துல்கர் சல்மான் ஃபிட்னெஸ்!
நன்றி குங்குமம் டாக்டர்
2012ம் ஆண்டு வெளியான செக்கண்டு சோவ் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் துல்கர் சல்மான். இவர், மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டியின் மகன் ஆவார். முதல் படம் வெற்றியை கொடுக்க, அதை தொடர்ந்து தீவரம், பட்டம் போலே, சலலாஹ் மொபிலஸ், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். பின்னர், 2015 இல் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான வாயை மூடி பேசவும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ஓகே கண்மணி, நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகையர் திலகம், ஹனு ராகவபுடி இயக்கத்தில் சீதா ராமம் போன்ற படங்கள் இவருக்கு ரசிகர்களின் மத்தியில் ஓர் அங்கிகாரத்தை கொடுத்தது. அதைத் தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நடித்து அனைத்து ரசிகர்களின் ஆதரவையும் பெற்று, பான் இந்திய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தீபாவளி ரிலீஸாக வெளியான லக்கி பாஸ்கர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து, புறநானூறு என்ற படத்தில் நடித்துவருகிறார். இவர், தனது ஃபிட்னெஸ் ரகசியங்களை பகிர்ந்துகொள்கிறார்.
ஒர்க்கவுட்ஸ்: சிறு வயது முதலே அப்பா உடற்பயிற்சி செய்வதை பார்த்து வளர்ந்தவன் நான். அதனால் சிறுவயது முதலே உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி அவசியம் என்பதை உணர்ந்துள்ளேன். உதாரணமாக, வலி இல்லாமல் எந்த ஆதாயமும் இல்லை என்று சொல்லலாம். அதனால்தான், சூட்டிங் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் தினசரி ஓர்க்கவுட்ஸ் எப்பவும் தவற விடமாட்டேன். கார்டியோ பயிற்சியில் தொடங்கி அனைத்து பயிற்சிகளையும் மேற்கொள்ளுவேன். ஒர்க்கவுட்டில் கார்டியோ பயிற்சி, எடை பயிற்சி மற்றும் டிரெட்மில் ஸ்பிரிண்ட்ஸ் போன்றவை இருக்கும். மேலும், கால்களுக்கு வலு சேர்க்கும் உடற்பயிற்சி செய்வதையும் வாரத்தில் ஆறு நாட்களும் செய்கிறேன்.
இது தவிர, ஓட்டம், நடைபயிற்சிகளும் மேற்கொள்ளுவேன். பின்னர், யோகா, தியானம் போன்றவற்றையும் தினமும் மேற்கொள்கிறேன். யோகா, தியானம் இரண்டும் என்னுடைய உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், மன ஆரோக்கியம், தோல் பராமரிப்பு, முடி பராமரிப்பு ஆகியவற்றை நிர்வகிக்க உதவுகிறது. இதுதவிர, ஒரு படம் கமீட் ஆகும்போது, அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு உடற்பயிற்சிகளை மாற்றி அமைத்துக் கொள்வேன். அந்த வகையில், ஒரு படத்திற்காக சுமார் 6 கிலோ மீட்டர் வரை நடைபயிற்சியும் செய்திருக்கிறேன்.
டயட்: காலை காபி வாசனை வந்தால்தான் பெட்டைவிட்டே எழுந்திரிப்பேன். பின்னர், உடற்பயிற்சி செல்வதற்கு முன் வாழைப்பழம், ஆப்பிள் எடுத்துக் கொள்வேன். உடற்பயிற்சி முடித்த பின் புரோட்டீன் ஷேக் எடுத்துக் கொள்வேன். அடுத்தபடியாக, காலை உணவாக அவித்த முட்டை கட்டாயமாக இருக்கும். இது தவிர இட்லி, வெண்ணெய் போன்றவற்றை எடுத்துக்கொள்வேன். பால் பொருட்கள் எதுவும் சாப்பிடுவதில்லை. வெள்ளை சர்க்கரையையும் தவிர்த்து விட்டேன். மதிய உணவாக, புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்கிறேன்.
இரவு உணவை பொருத்தவரை, மிகவும் லேட்டாகதான் சாப்பிடுகிறேன். இது ஆரோக்கியமில்லையென்றாலும், சூழல் அப்படி அமைந்துவிடுகிறது. இது தவிர எனக்கு பிடித்த உணவு என்றால், அசைவம் விரும்பி சாப்பிடுவேன். அதில் பிரியாணிதான் என்னுடைய ஆல்டைம் பேவரட் என்றே சொல்லலாம். அந்தளவிற்கு பிடிக்கும். இது தவிர, சிக்கன். மீன் இறால் போன்றவற்றையும் விரும்பி சாப்பிடுவேன். மற்றபடி உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள அவ்வப்போது தண்ணீர் நிறைய குடிப்பேன். இரவு தூக்கத்தைப் பொருத்தவரை 6-7 மணி நேரம் தூக்கம் குறையாமல் பார்த்துக் கொள்கிறேன். இவைகள் அனைத்தும் தான் எனது ஃபிட்னெஸ் ரகசியங்கள் ஆகும்.
தொகுப்பு: ஸ்ரீதேவிகுமரேசன்