ராதாபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
நெல்லை, ஜூலை 24: ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம், ராதாபுரம் பகுதிகளுக்கு மணியம்மை மஹாலில் நேற்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. இதனை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில் ‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துத்தரப்பு மக்களும் அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டுமென பல்வேறு சீர்மிகு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
முதலமைச்சர் ஏழை, எளிய மக்களின் வசதிக்கேற்ப அவர்களின் பகுதிகளுக்கு அருகாமையிலேயே தங்கள் குறைகளையும், கோரிக்கை மனுக்களையும் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான பொதுமக்களிடையே விண்ணப்பங்கள் பெறப்பட்டு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம் சேவைகள் கிடைப்பதற்கு, நெல்லை மாவட்டத்தில் 255 முகாம்கள் நடத்திடுவதற்கு திட்டமிடப்பட்டு அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் 7.10.2025 வரை இம்முகாம்கள் நடைபெறவுள்ளது.
இம்முகாம்களில் உடனடியாக தீர்வு காணும் வகையில் குடும்ப அட்டைகளில் பெயர் மாற்றம் செய்தல், பெயர் சேர்த்தல், மின்விநியோகம் பெயர் மாற்றம் போன்ற உடனடியாக தீர்வு காணும் மனுக்களுக்கு முகாம் நடைபெறும் இடத்திலேயே தீர்வு வழங்கப்பட்டு பலர் சேவைகள் பெற்று வருகின்றனர். மேலும், முகாமில் தீர்வு கிடைக்காத மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாஸ்கர், ராதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பொன் மீனாட்சி அரவிந்தன், அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி, வட்டாட்சியர் மாரிசெல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் அலெக்ஸ் சாமுவேல் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.