ஜோலார்பேட்டை அருகே மொபட்டில் துப்பட்டா சிக்கி தாய் பலி ; மகள் படுகாயம்
ஜோலார்பேட்டை அடுத்த புள்ளானேரி ஊராட்சி வாத்தியார் வட்டம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம், பத்மா (65) தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். தம்பதி இருவரும் பீடித்தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் பத்மாவுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த 25ம் தேதி திரியாலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மகள் ரீத்தாவுடன் மொபட்டில் சென்றார். அப்போது ரீத்தா அணிந்திருந்த துப்பட்டா துணி மொபட்டில் சிக்கி விபத்து ஏற்பட்டது.
இதில் ரீத்தா மற்றும் அவரது தாய் இருவரும் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து பத்மா தீவிர சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பத்மா நேற்று பரிதாபமாக இறந்தார். ரீத்தா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.