சேத்தியாத்தோப்பு - சோழபுரம் வரை நான்கு வழிச்சாலை பயன்பாட்டுக்கு வந்தது
சேத்தியாத்தோப்பு, ஜூலை 28: பின்னலூர்-சோழபுரம் வரை நான்கு வழிச்சாலையை பயன்பாட்டுக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார். விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகள் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. இதில் ஒரு சில இடங்களில் சேவை சாலைகள், சிறு பால கட்டுமான பணிகள் மட்டுமே எஞ்சி உள்ள நிலையில், மற்ற பகுதிகளில் ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனம் விரிவாக்க பணிகளை முடித்துள்ளது. மேலும் இந்த விரிவாக்க பணிகள் சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் பகுதியில் தொடங்கி அரியலூர் மாவட்டம் சோழபுரம் வரை 60 கிலோ மீட்டர் தூரம் வரை ரூ.2,357 கோடியில் கட்டமைக்கப்பட்டு, சாலை பணிகள் முடிவடைந்துள்ளது.
இதையடுத்து இச்சாலையை பிரதமர் மோடி பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். தூத்துக்குடியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து காணொலி காட்சி மூலம் பின்னலூர்-சோழபுரம் வரை இந்த நான்கு வழிச்சாலையை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதனை வரவேற்கும் விதமாக பின்னலூரில் உள்ள விக்கிவாண்டி-கும்பகோணம் சாலை முகப்பு கைகாட்டியில் தோரணங்கள்
அமைக்கப்பட்டிருந்தது.