காய் வகைகளின் பலன்கள்
நன்றி குங்குமம் தோழி
கோவைக்காய்: கோவைக்காயின் துவர்ப்புச் சுவையை பார்த்து பயப்படாமல் சமைக்கலாம். இது நீரிழிவு நோய்க்கு நல்லது. உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்கும். இதில் பொட்டாசியம், விட்டமின் ‘சி’, நார்ச்சத்து போன்றவை உள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டி உடலில் சேரும் நச்சுப் பொருட்களை அகற்றுகிறது. இதை அரைத்து வடிகட்டி தேன் கலந்து பருகினால் வெப்பத்தினால் வரும் வயிற்றுக் கடுப்பு, சிறுநீர்க்கடுப்பு நீங்குவதுடன் நல்ல தூக்கமும் வரும்.
சுண்டைக்காய்: சுண்டைக்காயில் பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன. வயிற்றில் ஒவ்வாத உணவுக் கிருமிகளால் தோன்றும் நாடாப் புழுக்கள் உருவாகாமல் தடுக்கும். உணவுக்கு முன் வெறும் வயிற்றில் கைப்பிடி அளவு சுண்டைக்காயை அரைத்து வடிகட்டி பனைவெல்லம் சேர்த்து குடித்தால் ரத்தத்தில் உள்ள நச்சுத் தன்மை நீங்கும். இதன் கசப்பு தன்மை உடல் நலன் காக்கும். சுண்டைக்காயை புரோட்டின் நிறைந்த பருப்பு வகைகளுடன் சேர்த்தும் சாப்பிடலாம். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. உடல் பருமனாகாமல் தடுக்கிறது.
தொகுப்பு: வாசுகி, சென்னை.