அத்திப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர்
அத்திப்பழம் அதன் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ குணங்களுக்காக பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய பழம் என்றும் சொல்லலாம். இது எல்லாவிதமா சீதோசன நிலைகளிலும் வளர்க்கூடியது. மருத்துவ குணம் அதிகமுள்ள அத்திப்பழம் பல நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
அத்திப்பழத்தின் சத்துகள்
அத்திப்பழத்தில் கால்சியம், இரும்புசத்து, மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் பி காம்ப்ளக்ஸ் ஆகியவை நிறைந்துள்ளன. மேலும், இது ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் பைட்டோநியூட்ரியன்களின் நல்ல மூலமாகும். இந்த ஊட்டச்சத்துக்களால் உடல் பல நன்மைகளைப் பெறுகிறது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது
அத்திப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. இது மலச்சிக்கல், கோழை, வாயு போன்ற பிரச்னைகளில் இருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.
எடை இழப்புக்கு உதவுகிறது
அத்திப்பழத்தில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை உண்டாக்கும். எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
எலும்புகள் வலிமையானவை
அத்திப்பழத்தில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் அதிகம் உள்ளது. இது எலும்புகளை வலுவாக்கும். இது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடவும் உதவுகிறது. மூட்டுகளில் வலி உள்ளவர்கள் தொடர்ந்து அத்திப்பழம் சாப்பிட்டு வர மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ரத்த சோகைக்கு தீர்வாகிறது
அத்திப்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, அதை உங்கள் உணவில் ஒரு அங்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.அத்திப்பழத்தை உட்கொள்வது கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. இதில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவகிறது.
சருமத்திற்கு நல்லது
அத்திப்பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் சருமத்தை பளபளப்பாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகளை குறைக்கிறது. மேலும் சருமத்திற்கு பொலிவை தருகிறது.
தொகுப்பு: கவிதா பாலாஜிகணேஷ்