சேரன்மகாதேவியில் பள்ளி மாணவர்களுக்கு கைப்பந்து பயிற்சி வழங்கும் இன்ஸ்பெக்டர்
வீரவநல்லூர், ஜூலை 31: சேரன்மகாதேவியில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் கைப்பந்து பயிற்சி வழங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பெற்றோர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளார்.
சேரன்மகாதேவியின் போலீஸ் இன்ஸ்பெக்டராக தர்மராஜ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். நெல்லை மாவட்டத்தில் இளம் சிறார்கள் அதிகஅளவில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட பகுதியாக சேரன்மகாதேவி இருப்பதை கண்ட அவர் மாணவர்களை நல்வழிப்படுத்த விளையாட்டினை ஊக்குவிக்க முயன்றார். இதனைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் பள்ளி கோடை விடுமுறை தொடங்கும் முன்னர் அதிக இளம்சிறார் உள்ள பகுதியாக திகழும் சேரன்மகாதேவி தேரடி தெரு பகுதியில் மாணவர்களுக்காக இறகு பந்து மைதானம் அமைத்து கொடுத்தார்.
தொடர்ந்து அப்பகுதி மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் பேட் மற்றும் இறகு பந்துகள் வாங்கி கொடுத்து மாணவர்களிடையே விளையாட்டு பழக்கத்தை ஏற்படுத்தினார். மாணவர்களின் பாதுகாப்பாக மைதானத்தை சுற்றிலும் பென்சிங் வேலி அமைத்து கொடுத்தன் மூலம் மாணவர்கள் பாதுகாப்பாக அந்த மைதானத்தில் விளையாடி வந்தனர். தற்போது அந்த மைதானத்தின் ஒரு பகுதியில் மாணவர்களுக்கு மாலை நேரங்களில் கைப்பந்து பயிற்சி இன்ஸ்பெக்டர் வழங்கி வருகிறார். பள்ளி, கல்லூரியில் கைப்பந்து வீரராக திகழ்ந்த இன்ஸ்பெக்டர் தர்மராஜ் கிடைக்கின்ற நேரங்களில் மாணவர்களுக்கு கைப்பந்து பயிற்சி வழங்கி வருகிறார். மாணவர்களை நல்வழிப்படுத்த தொடர் முயற்சி மேற்கொண்டும் வரும் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் பெற்றோர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளார்.