணப்படாமலோ இருக்கிறது. நகரங்களில் கூட, இதுபோன்ற அவசரநிலைகளில் திறம்பட செயல்பட மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே பயிற்சி பெற்றுள்ளனர்.
இச்சவாலை எப்படி எதிர்கொள்வது?
இது போன்ற அவசர நிலையை எதிர்கொள்வதற்கேற்ற விழிப்புணர்வு மற்றும் தயார்நிலையை நாம் கட்டமைக்க வேண்டியது அவசியம். அதற்கு, பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் CPR பயிற்சி கண்டிப்பாகப் பயில வேண்டிய ஒன்றாக மாற வேண்டும். மால்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் பெருநிறுவன வளாகங்கள் போன்ற அதிக போக்குவரத்து உள்ள பகுதிகளில் AED-கள் நிறுவப்பட வேண்டும்.
அவசரகாலத்தில் செயல்படும் அமைப்புகள் வேகமாகவும், சிறப்பாகவும், மேலும் எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற வேண்டும்.இதய ஆரோக்கியம் என்பது மருத்துவமனையில் மட்டுமே எதிர்கொள்ளும் ஒன்று அல்ல - அது நம் எல்லோருக்குமான ஒரு பொதுப் பொறுப்பு. மாரடைப்புக்கும் இதய செயலிழப்பிற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்வதன் மூலமும், அந்த முக்கியமான தருணங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அறிந்துகொள்வதன் மூலமும், நாம் ஒவ்வொருவரும் ஆபத்துதவி அளிக்கும் முதல் நபராக மாறலாம். அவ்வாறு செய்வதன் மூலம், நாம் ஒரு உயிரைக் காப்பாற்றலாம். ஒருவேளை நம்முடைய உயிரையும் கூட காப்பாற்ற உதவும்.