பாளை சதக்கத்துல்லா கல்லூரியில் தமிழ்நாடு உயர்கல்வி மன்ற பாடநூல் வெளியீட்டு விழா
தியாகராஜ நகர், ஆக. 3: தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் வகுத்துத் தந்துள்ள பாடத்திட்டத்தின் படி பாளை சதக்கத்துல்லா கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் சௌந்தர மகாதேவன் ‘மதிப்புக் கல்வி’ என்ற தலைப்பில் எழுதிய பாடநூலின் வெளியீட்டு விழா நடந்தது.
பாளை சதக்கத்துல்லா கல்லூரி வளாகத்தில் நடந்த இவ்விழாவில் கல்லூரியின் துணை முதல்வர் ஜேனட் ராணி வரவேற்றுப் பேசினார். தலைமை வகித்த கல்லூரித் தாளாளர் பத்ஹூர் ரப்பானி, என்.சி.பி.ஹெச். நிறுவனம் பதிப்பித்துள்ள பேராசிரியர் சவுந்தர மகாதேவனின் 15வது நூலை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை கல்லூரி முதல்வர் அப்துல் காதர் பெற்றுக் கொண்டார். பேராசிரியர் சவுந்தர மகாதேவன் ஏற்புரை வழங்கினார். நிதிக்காப்பாளர் சித்திக் நன்றி கூறினார். தமிழ்நாட்டின் நான்கு பல்கலைக்கழகங்களில் மதிப்புக் கல்வி எனும் இந்நூல் பாடநூலாக அமைவது குறிப்பிடத்தக்கது.