மூளையை உண்ணும் ‘அமீபா’
நன்றி குங்குமம் தோழி
ஒற்றை செல் உயிரினம்தான் அமீபா நுண்ணுயிர். அமீபா தனது வடிவத்தை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டது. இது நீர்நிலைகள், உதிர்ந்த மட்கும் இலைகள், தேங்கும் இடங்களில் வாழ்கிறது, இந்த வகை அமீபா, மனித உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் என்கிறார் பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.‘மூளையை உண்ணும்’ அமீபாவான ‘நெய்க்லேரியா ஃபோலேரி’யின் (Naegleria fowleri) தொற்றுகள் கேரளத்தில் பரவி வருகிறது. நாளை இந்தியாவின் பல பாகங்களில் பரவ வாய்ப்புள்ளது. அதே சமயம் சில பகுதிகளில் பரவாமலும் இருக்கலாம் என்பதால் மக்கள் அந்த நுண்ணுயிர் குறித்து தெரிந்து கொள்வது அவசியம்.
நெய்க்லேரியா ஃபோலேரி என்பது வெப்பத்தை விரும்பும் ஒரு நுண்ணுயிர். குளங்கள், ஏரிகள், கிணறுகள், ஆறுகள், குளோரின் கலக்கப்படாத குளங்கள், கிணறுகளில் வாழும். இந்த அமீபா மூக்கு வழியாக நம்முடைய உடலுக்குள் நுழையும் தன்மை கொண்டது. குளங்கள், கிணறுகளில் குளிக்கும் போது நம்முடைய உடலுக்குள் நம்மை அறியாமல் சைலன்டாக நுழைந்துவிடும். அமீபா உடலுக்குள் நுழைவது அரிதானது என்றாலும் உடலுக்குள் நுழைந்துவிட்டால் உயிருக்கு ஆபத்தினை விளைவிக்கும்.
2024 முதல், கேரளத்தில் அமீபா பரவல் அதிகமாகியுள்ளது. நெய்க்லேரியா ஃபோலேரி என்ற அமீபா தொற்றின் விளைவாக மூளைக்காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த நோயை ‘ப்ரைமரி அமீபிக் எண்சிபிளாடிஸ்’ (PRIMARY AMOEBIC ENCEPHALITIS) என்று மருத்துவத்தில் அழைக்கிறார்கள். இந்த அமீபா வாழும் நீரின் வெப்பம் சுமார் 46 டிகிரி செல்சியஸ் வரை இருந்தாலும் உயிர் வாழும். அதனால் இந்த வகை அமீபா வெப்ப நீர் ஊற்றுகளில் கூட வாழுகிறது. கடலில் மட்டும் இந்த வகை அமீபா வாழாது.
பொதுமக்கள் நிலைத்து நிற்கும் நீர்நிலைகளில் குளிப்பதால், எளிதாக மனித உடலுக்குள் செல்கிறது. குளம், குட்டைகளுடன் முறையாக பராமரிக்கப்படாத அசுத்தமான குழாய் நீரில் இருந்தும் நெய்க்லேரியா அமீபா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. அசுத்தமான குளம், குட்டைகள், குளோரின் கலக்கப்படாத நீச்சல் குளங்களிலும் இவை வாழ்கின்றன. நீரில் நீச்சல் அடித்துக் குளிக்கும் போது அல்லது முங்கிக் குளிக்கும் போது மூக்கு வழியாக நெய்க்லேரியா அமீபா உடலுக்குள் நுழைந்து ஆல்ஃபேக்டரி நரம்புகள் வழியாக மூளைக்குச் செல்கின்றன. மூளையில் அமீபா தங்கள் கை வரிசையை காட்டத் தொடங்கியதும் அழற்சி ஏற்படும்.
சில நாட்களில் மூளையின் நரம்புகள், திசுக்கள் சிதைய ஆரம்பிக்கின்றன. அசுத்தமான நீரைப் பருகும் போது அது நேரே வயிற்றுக்கு செல்வதால் இந்த அமீபா தொற்று ஏற்படாது. ஆனால், அசுத்த நீர் மூக்குக்குள் சென்றால் நிச்சயம் இந்த தொற்று ஏற்படும். அதிர்ஷ்டவசமாக இந்த தொற்று ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவாது. மூக்கில் நெய் க்லேரியா ஃபோலேரி அமீபா நுழைந்துவிட்டால் மூளைக்குச் செல்ல அதிக நேரம் தேவைப்படாது. தொற்றை உடனடியாகக் கண்டறிந்து சிகிச்சையைத் தொடங்குவது மிகப்பெரிய மருத்துவ சவால்தான்...!
அதீத தலைவலி, தீவிர காய்ச்சல், வாந்தி, குமட்டல், உடல் நடுங்குதல் போன்றவை அமீபா தொற்று ஏற்பட்டு இருப்பதால் ஏற்படும் அறிகுறிகள். உடனே சிகிச்சை தரப்படாவிட்டால், தொற்று ஏற்பட்ட ஒரு வாரம் முதல் பத்து நாட்களுக்குள் மரணம் ஏற்படும்.மூளைக் காய்ச்சலால் அவதிப்படுபவர்களின் தண்டுவட நீரை உடனடியாக மருத்துவ ஆய்விற்கு அனுப்பி நெய்க்லேரியா அமீபா உள்ளனவா என்று உறுதிசெய்ய வேண்டும். பாலிமெரேஸ் செய்ன் ரியாக்ஷன் (Polymerase Chain Reaction) பரிசோதனை மூலமாகவும் அமீபா தொற்றைக் கண்டறிய முடியும். இருந்தாலும், தொற்று ஏற்பட்டவருக்கு தேவையான சிகிச்சையினை மேற்கொண்டாலும், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இந்த ஆபத்தான தொற்று அரிதாகத்தான் ஏற்படும். அதனால், எச்சரிக்கையுடன் இருந்தால் தொற்றை தோற்கடிக்கலாம்.
நெய்க்லேரியா அமீபா தொற்று ஏற்படாமல் தவிர்க்க குளம், குட்டைகள், ஏரிகள், நீர்நிலைகளில் குளிப்பதை, நீந்துவதைத் தவிர்க்கலாம். தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் மூக்கு காப்பான் (plug) அணிந்து குளிக்கலாம். தங்கும் விடுதிகளில், பொது இடங்களில் உள்ள நீச்சல் குளங்கள், பொது நீர் விநியோகத்திற்காக கட்டப்பட்ட மேல்நிலை நீர்தொட்டிகள் ஆகியவற்றை அவ்வப்போது சுத்தம் செய்து, தேவையான அளவு குளோரின் சேர்க்க வேண்டும். நீர்நிலைகளில் குளித்த பத்து நாட்களுக்குள் பெருந் தலைவலியுடன் தீவிர காய்ச்சல் ஏற்பட்டால் துரிதமாக மருத்துவரிடம், நீர்நிலையில் குளித்த விபரத்தை மறந்துவிடாமல் சொல்லி உடனடி சிகிச்சையை தொடங்க வேண்டும்.
தொகுப்பு: கண்ணம்மா பாரதி