தோலில் உருவாகும் அடோபிக் டெர்மடிடிஸ்!
நன்றி குங்குமம் டாக்டர்
அலர்ஜி அெலர்ட்
பொதுநல மருத்துவர் சுதர்சன் சக்திவேல்
அலர்ஜி தொடரில் அடுத்ததாக நாம் அடோபிக் டெர்மடிடிஸ் (Atopic Dermatitis) பற்றி பார்ப்போம். இன்றைய காலத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் பாதிக்கக்கூடிய ஒரு பொதுவான தோல் நோய் “அடோபிக் டெர்மடிடிஸ்” (Atopic Dermatitis) ஆகும். இது சாதாரணமாக “எக்ஸிமா” (Eczema) என்றும் அழைக்கப்படுகிறது. இது ஏற்படும்போது தோல் சிவந்து, தாங்க முடியாத அரிப்பு (Itching) ஏற்பட்டு, சில நேரங்களில் புண்களாகவோ அல்லது தோல் மிகவும் வறண்டு கடினமான நிலையிலோ மாறும். இது ஒரு தொற்றுநோய் அல்ல; மாறாக, இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியின் (Immune System) செயல்பாட்டில் ஏற்படும் குழப்பத்தினால் உண்டாகும் ஒவ்வாமை சார்ந்த ஒரு அழற்சி (Allergic Inflammation) ஆகும்.
நோயின் அடிப்படைக் காரணம் (Pathophysiology)அடோபிக் டெர்மடிடிஸ் என்பது ஒரு நாள்பட்ட (Chronic) அழற்சி நோய். இந்த நிலையில், உடலில் உள்ள T-உதவி செல்கள் (T-helper cells) போன்ற நோய் எதிர்ப்பு செல்கள் சில பொருட்களை எதிரியாகக் கருதித் தாக்குகின்றன. இதன் விளைவாக, தோலின் தடுப்புச் சுவர் (Skin Barrier) பலவீனமடைகிறது. இதனால், வெளிப்புறத்தில் உள்ள பாக்டீரியாக்கள், தூசி, சோப்புகள் மற்றும் மற்ற ஒவ்வாமை காரணிகள் (Allergens) எளிதில் தோலுக்குள் ஊடுருவி, தீவிரமான அழற்சியை (Inflammation) ஏற்படுத்துகின்றன.
இதில் முக்கியப் பங்கு வகிக்கும் மூலக்கூறுகள்
*IgE எதிரணுக்கள் (Immunoglobulin E) - ஒவ்வாமை எதிர்வினையின்போது இவை அதிகமாகும்.
*சைட்டோகைன்கள் (Cytokines - IL-4, IL-13, IL-31) - இவை அழற்சியைத் தூண்டுகின்றன.
*ஃபிலாக்ரின் (Filaggrin) என்ற புரதத்தின் குறைபாடு - இது தோலின் தடுப்புச் சுவரை பலவீனப்படுத்துகிறது.
யாரை அதிகம் தாக்கும்?
அடோபிக் டெர்மடிடிஸ் பொதுவாக,
*குழந்தைகள் (பிறந்த சில மாதங்களிலிருந்து 5 வயது வரை).
*குடும்பத்தில் ஒவ்வாமை (Allergy), ஆஸ்துமா, மூக்கடைப்பு (Rhinitis) போன்ற வரலாறு உள்ளவர்கள்.
*நகர்ப்புற வாழ்க்கைமுறை, அதிகப்படியான தூசு, இரசாயனங்கள் கலந்த சோப்புகளை அதிகம் பயன்படுத்துதல் மற்றும் வறண்ட வானிலை உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள்.
*மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற காரணிகள் நோயின் தீவிரத்தை அதிகரிக்கும்.
நோயின் முக்கிய அறிகுறிகள்
அடோபிக் டெர்மடிடிஸ் லேசான நிலையிலிருந்து கடுமையான நிலை வரை பல வடிவங்களில் காணப்படும். முக்கிய அறிகுறிகள்:
*தாங்க முடியாத அரிப்பு (Itching): இரவில் இதன் தீவிரம் அதிகமாகும். இதுவே நோயின் முக்கிய அடையாளம்.
*தோல் சிவத்தல் (Erythema): குறிப்பாக மூட்டு மடிப்புப் பகுதிகளில் காணப்படும்.
*தோல் உரிதல் மற்றும் வறட்சி (Scaling / Dryness): தோல் செதில்களாக உதிர்ந்து, மிகுந்த வறட்சியுடன் இருக்கும்.
*சில இடங்களில் சிறிய நீர்க் கொப்புளங்கள் (Vesicles) தோன்றுதல்.
*தோல் கடினமாதல் (Lichenification): நீண்ட நாட்களாக ஏற்படும் அரிப்பின் காரணமாக, தோல் தடித்து, கடினமாக மாறும்.
பாதிப்பு பகுதிகள்
*குழந்தைகளில்: முகம், கன்னம், உச்சந்தலை, கைகள்.
*பெரியவர்களில்: முழங்கை மற்றும் முழங்காலின் பின்புறம், கழுத்து மற்றும் கை முனைகள்.
நோய் கண்டறிதல்
அடோபிக் டெர்மடிடிஸை கண்டறிவது பெரும்பாலும் நோயாளியின் மருத்துவ வரலாறு மற்றும் உடல் பரிசோதனை (Clinical Examination) மூலமாகவே முடியும். ஆயினும், மருத்துவர் ஆலோசனையின் படி சில சமயங்களில் கூடுதல் பரிசோதனைகள் உதவக்கூடும்:
*IgE அளவு: ரத்தத்தில் இதன் அளவு அதிகரித்து காணப்படும்.
*ஒவ்வாமை தோல் பரிசோதனை (Allergy Patch Test): எந்தப் பொருள் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிய.
*பாக்டீரியா கல்ச்சர் (Bacterial Culture): இரண்டாம் கட்டத் தொற்று (Secondary Infection) இருந்தால் பரிசோதிக்க உதவும்.
சிகிச்சை முறைகள்
இந்நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் ,தோல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
1. தோல் பராமரிப்பு (Skin Care)
*வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கவும்; கடினமான சோப்புகளைத் தவிர்க்கவும்.
*குளித்த உடனே தோலில் ஈரப்பதமூட்டியை (Moisturizer / Emollient) கட்டாயம் தடவ வேண்டும்.
*தரமான மருத்துவ கிரீம்கள் மற்றும் இயற்கை எண்ணெய் பூச்சுகள் (உதாரணமாக, பச்சை தேங்காய் எண்ணெய்) உதவலாம்.
2. மருந்துகள் (உரிய மருத்துவர் ஆலோசனைக்குப்பின்)
*பூசும் ஸ்டீராய்டுகள் (Topical Corticosteroids): அழற்சியைக் கட்டுப்படுத்த.
*கால்சினியூரின் தடுப்பான்கள் (Calcineurin inhibitors - Tacrolimus, Pimecrolimus): நீண்ட காலப் பயன்பாட்டுக்கு பாதுகாப்பானவை.
*ஆன்டிஹிஸ்டமின்கள் (Antihistamines): அரிப்பைக் குறைக்க.
*ஆன்டிபயாடிக்குகள் (Antibiotics): பாக்டீரியா தொற்று ஏற்பட்டால்.
*உள் மருந்துகள் (Systemic Immunomodulators - Cyclosporine, Dupilumab): மிகக் கடுமையான நிலைகளுக்கு.
3. மனநிலை பராமரிப்பு
மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் உணர்ச்சிவசப்படுதல் போன்றவை நோயை அதிகரிக்கச் செய்யும். எனவே, யோகா, தியானம் மற்றும் மன அழுத்த மேலாண்மைப் பயிற்சிகள் அவசியம்.
உணவு மற்றும் வாழ்க்கை முறை
*சிலருக்கு பால், முட்டை, கடலை, கடல் உணவுகள் போன்ற குறிப்பிட்ட உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் - மருத்துவர் ஆலோசனைப்படி அவற்றை தவிர்க்க வேண்டும்.
*அதிகமாகத் தண்ணீர் குடிப்பதன் மூலம் தோலின் ஈரப்பதத்தைப் பராமரிக்கலாம்.
*புகைபிடித்தல், ஆல்கஹால், அதிக காரம் மற்றும் சோடா பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
*பருத்தி (காட்டன்) போன்ற சுத்தமான, மென்மையான ஆடைகளை அணிய வேண்டும்.
மருத்துவக் கண்ணோட்டம்
*அடோபிக் டெர்மடிடிஸ் என்பது ஒவ்வாமை முக்கூட்டு (Allergic Triad) எனப்படும் ஒரு குழுவில் அடங்குகிறது.அதாவது, அடோபிக் டெர்மடிடிஸ், ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை மூக்கடைப்பு ஆகியவை ஒரே குடும்பத்தில் அல்லது ஒரே நபருக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
*இது ஒரு நோய் எதிர்ப்புச் சமநிலையற்ற (Immune Dysregulation) நிலை என்பதால், சிகிச்சை அளிக்கும்போது வெறும் தோலை மட்டும் கவனிக்காமல், முழு உடலின் சமநிலையை நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
நீண்டகாலப் பராமரிப்பு
*தோல் பராமரிப்பைத் தினசரி பழக்கமாக்கிக் கொள்ளுதல்.
*மருத்துவர் அறிவுறுத்தும் சிகிச்சையை இடையில் நிறுத்தாமல் தொடர்வது அவசியம்.
*பருவ மாற்றத்தால் நோய் தீவிரமடையும்போது முன்கூட்டியே மருத்துவரை அணுகுதல்.
*குடும்பத்தினரின் விழிப்புணர்வு - குறிப்பாக குழந்தைகள் அரிப்பால் தங்களைத் தாங்களே காயப்படுத்தாமல் பார்த்துக்கொள்வது.
முடிவுரை
அடோபிக் டெர்மடிடிஸ் என்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோயல்ல, ஆனால் இது ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை வெகுவாகப் பாதிக்கக்கூடியது . சரியான மருத்துவ ஆலோசனை, தினசரி தோல் பராமரிப்பு மற்றும் மன அமைதியுடன் நோயை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்.