பாலற்ற பெண்பால்
நன்றி குங்குமம் தோழி
மனம் பேசும் நூல்
மனநலம் சார்ந்த பிரச்னைகளைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பேசுவதைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். தொலைக்காட்சிகளில் உளவியல் நிபுணர்களை அழைத்து நேர்காணல் செய்வதாக இருக்கட்டும், குறைந்த விநாடிகளே வரும் ரீல்ஸில் பிரபலங்கள் பேசுவதாகட்டும், யுடியூப் தளங்களில் குழுவாய் அமர்ந்து சமூகம் சார்ந்த உளவியல் தாக்கங்களை உரையாடுவதாக இருக்கட்டும், எங்கு திரும்பினாலும் மனநலம் சார்ந்து, உளவியல் சார்ந்து பேசுவதை தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
தகவல் தொழில்நுட்பம் அதிகரித்திருக்கும் நிலையில், இன்றைய காலக்கட்டத்தில் எது சரி, எது தவறான தகவல் என்று புரிந்து கொள்ளும் அளவிற்கான நேரத்தை, சமூக வலைத் தளங்கள் தருவதில்லை. அதனால்தான் ஒருசில உளவியல் நிபுணர்களும், மருத்துவர்களும், உளவியல் சார்ந்த புத்தகங்களை படிக்கச் சொல்கிறார்கள். இதில் எந்த மாதிரியான புத்தகத்தை படிக்கலாம் என்ற குழப்பம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது.
உளவியல் குறித்து பலதரப்பட்ட புத்தகங்கள் வெளியாகின்ற நிலையில், உலகளவில் மனநல மருத்துவர்கள், நிபுணர்கள் நேர்த்தியான கருத்துக்களை தொகுத்து பல்வேறு நூல்களை வெளியிட்டிருக்கிறார்கள். இனிவரும் நாட்களில், உலக அளவில், மனநலம் சார்ந்த சிறந்த புத்தகங்களின் நூல் மதிப்புரையை இதில் பார்க்கலாம். இதன் மூலம், தனி மனித உளவியல், சமூக உளவியல், மனநோய் சார்ந்த உளவியல் என்ற தலைப்புகளில் தேர்ந்த புத்தகங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
முதல் புத்தகமாக ஆங்கிலத்தில் ‘The Female Eunuch’ என்ற தலைப்பில் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய பெண் எழுத்தாளர் ஜெர்மெய்ன் கிரீர் எழுதியுள்ள நூலை தமிழில் ராஜ்கெளதமன் ‘பாலற்ற பெண்பால்’ என்ற தலைப்பில் அழகான நடையில் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார். இந்த நூல் இரண்டாம் பெண்ணிய அலையின் ஒரு பகுதி. முதல் பெண்ணிய அலையில் பெண்களின் வாக்குரிமை, அரசியலின் பங்கு பற்றி பேசினார்கள்.
இந்த நூலில் பெண்களின் மலட்டுத்தனம், காயடிப்பு, நபும்சகம் ஆகிய சிதைவுகளைப் பற்றி விலாவாரியாகப் பேசுகிறார்கள்.தலைப்பில் Eunuch என்ற சொல், அக்கால அரண்மனையில், செயற்கை முறையில் மாற்று பாலினமாக மாற்றப்பட்ட ஆணைக் குறிக்கும் சொல். அதாவது, தந்தை வழிச் சமூகத்தில், பெண் என்பவளை இயல்பான வாழ்விற்கு ஆசைப்படக்கூட முடியாத அளவில், அவளை பாலற்ற பெண்பாலாக காயடித்து வைக்கப்பட்டிருக்கிறாள் என்பதைப் பற்றி இந்த நூல் பேசுகிறது என்கிறார் நூலாசிரியர்.
இன்றைக்கும் வீட்டிலிருக்கும் பெண்கள், தங்களுடைய அப்பா, அண்ணன், கணவர் என அனைவரும் இருக்கும் சூழலில், உள்ளாடையில் இருந்து அனைத்தும் அணிந்திருக்க வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறாள். வீடு சிறிதாக இருந்தால், பெண் தன் ஆடை சிறிதும் விலகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பெண்ணின் உடல் என்பது உலகம் முழுவதும் அந்தந்த குடும்பங்களின், நிலத்தின் சொத்தாய் பார்க்கப்படுகிறது.
சொத்தாக பெண்களைப் பார்ப்பதால், அவர்களின் உணர்வுகளுக்கும், ஆசைகளுக்கும் ஆண்கள் பெரிய வரைமுறை வைத்திருக்கிறார்கள். பெண்களின் தனிப்பட்ட ஆசையினால் குடும்பம், மதம்
அல்லது அவர்களின் இன கௌரவத்திற்கு களங்கம் ஏற்படாமல் இருக்க, பெண் ஆசைப்படவே கூடாது என்று நம்ப வைத்துவிட்டனர். அதனால்தான், பெண்களின் காதல், பாலியல் ரசனைகள் அனைத்தும் மறைத்து வைக்கப்பட வேண்டுமென்று கூறுகிறார்கள். இரண்டாம் பெண்ணிய அலை, முற்றிலும் முதலாளித்துவ ரீதியில் எந்தளவிற்கு பெண்களை மாற்றமடைய வைத்திருக்கிறது என்று வகை வகையாய் பிரித்து கூறியிருக்கிறது இந்த புத்தகம்.
ஒருவர் இந்த வகையான பாலினத்தைச் சார்ந்தவர் என்பதற்கு அவரது உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் சாட்சியாகும். இதில் சிலர் பெண்களைப் பார்த்து, ‘பொம்பளை மாதிரியா நீ இருக்க..? ஆம்பளை மாதிரியே நடக்குற’ என்பார்கள். உண்மையில், பெண் என்னவாக இருந்தாலும், என்னவாக நடித்தாலும், நிச்சயமாய் உடல்களாக இருக்கிறாள் என்பதே உண்மை.பெண்ணைப் பற்றி வருகின்ற புனைவுகள், கவர்ச்சிகள் அவளுக்கு குழந்தைப் பிறந்ததும், அனைத்தும் குறைந்துவிட்டதாக நம்ப வைக்கப்பட்டது. அதிலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன உளைச்சல், உடல் மற்றும் மன பலவீனம், குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளக்கூடிய தொடர் பணிச்சுமை, மாதவிடாய் பிரச்னை என்று பெண் தன்னை பலவீனமாக, அனைத்தும் துறந்தவளாய் இருக்க நிர்பந்திக்கப்படுகிறாள்.
மேற்சொன்னவற்றிலிருந்து, பெண்ணை இன்னும் விற்பனையாக்கவும், கவர்ச்சியாக்கவும், நுகர்வோர் கலாச்சாரம் பெண்களின் இந்த நம்பிக்கையை முற்றிலும் உடைத்தெறிந்தது. அதிலும் முதலில், Six Point Group என்று இளம் பெண்கள் தங்களுடைய பாலியல் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்த வேண்டுமென்று, ஹேஸல் ஹன்க்கின்ஸ் ஹாலினன் என்பவர் ஆரம்பித்தார். அதனை பெண்களும் ஆதரித்தார்கள். பெண்களின் விடுதலைக்கு குரல் கொடுக்க நாளிதழ்கள், வார இதழ்கள், காட்சி ஊடகங்கள் வெளியாகின. இதில் பெண்களின் உடல் வளைவு, உடல் அழகு, எடை என்று அலங்காரப்படுத்துவதின் முக்கியத்துவம் பேசப்பட்டது. இதற்கு, அன்றைய காலத்தில் கல்லூரிகளில் படிக்கும் பெண்கள் ஆதரவாய் இருந்தார்கள்.
பெண்கள் முதலில் ஆர்வம் காட்டிய விஷயம் தலைமுடி. பெண்களுக்கு கூந்தல் இவ்வளவு இருக்க வேண்டுமென்றும், கை, கால்களில் இருக்கும் முடியை நீக்க வேண்டுமென்று முடிவு எடுத்தார்கள்.கல்லூரிப் பெண்கள் அளித்த ஆதரவினால், சிறுமிகளும் இதில் பாதிக்கப்பட்டனர். பள்ளிக்கு வரும் சிறுமிகள் ஆண், பெண் என்ற வித்தியாசமின்றி விளையாடினார்கள். அவர்களை ‘டாம்பாய் மாதிரி இருக்காதே’ என்று வீடுகளில் சத்தம் போட்டனர்.
மேலும் ஒரு ஆய்வில், சிறுமிகளைப் பற்றி அதிர்ச்சியான தகவலை பெண்கள் குழு சமர்ப்பித்தார்கள். பள்ளிகளில் நன்றாக ஓடியாடி விளையாடும் திறமையான பெண் குழந்தைகள், கோடை விடுமுறைக்கு பின் பள்ளிக்குத் திரும்பும் போது, முழுவதுமாக மாறி வரக் காரணம், அவர்கள் வீட்டில் அடக்க ஒடுக்கமாய் இருக்க வேண்டும் என்று அளித்த பயிற்சி அவர்களை குழப்ப நிலைக்கு தள்ளுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டது.
மேலும் மிக முக்கியமாய், உலகத்தை மாற்ற முடியாத சில நிபுணர்கள்,பெண்களை வைத்து உலகத்தின் தன்மையை மாற்றலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அதில் அவர்கள் குறி வைத்தது பெண்களின் உளவியல் சார்ந்த சிகிச்சை முறைகள். இன்றைக்கும் உளவியலின் தந்தை சிக்மண்ட் பிராய்டு என்கிறோம். அப்படியெனில், உளவியலின் தாய் யார் என்று கேள்வி எழுப்புகிறார்கள்? உளவியலின் தந்தையே இருந்தாலும், அவரும் தந்தைவழிச் சமூகத்தின் படியே பெண்களின் சிகிச்சையை வழிவகுத்திருக்கிறார் என்கிறது இந்தப் புத்தகம்.
தந்தை வழிச் சமூகத்தில், பெண்களின் உணர்வுகள் அடக்கப்பட்டு, தேவைகள் நிறைவேற்ற முடியாத சூழலில் வாழ்கிறார்கள். வீடுகளில் பெண்களின் உழைப்புச் சுரண்டலாக இருக்கிறது. இதனால் பெண்களுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டு உளவியல் ரீதியாய் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், உளவியல் சார்ந்த சிகிச்சை தேவை என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது. இதில் உளவியல் சார்ந்த சிகிச்சைகள் விற்பனையாக்கப்பட்டது.
அதிலும், பெண்கள் சந்தோஷமாக இல்லையென்றும், அவர்களின் இளமை, ஆசை, கனவு எதுவுமே முறையாக செயல்படுத்தவிடவில்லை. இதற்கு மாற்றாய், உளவியல் ரீதியாக பெண்களை சிந்திக்க வைக்கவும் தொடங்கினார்கள். விளைவு, உளவியல் சார்ந்த சிகிச்சைகள், நுகர்வோர் கலாச்சாரம், ஊடகங்கள் என்று பெண்களின் எண்ணங்களையும், ஆசைகளையும் வெளிப்படுத்த உந்துதலாக இந்த மாற்றங்கள் அமைந்தது.
உலகை மாற்ற வேண்டுமென்று நினைக்கும் பொழுது, அதில் பெண்களே மிகப்பெரிய சக்தியாக இருக்கிறார்கள் என்பதை இந்த புத்தகம் படிக்கும் போது தோன்றியது. ரீல்ஸ் மற்றும் சமூக ஊடகங்கள் மட்டுமில்லாமல், அழகு சாதனங்களின் பயன்பாடு, உடல் சார்ந்த கவனிப்பு, கர்ப்பகால போட்டோ ஷூட் என பெண்கள் விதவிதமாய் களமிறங்கி, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பெருக்க ஊடகங்களும், இலக்கியமும் மிகப்பெரிய பங்கினை செய்து கொண்டிருக்கிறது.பெண்களை சமூகம் என்னதான் அடக்கி வைத்தாலும், பெண்களால் உலகம் முழுவதும் பல்வேறு விஷயங்களை நேர்த்தியாக மாற்ற முடிகிறது என்பதே ‘பாலற்ற பெண்பால்’ புத்தகத்தின் சாராம்சமாகும்.
மனநல ஆலோசகர்: காயத்ரி மஹதி,