தீபாவளி செய்திகள்!
நன்றி குங்குமம் தோழி
தீபாவளி அன்று விடியற்காலையில் எண்ணெய் தேய்த்து நீராடுவதை ‘அபயங்கனம்’ என்பர். இந்த நீரில் அன்று கங்கை வாசம் செய்வதாக ஐதீகம். ஒரு சிலர் தீபாவளிக்கு முதல் நாள் பெரிய தவளையில் நீர் நிரப்பி அதில் ஆல், அத்தி, புரசு, மாவிலங்கை போன்ற மருத்துவ குணம் கொண்ட மரப்பட்டைகளை ஊறவைத்து, மறுநாள் காலை கொதிக்க வைத்து, நீராடும் நீரில் கலந்து நீராடுவர். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இந்த வழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது.
குமாவோன் மலைகிராமங்களில் தீபாவளி அன்று வீடுகளில் ரங்கோலிகள் போடப்படுகின்றன. அரிசி மாவு, வண்ணங்கள் கலந்து போடப்படும் கோலங்களை பெண்கள் கற்பூரம் ஏற்றி வழிபடுகிறார்கள். சந்தனத்தால் செய்யப்பட்ட லட்சுமி திருஉருவச் சிலையை தாமிரத்தட்டில் வைத்து கரும்புச் சாறால் அபிஷேகம் செய்கிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் அன்று பூனைகளுக்கு வழிபாடும், படையலும் உண்டு. அவர்கள் பூனைகளை லட்சுமியின் அம்சமாக கருதுகிறார்கள்.
பாரம்பரிய தீபாவளி லேகியம்
சுக்கு, சீரகம், மிளகு தலா 15 கிராம், ஓமம் - 10 கிராம், கண்டந்திப்பிலி, சித்தரத்தை, பரங்கிச் சக்கை - தலா 2 கிராம், கிராம்பு - 3, அரிசித் திப்பிலி - ஒரு துண்டு. இவை எல்லாவற்றையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து, பொடித்து சலிக்கவும். 2 பேரீச்சங்காயை விதை நீக்கி பொடியாக நறுக்கவும். கிஸ்மிஸ், திராட்சை, வெல்லம் தலா - 50 கிராம், நெய் - 100 மி.லி.
செய்முறை: நெய்யை சூடாக்கி பேரீட்சை, கிஸ்மிஸ் போட்டு பொரிந்ததும் எடுத்து விடவும். பின் வறுத்து பொடியை சேர்க்கவும். வெல்லம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி பாகு வைத்து வடிகட்டி, பொடியை கலவையில் சேர்க்க ெகட்டிப்படும். இதை இறக்கி நன்கு ஆறியதும் காற்றுப்புகாத பாட்டிலில் ஊற்றி, உபயோகிக்கலாம்.
தொகுப்பு: மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.