தாமதமாக திருமணம் செய்யும் பெண்களுக்கு ‘Egg Freezing’ ஒரு வரப்பிரசாதம்!
நன்றி குங்குமம் தோழி
திருமணமாகி ஆறு மாதமாகிவிட்டால் உற்றார், உறவினர்கள் அந்த தம்பதிகளை பார்த்து கேட்கும் ஒரே கேள்வி ‘விசேஷம் உள்ளதா’ என்பதுதான். காலங்கள் மாறினாலும், இந்தக் கேள்வி மட்டும் மாறவே இல்லை. இன்று நாம் வாழும் சூழல், வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், தாமதமாக திருமணம் செய்வது போன்ற பல காரணங்கள் குழந்தையின்மைக்கு வழிவகுக்கிறது. இவை அனைத்திற்குள் ஒரு தீர்வாக அமைந்துள்ளது கருமுட்டை உறைதல் முறை (Egg Freezing). கருமுட்டையினை யார், எந்த வயதுடையவர்கள் உறைய வைக்கலாம் மற்றும் IVF முறையில் எவ்வாறு கருத்தரிக்கலாம் என்பது குறித்து விளக்கம் அளிக்கிறார் கருவுறுதல் நிபுணரான டாக்டர் ஷைலா உஸ்மான் அலி.
‘‘ஒரு பெண்ணுடைய கருமுட்டையை எடுத்து அதை உறை நிலையில் வைப்பதுதான் கருமுட்டை உறைய வைக்கும் சிகிச்சை. ஒரு பெண் வயதிற்கு வந்த காலத்தில் இருந்தே அதனை உறை நிலையில் வைக்க முடியும். புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் தாமதமாக திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண்களுக்கு இது ஒரு நல்ல தீர்வாக இருக்கும். இயற்கையாகவே 30 வயதிற்கு மேல் ஒரு பெண்ணிற்கு கருவுறுதல் குறைய ஆரம்பிக்கும். மேலும், கருமுட்டையின் வயது அதிகரிப்பதால் அதன் தரமும் குறையும். இன்று பெண்கள் பலர் மேற்படிப்பு படிக்கிறார்கள். வேலையில் ஒரு நிலைக்கு வந்த பிறகு திருமணம் செய்து கொள்கிறார்கள். 30 வயதினை கடந்த பிறகுதான் திருமணம் பற்றி சிந்திக்கிறார்கள்.
சிலருக்கு குடும்ப வரலாறும் கருத்தரிப்பில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. சித்தி, பெரியம்மா என அம்மா வழி உறவினர்கள் 40 வயதிலேயே மெனோபாஸ் நிலையை அடைந்திருப்பார்கள். அப்படிப்பட்ட குடும்பத்தில் உள்ள இளம் வயது பெண்கள் இதனை மேற்கொள்ளலாம். 40 வயதிற்கு மேல் குழந்தைப் பேறு பெறும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு டவுன்சிண்ட்ரோம் போன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
கருமுட்டையினை சேகரிப்பதால் ஒரு பெண்ணின் கருமுட்டையின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படாது. ஒரு மாதவிடாய் சுழற்சியில் வெளியாகும் கருமுட்டையைதான் உறைய வைக்கிறோம். அதனால் அவர்களுக்கு அடுத்த மாதவிடாய் சுழற்சியில் எப்போதும் போல் கருமுட்டைகள் வெளியேறும். அதில் எந்த மாற்றமும் இருக்காது’’ என்றவர் கருமுட்டை சேகரிப்பு குறித்து விவரித்தார்.
‘‘ஒரு பெண் ஒரு குழந்தை வேண்டும் என்று நினைத்தால் அவர்கள் குறைந்தபட்சம் 10 முதல் 15 கருமுட்டைகளை உறை நிலையில் வைத்திருக்க வேண்டும். அதுவே இரண்டு குழந்தைகள் என்றால் 20 முதல் 30 கருமுட்டைகளை எடுக்க வேண்டும். அதனை முதல் ஐந்து வருடத்திற்குள் பயன்படுத்த வேண்டும். தரமான மற்றும் வளர்ந்த நிலையில் உள்ள கருமுட்டைகளை மட்டுமேதான் சேமிக்க வேண்டும். அதாவது, மாதவிடாயின் இரண்டாவது நாளில் கருமுட்டைகள் வளர ஊசி மூலம் ஹார்மோன்கள் செலுத்தப்படும். அது முட்டையின் வளர்ச்சியை மேம்படுத்தும். அதில் நன்கு வளர்ச்சி அடைந்திருக்கும் முட்டைகளை மட்டுமே சேகரிக்க வேண்டும்.
இது ஒரு இருபது நிமிட பிராசஸ். மயக்க மருந்து கொடுத்து செய்வதால், கருமுட்டை எடுத்த பிறகு மயக்கம் தெளிந்தவுடன் அவர்கள் வீட்டிற்கு சென்று விடலாம். மருத்துவமனையில் தங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மயக்க மருந்து கொடுத்து செய்வதால், ஒருவர் தங்களின் கருமுட்டையை உறைய வைக்கும் போது அதற்கான அடிப்படை ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கு ரத்தக் கொதிப்பு, ரத்தத்தின் அளவு, தைராய்டு, நீரிழிவு பிரச்னை, ECG என அனைத்து ஆய்வுகளும் மேற்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கருமுட்டையின் தன்மையை கண்காணித்த பிறகுதான் ஹார்மோன் ஊசி போடுவோம். இதனால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. உறைய வைக்கப்பட்ட கருமுட்டையினை IVF முறையில் தான் பயன்படுத்த முடியும்’’ என்றவர் அது குறித்தும் விளக்கம் அளித்தார்.
‘‘கருமுட்டையினை உறைய வைப்பது பெரும்பாலான பெண்கள் தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்ள நினைப்பவர்கள் என்பதால், அவர்களுக்கு IVF சிகிச்சைதான் சிறந்தது. வயதிற்கு ஏற்பதான் கருத்தரிப்பின் சதவிகிதம் அமையும். 40 வயதில் கருமுட்டையினை உறைய வைத்திருப்பவர்களை விட 25 வயதிலேயே உறைய வைத்திருப்பவர்களுக்கு IVF சிகிச்சையின் சக்சஸ் ரேட் அதிகம்.
முதலில் உறை நிலையில் உள்ள முட்டைக்குள் கணவரின் விந்தினை செலுத்தி அந்த கரு வளர்ச்சியடைந்த பிறகு பெண்ணின் கருப்பைக்குள் செலுத்த வேண்டும். ேமலும் இவ்வாறு கருத்தரிப்பவர்களுக்கும் நார்மலா கருத்தரிப்பவர்களுக்கும் உடல் நிலையில் எந்த மாற்றமும் இருக்காது. சில சமயம் ரத்தக்கசிவு ஏற்படும். அந்த நேரத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மற்றபடி அவர்கள் தங்களின் அன்றாட வேலைகளில் ஈடுபடலாம். கருமுட்டை சேகரித்திருந்தாலும், சிலர் இயற்கை முறையில் கருவுறுவார்கள். அந்த நிலையில் அந்த முட்டை வேண்டாம் என்று சொன்னால், நாங்க அதனை முழுமையாக அழித்துவிடுவோம்.
மேலும், அவ்வாறு சேகரிக்கப்படும் கருமுட்டையினை அந்தப் பெண் மட்டுமே பயன்படுத்த முடியும். அதை மற்ற பெண்ணிற்கு தானமாக தரமுடியாது. கருமுட்டை தானத்திற்காக அரசால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் உள்ளன. அதன் மூலமாகத்தான் கருமுட்டையினை பெற முடியுமே தவிர ஒரு தனிப்பட்ட நபரிடம் இருந்து பெற முடியாது. உறவினரே இருந்தாலும், அவ்வாறு கொடுக்க முடியாது.
காரணம், பிற்காலத்தில் அந்தக் குழந்தைக்கு ஜெனிடிக் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. அதன் காரணமாக அரசு அவ்வாறு வழங்குவதற்கு தடை விதித்துள்ளது. மீறி வழங்குவது சட்டத்திற்கு முரணானது. கருத்தரிப்பதில் பிரச்னையுள்ள பெண் வங்கியில் தனக்கு கருமுட்டை தானம் வேண்டும் என்று பதிவு செய்ய வேண்டும். அவரின் ரத்த வகை மற்றும் உடல் நிலைக்கு ஏற்ற கருமுட்டையினை மருத்துவரின் ஆலோசனையில் பெற்றுக் கொள்ளலாம்.
கருமுட்டை கருத்தரிப்பது குறித்து பலருக்கு விழிப்புணர்வு இல்லை. காரணம், IVF சிகிச்சை மூலம் தாமதமாக கருத்தரிக்கலாம் என்று பெண்கள் நினைக்கிறார்கள். ஆனால், வயது அதிகரிக்கும் போது கருத்தரிப்பதற்கான சதவிகிதம் குறைய வாய்ப்புள்ளது.
மேலும், கருமுட்டையின் அளவு குறைந்தால் அவர்கள் டோனரை அணுக வேண்டிய நிலை ஏற்படும். கருமுட்டையை 25 வயதிலேயே சேகரித்து வைத்துக் கொண்டால், 30 வயதிற்கு மேல் கருத்தரிக்கும் போது, அதன் சக்சஸ் ரேட்டும் அதிகமாக இருக்கும்.
கரு முட்டையினை சேகரிக்கும் மையங்கள் நகரங்களில் நிறைய இடங்களில் உள்ளன. இதற்கான வசதி பெரும்பாலும் IVF சிகிச்சை மையங்களில் இருப்பதால், அவர்கள் மகப்பேறு நிபுணர்களின் அறிவுரையின் பேரில் தங்களின் கருமுட்டையினை உறைநிலையில் வைத்துக் கொள்ளலாம்’’ என்று ஆலோசனை வழங்கினார் டாக்டர் ஷைலா உஸ்மான் அலி.
தொகுப்பு: நிஷா