கவுன்சலிங் ரூம்
நன்றி குங்குமம் டாக்டர்
மருத்துவப் பேராசிரியர் முத்தையா
எனது அம்மாவின் பெயர் வசந்தா. நாங்கள் ஹோட்டல் வைத்து இருக்கிறோம். எனவே பாத்திரம் அதிகமாக விலக்க வேண்டிய வேலை உள்ளது. பாத்திர பவுடர் வாங்கி தான் பாத்திரம் விலக்குகிறோம். சுமார் 1.30 மணி நேரம் பாத்திரம் விலக்க வேண்டியுள்ளது. அப்படி தொடர்ந்து பாத்திரம் விலக்குவதால் என் அம்மாவின் காலில் சேற்றுபுண் போன்று இருக்கிறது. தற்போது காலின் விரலில் நிறைய தசை இல்லை. சேற்றுபுண் காலில் எல்லா விரல்களிலும் இருக்கிறது. அதிக தண்ணீரில் இருப்பதால் சேற்றுபுண் போன்று வருகிறதா? இல்லை பாத்திர பவுடர்களினால் ஏற்பட்டிருக்குமோ? இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்?
- கிருஷ்ணகுமார், நாமக்கல்.
காலில் சேற்றுபுண் வருவதற்கு முக்கிய காரணம் அதிக நேரம் தண்ணீரில் இருப்பதால்தான். மழை காலங்களில் பல பேருக்கு இந்த சேற்றுபுண் பிரச்னை இருக்கும்.காலை அதிக நேரம் தண்ணீரில் வைத்திருந்தால் சேற்றுபுண் வரும். அதிக நேரம் தண்ணீரில் பாத்திரங்கள் விலக்கும் போது சேற்றுபுண் ஏற்படும். ஆதலால் ஒரே நேரத்தில் எல்லா பாத்திரங்களையும் விலக்கி முடித்துவிடவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரில் உட்காந்து விலக்கக்கூடாது.
தண்ணீரில் இருந்து வேலையை முடித்து விட்டு காலை மென்மையான துணியை கொண்டு ஈரம் இல்லாமல் விரல்களுக்கு இடையில் துடைக்கவேண்டும்.பிறகு சேற்றுபுண் வராமல் இருக்க அதற்கான பவுடர்களை காலில் வைத்துவந்தால் சேற்றுபுண் வராது.சர்க்கரை நோய் உள்ளவர்கள் காலில் சேற்றுபுண் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.ஏனென்றால் அவர்களுக்கு அதிக அளவு சேற்றுபுண் ஏற்படும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தண்ணீரில் அதிக நேரம் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். காலில் எண்ணெய் பசை இல்லையென்றால் குதிகாலில் வெடிப்பு ஏற்படும்.உடலின் எடை அதிகமாக இருந்தாலும் காலில் வெடிப்பு ஏற்படும்.
வெடிப்புகளில் சுத்தம் செய்யும் பிரஷ் வைத்து சுத்தம் செய்யலாம். வெதுவெதுப்பான தண்ணீரில் காலை வைத்து பிரஷ்ஷை வைத்து சுத்தம் செய்து, அதற்கான களிம்பை வைத்து சரிசெய்யலாம். பாத்திர பவுடர் பயன்படுத்துவதால் அதில் உள்ள கெமிக்கல் காரணமாக அலர்ஜி ஏற்படும். கை,காலில் கொப்புளங்கள் போல வந்து உடைந்து புண் ஆகலாம். காலில் வறட்சி ஏற்பட்டு கோடுகோடாக உருவாகும். குதிகால் வெடிப்பு இதனால் வராது.
கைவிரல், காலில் விரல்களுக்கு இடையில், உள்ளங்காலில் கருப்பாக தடிமனாக இருக்கும். பிறகு அரிப்பு ஏற்பட்டு சொரியும்போது, புண்ணாக மாறும்.கெமிக்கல் பயன்படுத்துவதால் அது காலில் உள்ள எண்ணெய் பசையை குறைத்து புண்ணை உருவாக்கும். தொடர்ந்து கெமிக்கல் பாத்திர பவுடர் பயன்படுத்தினால் காலில் சீல்வைத்து விடும். காலில் சீல் வைக்காமல் இருக்க காலில் மஞ்சள் வைக்கலாம். தோல் மருத்துவரிடம் சென்று அதற்கான களிம்பு, பவுடர், மாத்திரை மூலம் சரிசெய்து விடலாம்.
எனக்கு 50 வயதாகிறது. மெனோபாஸ் துவங்கிவிட்டது. எப்போதும், உடல் மிகவும் சோர்வாக உள்ளது. நான் சப்ளிமெண்ட்டுகள் எடுத்துக்கொள்ளலாமா? எனில், எந்தெந்த சப்ளிமெண்ட்கள் எனக்குத் தேவை?
- சி.எஸ்.வந்தனா, கரூர்
மெனோபாஸ் என்பது பெண்களின் மாதவிடாய் முழுவதுமாக நிற்கும் ஒரு காலநிலை. இது பொதுவாக பெண்களுக்கு 45 முதல் 50 வயதினில் ஏற்படும். இந்த மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால், பெண்களுக்கு பலவிதமான மன மற்றும் ரத்த நாளங்கள் சார்ந்த அறிகுறிகள் தோன்றும். ஈஸ்ட்ரோஜன் வெளியேற்றத்தால் மன அழுத்தம், சோர்வு, எரிச்சல், துக்கமின்மை, அதிக அளவிலான வியர்வை போன்றவை ஏற்படும். இந்த தருணங்களில் குடும்பத்தினரின் ஆதரவும் மற்றும் அவர்களின் ஒத்துழைப்பே சிறந்த மருந்தாகும். தினமும் வைட்டமின்-இ 400 எடுத்துக்கொள்வது சூடான நீர்த்துளிகளை அகற்றுகிறது. வைட்டமின்-டி மற்றும் கால்சியம் எலும்பு இழப்பை தடுகிறது.
குணசிங்கி சாறு மனநல உயர்த்தியாக பயன்படுகிறது. கடுமையாக பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு மட்டும் ஹார்மோன் மாற்றுசிகிச்சை செய்யப்படுகிறது. இத்துடன் தினமும் ப்ரிமரின் (PREMARIN) 0.625mg அல்லது 1.25mgs போன்ற ஈஸ்ட்ரோஜன்கள் மற்றும் மெட்ராக்ஸி ப்ரோகெஸ்ட்ரோன் (MEDROXYPROGESTRONE) ஒவ்வொரு சுழற்சியின் கடைசி 10 நாட்களுக்கு கொடுக்கப்படுகிறது.
என் வயது 37. எனக்கு கடந்த சில வருடங்களாக சைனஸ் பிரச்னை உள்ளது. சைனஸ் பிரச்னை ஏன் ஏற்படுகிறது? இதற்கு இயற்கையான வழிமுறைகளில் தீர்வு உண்டா?
ஆர்.பாரத்குமார், சேலம்.
சைனஸ் என்பது நமது மூக்கில் உள்ள முக்கிய காற்றறை பைகள். சைனஸில் எப்போதும் திரவம் சுரந்து கொண்டே இருக்கும். இதனால் உள் நுழையும் வெப்ப காற்றை ஈரப்படுத்தி அனுப்பும் பணியை இது செய்கிறது. இந்த சைனஸ் அறைகளில் திரவம் வரும் வழி அடைக்கப்பட்டு அந்த இடத்தில் திரவம் தேங்கும் போது சைனஸ் பிரச்சனை வருகிறது. பாக்டீரியா, வைரஸ் தொற்றால் ஏற்படும் சளி, சுற்றுச்சூழல் மாசு, அலர்ஜி போன்ற காரணங்களால் சைனஸ் தொல்லை ஏற்படலாம். அடிக்கடி தும்மல், மூக்கு ஒழுகுதல், தலைவலி போன்றவை சைனஸிற்கான பொதுவான காரணங்கள்.
சைனஸ் பிரச்சனைக்கு சித்த மருத்துவத்தில் தீர்வாக நசியம் எனும் மூக்கில் நீர் விடுதல் முறை செய்யப்படுகிறது. இந்த மூலிகை சொட்டு மருந்து முறை மூலமாக, மூக்கின் வழியே சளி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. மருத்துவர் ஆலோசனையுடன் சுக்குத் தைலம், சிரோபார நிவாரணத் தைலம், பீனிசத் தைலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதில் நல்ல முன்னேற்றம் தென்படும். சீந்தில் எனும் சித்த மருத்துவ தாவரத்திலிருந்து எடுக்கப்படும் மருந்தும் சிறந்த தீர்வாக அமையும்.இது மட்டுமல்லாது நீர்க்கோவை மாத்திரையை ஆவி பிடித்தலும் சிறந்த தீர்வுதான்.
சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் அதிக குளிர்ச்சியாகவோ, சூடாகவோ உணவு வகைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. பனியில் அதிகம் அலையாமல் இருப்பதும், புகை பிடித்தலை தவிர்த்தலும் வேண்டும். மேலும் முறையான மூச்சுப்பயிற்சியின் மூலமும் இதற்குத் தீர்வு காணலாம்.
என் பெயர் ஜெயலட்சுமி, வயது 45. நான் உயரத்துக்கு ஏற்ற எடையுடன் இருக்கிறேன். ஆனால் தொப்பை சற்று உள்ளது. சமீபமாக தினமும் காலையில் எழுந்ததும் இடுப்புப் பகுதியும், முதுகும் வலிக்கின்றன. முதுகெலும்பு இறுக்கமானது போல உணர்கிறேன். இது ஏதாவது பிரச்னையா? இதற்கு என்ன தீர்வு?.
- ஜெயலட்சுமி, திருச்சி.
பொதுவாக, பருவநிலைகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படும் போது, காலையில் எழுந்ததும் சிலருக்கு முதுகெலும்பு வலியும், முதுகெலும்பு இறுக்கமானது போன்ற உணர்வு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. போதுமான அளவு ஓய்வு எடுப்பதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்தலாம். தசைப்பிடிப்பு, வைட்டமின் டி குறைபாடு, முன்கூட்டியே ஏற்படும் மெனோபாஸ் (Early menopause) சர்க்கரை நோய், ஸ்பான்டிலைட்டிஸ் (Spondylitis) எனும் முதுகெலும்பு பிரச்னை போன்றவற்றின் அறிகுறியாகவும் இது இருக்கக்கூடும்.
உங்கள் பி.எம்.ஐ அளவு சரியாக இருந்தாலும் உங்களுக்கு தொப்பை இருக்கிறது என்கிறீர்கள். காலையில் எழும்போது எல்லா தசைகளும் தளர்ந்து இருக்கும். முதுகெலும்பை வயிற்றுப்பகுதியின் தசைகளும் முதுகின் தசைகளும் சேர்ந்தே தாங்குகின்றன. தொப்பையில் அதிகத் தசைகள் இருப்பதால், உங்கள் உடலின் நிலை மாறுபட்டு, முதுகெலும்பு முன்பக்கமாக அழுத்தம் பெற வாய்ப்புள்ளது. அப்போது தொப்பையால் அதிக அழுத்தம் தரப்படும். இதுவும் காலையில் முதுகு வலி ஏற்படுவதற்கும் முதுகுத்தண்டு இறுக்கமானதாக தோன்றுவதற்கும் காரணம். இதுவே, முதுகு மற்றும் இடுப்புவலிக்குக் காரணமாக இருக்கக்கூடும்.
வாரத்துக்கு நான்கைந்து நாட்களுக்காவது தினமும் அரைமணி நேரம் நடைப்பயிற்சி செய்வது, முதுகுத்தசைகளை வலுவாக்கும் உடற்பயிற்சிகள் செய்வது, தொப்பை குறைப்புக்கான பயிற்சிகள் செய்வது, தொப்பையைக் குறைப்பதற்கான டயட்டில் ஈடுபடுவது போன்றவற்றின் மூலம் இதற்கு தீர்வு கிடைக்கும். உங்களுக்கு எலும்பு தேய்தல் போன்ற வேறு ஏதேனும் தீவிரமான பிரச்சனை உள்ளதா என்று டாக்டரிடம் பரிசோதித்துக்கொள்வது நல்லது.