கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையில் ஒரு சாதனை!
நன்றி குங்குமம் டாக்டர்
கோவை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு மருத்துவமனைகள் சேர்ந்து நாட்டின் முதல் ‘மருத்துவமனைகளுக்கு இடையேயான இணை மாற்ற கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை’யை வெற்றிகரமாக நடத்தியுள்ளன. இந்த சிகிச்சை மூலம் இறுதி நிலை கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட இரு நோயாளிகளுக்கு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது. கோவையில் 2017 ஆம் ஆண்டு, இந்தியாவில் முதன்முதலில் லேப்ராஸ்கோபிக் வாழும் கொடையாளர் அறுவைசிகிச்சையை மேற்கொண்டதும் GEM மருத்துவமனையே. கோவையில் உள்ள ஜெம் மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இந்த சவாலான உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேலத்தைச் சேர்ந்த 59 வயது ஆண் நோயாளி ஒருவருக்கும், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த 53 வயது ஆண் நோயாளிக்கும் கல்லீரல் பாதிப்பு இருந்ததால் அவர்கள் இரண்டு பேருக்குமே கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை தேவைப்பட்டது. அவர்களுக்கு உறுப்பு தானம் செய்ய அவர்களின் மனைவிகள் முன்வந்த நிலையில் அவர்கள் தங்களின் கணவர்கள் தகுந்த ரத்தக் குழுவை சேர்ந்தவர்களாக இல்லாத காரணத்தால் அவ்வாறு தானம் செய்ய முடியாமல் போனது.
இந்த நேரத்தில் மருத்துவர்கள் ‘இணை மாற்ற கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை’ மூலம் ஜெம் மருத்துவமனையில் உள்ள சேலத்தை சேர்ந்த நபரின் மனைவியின் கல்லீரலை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உள்ள திருப்பூரை சேர்ந்த நபருக்கு கொடுக்கவும், இவருடைய மனைவியின் கல்லீரலை ஜெம் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்குக் கொடுக்கவும் முடியும் என்பதை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை துவங்கினர். இதையடுத்து ஜூலை 3, 2025 அன்று இரு மருத்துவமனைகளிலும் ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இது பற்றி ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேலு கூறுகையில்; இப்படி ஒரு சிகிச்சையை வழங்க அதிக அளவிலான சட்டப்பூர்வ நடைமுறைகளை முறையே பின்பற்ற வேண்டியிருந்தது. மேலும் போக்குவரத்து உள்ளிட்ட பல தளவாட சவால்களை கடக்க வேண்டியிருந்தது என கூறினார்.“ஒரு மருத்துவமனையிலிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு உறுப்பைக்கொண்டு செல்ல தமிழ்நாடு மாநில உறுப்பு மாற்று ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற வேண்டியிருந்தது.
மேலும், இரு மருத்துவமனைகளில் நடக்க உள்ள அறுவைசிகிச்சைகளை ஒரே நேரத்தில் நடத்தவேண்டியது மிக அவசியம். அதை அவ்வாறு நடத்திடவும், நிகழ் நேரத்தில் இரு மருத்துவமனை குழுவினரும் உரையாடிட தேவையான வசதிகளை அமைக்கவும் வேண்டும். அதை நாங்கள் செய்தோம்’ என்றார்.
இது பற்றி ஜெம் மருத்துவமனைகளின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர். பி.பிரவீன் ராஜ் கூறுகையில்; “இணை மாற்ற கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைகள் ஏற்கெனவே மனித உறுப்புகள் மாற்றுச் சட்டம் 2014 இன் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன, ஆனால் இரு மருத்துவமனைகளுக்கு இடையேயான இப்படிப்பட்ட உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை என்பதை செய்ய கூடுதலாக நிறைய வழிமுறைகள் இருந்தன. எனவே, நாங்கள் இதற்கான விரிவான சம்மதப் படிவங்களை வழங்கவேண்டியிருந்தது. மேலும் இரு நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் தொடர்ச்சியான நெறிமுறை மேற்பார்வை ஆகியவற்றை வழங்க வேண்டியிருந்தது,” எனக் கூறினார்.
ஜெம் மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். என்.ஆனந்த் விஜய் பேசுகையில்; “மாற்று அறுவைசிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்ட நாளில், தங்களுக்கிடையே ஐந்து கிலோமீட்டர் தொலைவைக் கொண்ட இந்த இரு மருத்துவமனைகளும் இரண்டு வெவ்வேறு அறுவைசிகிச்சை அரங்குகளில் ஒரே நேரத்தில் அறுவைசிகிச்சை செய்தன. இந்த அறுவைசிகிச்சைகளில் ஏற்படும் முன்னேற்றத்தை கண்காணிக்கவும், கல்லீரலை கொடையாளர்களிடம் இருந்து கவனமாக எடுத்து, பின்னர் மாற்று அறுவைசிகிச்சையை ஒருங்கிணைக்கவும் நிகழ் நேர வீடியோ பதிவுகள் நிறுவப்பட்டன.
உறுப்புகளைக் கொண்டு செல்ல குளிர்சாதன வசதி கொண்ட பிரத்தியேக ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்த சிகிச்சையில் பல தரப்பட்ட சவால்கள் இருந்தன. அதைக் கடந்து வெற்றிகரமாக இந்த சிகிச்சை நடைபெற்றது. இது மருத்துவ உலகில் ஒரு மிக பெரும் சாதனை” என்று கூறினார்.
ஜெம் மருத்துவமனையின் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் மேக்னஸ் ஜெயராஜ் கூறுகையில், “இரண்டு அறுவை சிகிச்சைகளும் முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டன. தேவையான அனுமதிகளை விரைவுப் படுத்துவதில் தமிழ்நாடு சுகாதாரத் துறை முழு ஒத்துழைப்பை வழங்கியது, மேலும் அவசரநிலைகளின் போது சீரான போக்குவரத்து வழித்தடங்களை சட்ட அமலாக்கம் உறுதி செய்தது” என்றார்.
“கல்லீரல் செயலிழப்பாலும் தகுந்த கொடையாளர்களின் பற்றாக்குறை இருப்பதாலும் ஆண்டுதோறும் 25,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இறந்து வருகிறார்கள்” என டாக்டர் பழனிவேலு கூறினார். தற்போது இந்த 2 மருத்துவமனைகள் இணைந்து செய்துள்ள சாதனை பலருக்கும் புதிய நம்பிக்கையை அளிக்கிறது. இந்த வெற்றி எதிர்காலத்தில் இதுபோல பல மருத்துவமனைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயும் நடக்க நல்ல துவக்கமாக அமையும் என அவர் கருத்து தெரிவித்தார். இந்த சிகிச்சையில் உடல் உறுப்பை வழங்கிய கொடையாளர்கள் மற்றும் அதை பெற்றவர்கள் அனைவரும் சிகிச்சைக்கு பின்னர் நலமாகவும், குணமடைந்தும் வருகின்றனர் என்று டாக்டர். என். ஆனந்த் விஜய் தெரிவித்தார்.
தொகுப்பு: சுரேந்திரன்