புற்றுநோய்க்கு தடுப்பூசி… ரஷ்ய கண்டுபிடிப்பின் உண்மை என்ன?
நன்றி குங்குமம் டாக்டர்
புற்றுநோயியல் நிபுணர் பிரசாத் ஈஸ்வரன்
உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், எளிதில் குணப்படுத்திவிடலாம். ஆனால், புற்றுநோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டால், அதன் தாக்கத்தை ஓரளவு குறைக்க முடியுமே தவிர பூரணமாக குணப்படுத்துவது சற்று கடினம்தான். இதனாலேயே இன்றளவும் புற்றுநோயினால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இந்நிலையில், ரஷ்யா கண்டுபிடித்துள்ள புற்றுநோய் தடுப்பூசி மருத்துவத்துறையில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில், தடுப்பூசி குறித்த விவரங்களை ரஷ்யா அறிவித்துள்ளது. தற்போது இது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஷ்யா கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பூசி என்ன மாதிரியானது. எந்தெந்த புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கிறது. இதை யாரெல்லாம் பயன்படுத்தலாம். போன்ற தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பிரசாத் ஈஸ்வரன்.
புற்றுநோய் என்றால் என்ன?
புற்றுநோய் என்பது நமது உடலில் இருக்கும் சாதாரணமான செல்களில் ஏற்படும் திடீர் மரபணு மாற்றத்தினால் சாகாவரத்தோட இருக்கிற தன்மை கொண்டுவிடும். இதனால் அந்த செல்களுக்கு வளரத் தெரியும். வளரத் தொடங்கியதும் பரவத் தொடங்கிவிடும். அதாவது செல்கள் வளரத் தொடங்கியதும் கட்டுப்பாடற்று வளர்ந்து மற்ற உறுப்புகளுக்கும் பரவிவிடும். இந்தப் பெருக்கம் உறுப்புகளின் இயக்கத்தைத் தடுத்து, நோயின் அபாயத்தை ஏற்படுத்துகிறது. இந்த செல்களின் அபரிமிதமான வளர்ச்சியைத்தான் புற்றுநோய் என்கிறோம்.
இது எந்த உறுப்புகளில் வருகிறதோ அதை புற்றுநோயாக கருதுகிறோம். அதாவது வாயில் ஏற்பட்டால் வாய்ப்புற்றுநோய் என்கிறோம். நுரையீரலில் ஏற்பட்டால் நுரையீரல் புற்றுநோய் என்கிறோம்.
ஒருவருக்கு புற்றுநோய் ஏற்பட பலவித காரணங்கள் இருக்கிறது. உதாரணமாக, ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுகிறது என்றால் அதற்கு எச்.பி.வி. வைரஸ் ஹீயூமன் பாப்பிலோமா எனும் வைரஸ் காரணமாகிறது. அதுபோன்று, புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள ஒருவருக்கு வாய்ப்புற்றுநோய், தொண்டைப்புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படலாம். இதற்கு புகையிலையில் உள்ள நச்சு காரணமாகலாம்.
இதுபோன்று ஒவ்வொரு உறுப்பில் ஏற்படும் நோய்க்கும் ஒவ்வொருவிதமான காரணமும் ஒவ்வொரு வகையான வைரஸூம் காரணமாகலாம்.
தடுப்பூசி என்பது என்ன?
தடுப்பூசி என்பது, நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான பாதுகாப்பு மருந்தாகும். குறிப்பிட்ட தொற்றுகளுக்கு எதிர்ப்பை உருவாக்கி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதுதான் தடுப்பூசி ஆகும். பெரும்பாலான தடுப்பூசிகள் ஊசி மூலம் வழங்கப்படுகின்றன, சில வாய்வழியாக அல்லது மூக்கில் தெளிக்கப்
படுகின்றன.
தற்போது ரஷ்யா கண்டுபிடித்திருக்கும் mRNA எனும் புற்றுநோய்க்கான தடுப்பு மருந்து என்ன மாதிரியானது?
கொரோனா பரவியபோது அதைத்தடுக்க பயன்படுத்தப்பட்ட எம்.ஆர்.என்.ஏ. என்ற தொழில்நுட்பத்தைதான் ரஷ்யா தற்போது புற்றுநோய் தடுப்பூசி தயாரிப்புக்கு பயன்படுத்தியுள்ளது. புற்றுநோய் கட்டிகளை அழிக்கும் இந்தத் தடுப்பூசிக்கு ‘என்ட்ரோமிக்ஸ்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுவாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் தடுப்பு மருந்து (vaccine) என்பது ஒரு நோய் வராமல் தடுத்துக் கொள்வதற்காக பயன்படுத்துவதாகும். அதாவது, நம் நாட்டில், கக்குவான், போலியோ, டிப்த்திரியா போன்ற நோய்கள் வராமல் தடுக்க பயன்படுத்தும் தடுப்பு மருந்துகளைத்தான் தடுப்பூசி என்று சொல்வோம். உதாரணமாக, கருப்பை வாய் புற்றுநோய் ஒருவருக்கு ஏற்படாமல் இருக்க நம் நாட்டில் தடுப்பு மருந்துகள் இருக்கிறது. குறிப்பிட்ட வயதில் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளலாம். இதைத்தான் தடுப்பு மருந்து என்கிறோம்.
ஆனால், ரஷ்யா தற்போது கண்டுபிடித்திருக்கும் இந்த புற்றுநோய்க்கான தடுப்பு மருந்து என்பது ஒருவருக்கு புற்றுநோய் வந்தபிறகு புற்றுநோயின் தீவிரத்தைக் குறைக்க பயன்படுத்தும் மருந்தாகும். அதனால், இதை டெக்னிக்கலாக சொல்வதானால் எம்.ஆர்.என்.ஏ தெரப்பி என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது நோய் வந்தபிறகு எடுத்துக் கொள்வதை சிகிச்சை என்றுதான் சொல்வோம். அந்தவகையில், இந்த எம்.ஆர்.என்.ஏ வேக்சின் என்பது புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளான கீமோதெரப்பி, ரேடியோ தெரப்பி, இம்யூன்தெரப்பி போன்ற ஒருவகை தெரப்பியாகும்.
இன்னும் விரிவாகச் சொல்ல வேண்டும் என்றால், புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் உள்ள ஒருவருக்கு சிலோப்ரோஸ்ட் டி என்ற தடுப்பு மருந்து இருக்கிறது. இந்த மருந்து என்பது பாதிக்கப்பட்ட ஒருவரின் செல்களை எடுத்து அதிலிருந்து புரோட்டீனை பிரித்து எடுத்து அதை பெட்லைஷேனில் முறைப்படுத்தி எதிர்ப்பு சக்தி செல்களை உருவாக்கி அதை மீண்டும் அவரது உடலில் செலுத்தி புரோஸ்டேட் புற்றுநோய்க்கான செல்களை கட்டுப்படுத்தும் ஒரு சிகிச்சை முறையாகும்.
அதுபோன்றுதான் இந்த எம்.ஆர்.என்.ஏ எனும் தடுப்பு மருந்தும். அதாவது, புற்றுநோய் இருக்கும் ஒருவருக்கு அவரது செல்களை எடுத்து அதிலிருந்து புரோட்டீனை பிரித்து அதிலிருந்து எம்.ஆர்.என்.ஏவை எடுத்து முறைபடுத்தி மீண்டும் அவரது உடலில் செலுத்தும்போது. புற்று செல்களை கட்டுப்படுத்தக் கூடிய சிகிச்சை முறையாகும். எனவேதான் முன்பு சொன்னதைப் போல இதை எம்.ஆர்.என்.ஏ இன்ஜக்சன் என்று சொல்வது சரியாக இருக்கும். அல்லது எம்.ஆர்.என்.ஏ தெரப்பி என்று சொல்லலாம்.
இந்த புற்றுநோய் தடுப்பூசி எல்லாவிதமான புற்றுநோய்க்கும் பயன்படுமா அல்லது குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டும்தான் பயன்படுமா?
இந்தத் தடுப்பு மருந்து பெருங்குடல் புற்றுநோய்க்கும், (பிரையின் டியூமர்) மூளை புற்றுநோய்க்கும் நூறு சதவீதம் பலன் தந்துள்ளதாக தற்போது ரஷ்யா தெரிவித்திருக்கிறது. ஆனால், இது எத்தனை பேரை வைத்து சோதனை செய்தார்கள். அதில் எத்தனை பேருக்கு தீர்வு அளித்துள்ளது என்ற தகவல்களை ரஷ்யா இன்னும் முழுமையாக வெளியிடவில்லை. இன்னும் இதற்கான ஆய்வுகள் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன.
எனவே, இன்னும் தெளிவான விரிவான தரவுகள் வெளியிட்ட பிறகே இன்னும் எந்தெந்த புற்றுநோய்க்கு எல்லாம் பயன்படும் என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியும். அதன் பிறகு, உலகளவிற்கான அங்கீகாரம் அளிக்க வேண்டும். அதன் பிறகே, உலகளவில் இந்த மருந்தை அனைவரும் பயன்படுத்த முடியும்.
புற்றுநோயின் நான்காம் நிலையில் உள்ளவர்களும் இந்த மருந்தை எடுத்துக் கொள்ள முடியுமா?
மேலே சொன்னது போன்று இந்த mRNA தடுப்பு மருந்து குறித்த முழுமையான ஆய்வுகள் முடிந்து வெளிவந்த பிறகு, புற்றுநோய் முற்றிய நான்காம் நிலையில் உள்ளவர்களுக்கு மட்டும்தான் முதலில் பயன்படுத்த முடியும். பொதுவாக,, புற்றுநோயை பொருத்தவரை எந்தவொரு புது மருந்து கண்டுபிடித்தாலும் அதை முதலில் நான்காம் நிலையில் உள்ள புற்றுநோயாளிக்கு கொடுத்துதான் சோதனை செய்வார்கள். ஏனென்றால், அவர்கள்தான் மிக அபாய நிலையில் உள்ளவர்கள்.
எனவே, இந்த மருந்து அவர்களை காப்பாற்ற வாய்ப்பு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள அவர்களுக்குத்தான் முதலில் கொடுக்கப்படும். ஒருவேளை அவர்களுக்கு அது வேலை செய்ய தொடங்கினால், அந்த புற்றுக்கட்டிகள் எவ்வளவு கட்டுக்குள் வருகிறது. அது திரும்பவும் வராமல் இருக்கிறதா என்பதையெல்லாம் ஆய்வு செய்வார்கள். எனவே, எந்தவொரு புது மருந்துமே நான்காம் நிலையில் உள்ளவர்களுக்கு தீர்வு அளித்தால் மட்டுமே அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு பயன்படுத்த முடியும். இப்படி ஒரு புது மருந்து வெளி வருகிறது என்றால், பலவித விதிமுறைகள் உள்ளன. இதையெல்லாம் தாண்டி இந்த மருந்துகள் சக்சஸ் கொடுத்தால்தான் அதை வெளியே கொண்டு வருவார்கள் எதிர்காலத்தில் இந்த தடுப்பூசியின் வளர்ச்சி எப்படி இருக்கும்..
பொதுவாக, எந்தவொரு நோய்க்கான தடுப்பு மருந்துமே அது முழுமையாக எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் பயன்பாட்டுக்கு வரும்போதுதான் உலகளவில் அங்கீகாரம் பெறும். இந்த தடுப்பு மருந்தைப் பொருத்தவரை ரஷ்யாவிலேயே இன்னும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில்தான் இந்த மருந்தை பயன்படுத்தி உள்ளனர். எனவே, இன்னும் பலகட்ட சோதனைகளுக்கு பிறகே உலகம் முழுக்க பயன்பாட்டுக்கு வரும்.
அப்போதுதான் இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வரும். எனவே, இதன் எதிர்கால வளர்ச்சி என்பதை நாம் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், கடந்த 20-25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது மருத்துவத் துறை நிறைய நவீன வளர்ச்சி அடைந்திருக்கிறது.
அந்தவகையில், இன்னும் பத்து ஆண்டுகளில் மருத்துவத்துறை இன்னும் அபரிமிதமான வளர்ச்சி அடைய வாய்ப்பு இருக்கிறது. உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் புற்றுநோயை பொருத்தவரை இந்தியா உள்பட இன்னும் பல நாடுகளில் புற்றுநோய்க்கான எதிர்ப்பு மருந்து கண்டுபிடிப்புக்கான ஆய்வில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த ஆய்வுகள் வெற்றியடைந்தால் எத்தனையோ பேருக்கு அது பயனுள்ளதாக அமையும். உயிர் காக்கவும் உதவும்.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்