கையளவு கடலையிலே கடலளவு சத்து மச்சான்..!
நன்றி குங்குமம் தோழி
எப்போதும் கிடைக்கும் இதனை, நமது தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி எளியதொரு உணவாய் உட்கொண்டுள்ளார்..! மற்றொரு தேசத்திலோ... சாக்லெட் நிறுவனம் ஒன்று, இதன் சுவையை சாக்லெட்களில் உட்புகுத்தி பெரும் வருவாய் ஈட்டுகிறது..! இப்படியாக இரு வேறு துருவங்களில் இதன் தேவையிருந்தும், எளிதில் கிடைக்கும் ஒப்பற்ற இயற்கை உணவாய் நிலக்கடலை அறியப்படுகிறது.
ஆம். பச்சையாக, வேகவைத்து, வறுத்த கடலை, மசாலாக் கடலை, பொரிகடலை, மிக்சர் கடலை, காரக்கடலை, சுண்டல் கடலை, கடலை மிட்டாய், வறுத்து தூளாக்கி உணவில் பயன்படுத்துவது போல், salted, unsalted peanuts, spicy peanuts, honey roasted peanuts, peanut butter எனப் பல்வேறு அவதாரங்களை பல்வேறு நாடுகளில் நிலக்கடலை எடுக்கிறது. அமெரிக்காவில் 94% குழந்தைகள் பீநட் பட்டரை உட்கொள்கின்றனர் என்ற தகவலோடு, பூமிக்குள் விளைகிற நிலக்கடலை என்ற தங்கச் சுரங்கத்தோடு இன்றைய இயற்கை பயணம் நீள்கிறது.
வேர்க்கடலை, மணிலாக் கடலை, மணிலாக் கொட்டை, மல்லாட்டை, கல்லக்கா, கச்சான் என்றெல்லாம் அழைக்கப்படும் நிலக்கடலை ஏறத்தாழ 7000 ஆண்டுகளாக நமது பயன்பாட்டில் உள்ளது. நிலக்கடலையின் தாவரப்பெயர் Arachis hypogea. தோன்றிய இடம் தென் அமெரிக்காவில் ஆன்டிஸ் மலைத்தொடருக்கு கிழக்கே பொலிவியா, பெரு, பிரேசில், அர்ஜென்டினா நாடுகள் இதன் பிறப்பிடம் என்கிறது வரலாறு. போர்ச்சுக்கீசிய வணிகர்கள் வாயிலாக, உலகம் சுற்றும் உணவாக உருவெடுக்க, இன்று சீனா, இந்தியா மற்றும் நைஜீரியா மற்றும் அமெரிக்கா நாடுகள் அதிகம் உற்பத்தி செய்து கொள்முதலிலும் ஏற்றுமதியிலும் முன்னிற்கின்றன.
மூங்ஃபாலி, மக்ஃபாலி, பூமியுக், கடலக்காயி, வேரு சென்னாகா என இந்தியாவின் பல்வேறு மாநில மொழிகளில் அழைக்கப்படும் நிலக்கடலை, குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆங்கிலத்தில் groundnut, earthnut, goobernut என பூமிக்குள் விளையும் இதன் தன்மையை வைத்து குறிப்பிடுகின்றனர்.
வண்டல் மண், செம்மண், கரிசல் மண்ணில் வளரக்கூடிய வெப்ப மண்டலப் பயிரான இது, கம்பு, சோளம் உள்ளிட்ட தானியங்களுக்குள் ஊடுபயிராகவும், தனியாகவும் சாகுபடி செய்யப்பட்டு, சித்திரை, தை என வருடம் இருமுறை அறுவடை செய்யப்படுகிறது. இதன் இலைகள் மஞ்சள் நிறத்திற்கு மாறும் போது, வேர்களில் உள்ள காய்கள் முற்றி அறுவடைக்குத் தயாராகும். பறித்ததும், எண்ணெய் உற்பத்தி, நேரடி உபயோகம் என இரண்டாய் பிரிக்கப்பட்டு பதப்படுத்தப்படும்.
இதன் தாவரப் பெயரில் உள்ள ‘ஹைபோஜியா’ என்பது ‘பூமிக்குக் கீழே’ என்று பொருளாம். பூமிக்கடியில் தலைவைத்து இலைகளை வெளியில் விடும் எண்ணெய்த் தாவரமாக, இதன் மஞ்சள் வண்ணப் பூக்கள், காய்த்துக் கனியாவது பூமிக்குள்தான். Geocarpy எனப்படும் இந்த அரிய நிகழ்வில், கடலையின் பூக்கள் அதன் வேர்களில் கொத்துக் கொத்தாக பூத்துக் காய்க்கும். கடினமான இதன் பழுப்பு நிற ஓட்டிற்குள் உள்ள இளஞ்சிவப்பு நிறத் தோல் வெள்ளை விதைகள் மீது போர்த்திய நிலையில் தென்படும்.
நிலக்கடலையின் தோலில் லேசான துவர்ப்பும், மண் மணத்துடன் இனிப்புச் சுவையும் விதைகளில் இருப்பதால், ஆரம்பத்தில் சமையல் எண்ணெய் எடுக்க மட்டுமே பயன்பட்டது. என்றாலும், இதன் தரமான சத்துகளால் இன்று உலகெங்கிலும் உள்ள மக்களின் முக்கிய ஊட்டச்சத்து உணவாய் இருக்கிறது. நிலக்கடலையில் உள்ள பல்வேறு ஊட்டச் சத்துக்களுடன், இதன் நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் சேர்த்தே ஊட்டவியல் நிபுணர்கள் நமக்கு எடுத்துரைக்கின்றனர்.
கையளவு நிலக்கடலையில், 48 கிராம் கொழுப்பு, 25 கிராம் புரதம், 21 கிராம் மாவுச்சத்து, 9 கிராம் நார்ச்சத்துக்களுடன் அதிகக் கலோரிகளையும் கொண்டது நிலக்கடலை. இதன் கொழுப்பில், நமது உடலுக்குத் தேவையான MUFA, PUFA எனும் நிறைவுறா கொழுப்பு அமிலங்களே அதிகம் காணப்படும். மேலும், அராக்கின், கோனார்க்கின் புரதங்களும், லைசின், ஆர்ஜினைன், ட்ரிப்ட்ஃபேன் உள்ளிட்ட அத்தியாவசிய அமினோ அமிலங்கள், திசுக்களைக் கட்டமைக்கவும், புதிய திசுக்களை உருவாக்கவும், உறுப்புகள் சீரமைப்புக்கும், உடல் வளர்ச்சிக்கும் உதவுகின்றன. இதனாலேயே, இறைச்சியின் புரதத்திற்கு ஒப்பான தாவரப் புரதம் என நிலக்கடலை கொண்டாடப்படுகிறது.
மேற்சொன்னவை தவிர ஃபோலிக் அமிலம், தையமின், நியாசின், ரிபோஃபிளேவின், பயோட்டின் இவற்றுடன் பி வைட்டமின், டோக்கோ-ஃபெரால் வைட்டமின் ஈ அளவும், மாங்கனீஸ், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், செலீனியம், இரும்புச்சத்து, துத்தநாகம் உள்ளிட்ட அத்தியாவசிய கனிமச் சத்துகளும், சைட்டோ-ஸ்டீரால், ரெஸ்வெரெட்ரால், கெம்ப்ஸ்டிரால், கோலின், ஃபாலி-ஃபீனால் தாவரச்சத்துகளும் இதனை முழுமையான தாவர உணவாய் திகழச் செய்கிறது.
மேலே சொன்ன சத்துகள் அனைத்தும் பச்சை விதை மற்றும் தோல் எடுக்காத விதைகளிலும் முழுமையாகக் கிடைக்கிறது. கடலையை வறுத்துப் பொடியாக்கும் போது வைட்டமின்கள் அழிகின்றன.அத்தியாவசிய ஊட்டங்களுடன் நரம்பு மண்டல ஆரோக்கியம், எலும்பு மற்றும் தசைகளின் ஆரோக்கியம், ரத்த உற்பத்தி மற்றும் ரத்த சுத்திகரிப்பு, நோய் எதிர்ப்பு ஆற்றல், ஹார்மோன் சுரப்பு என நன்மைகளையும் அள்ளித் தருவதால் குழந்தைகளுக்கும், பதின்பருவத்தினருக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும், நோய்வாய் பட்டவர்களுக்கும் நிலக்கடலை பரிந்துரைக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு ஏற்படும் Protein Energy Malnutrition (PEM) என்ற புரத ஆற்றல் குறைபாட்டு நோய்களைத் தவிர்க்க உதவும் ஊட்ட உணவாகவும் நிலக்கடலை விளங்குகிறது. இதன் ஆன்டி-ஆக்சிடென்டுகள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் அமினோ அமிலங்கள், இதய நோய், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், அதிகக் கொலஸ்ட்ரால், குடல் நோய்கள், பித்தப்பை அழற்சி, கருவுறாமை போன்ற வாழ்க்கை முறை நோய்களின் தாக்கத்தைக் குறைக்கவும், மன அழுத்தம், தூக்கமின்மை, அல்சைமர் நோய் மற்றும் பார்கின்சன் எனப்படும் மூளைத்தேய்வு நோய்களை மட்டுப்படுத்தவும், குடல், மார்பகம், கருப்பை சார்ந்த புற்றுநோய்களின் தீவிரத்தைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
பெண்களை பெருமளவு பாதிக்கும் பிசிஓடி, கருப்பைக் கட்டிகள், கருவுறாமை, கருப்பை அழற்சி மற்றும் மாதவிடாய் நிறுத்தத்தில் உண்டாகும் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வாய் இருப்பதுடன், இதன் பயிர்கள் காய்ப்புக்கு வரும்போது, அதனை உண்ண வரும் எலிகளின் இனப்பெருக்கம் கூடுதலாவது, நிலக்கடலையின் கருவுறுதல் விருத்தி விகிதத்தையே காட்டுவதாகச் சொல்லப்படுகிறது.
இத்தனை நன்மைகள் நிலக்கடலையில் இருந்தாலும், உணவு ஒவ்வாமை ஏற்படுவதும் நிலக்கடலையில்தான் என்கின்றன ஆய்வுகள்.
இதில் உள்ள அராக்கின், கோனார்க்கின் புரதங்கள் மற்றும் இதன் வெளித்தோல் ஏற்படுத்தும் ஒவ்வாமையால் வாந்தி, வயிற்றுப்போக்கு, தோல் அழற்சி, மூச்சுத்திணறலில் தொடங்கி, உயிர் பாதிப்பு வரை கொண்டு செல்லக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது. நிலக்கடலையைத் தாக்கும் ஆஸ்பர்கில்லஸ் பூஞ்சையின் நச்சுப்பொருளான அஃப்ளாடாக்சின், உணவு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கு முக்கியக் காரணமாய் இருக்கிறது. அதிகக் கலோரி உள்ள தாவர உணவு என்பதால், அதிகமாக உட்கொள்ளும் போது, உடல் எடை கூடுதல் நிகழும். நிலக்கடலையின் ஃபைடிக் அமிலம், பிற உணவு உறிஞ்சுதலைக் குறைக்கக்கூடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
நைட்ரஜன் சுழற்சியை மேம்படுத்தும் பயிர் என்பதுடன், மண் வளத்தையும் காக்கும் முக்கியப் பயிராகவும் போற்றப்படுகிற நிலக்கடலையில் இருந்து பெறப்படும் எண்ணெய் சமையல் எண்ணெயாகவும், கால்நடைகளுக்கான தீவனமாகவும் இருப்பதுடன், இதன் எண்ணெய், மாவு, கிளசரைடுகள் அழகு சாதனப் பொருள் தயாரிப்பில் பெரும் பங்கு வகிக்கின்றன. Longevity Fruit எனப்படும் இதன் சிறப்பைக் கொண்டாட, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 13 உலக நிலக்கடலை தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.உலகம் முழுவதும் தங்கு தடையின்றி எளிதில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் நிலக்கடலையும் ஒன்று என்பதுடன், இதனை அளவோடு உண்டு வளமோடு வாழ்வோம்..!ஆம்... கையளவு கடலையிலே கடலளவு சத்து மச்சான்..!
(இயற்கைப் பயணம் நீளும்..!)
டாக்டர் சசித்ரா தாமோதரன்
மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்