ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆலங்குளம் வட்டார பகுதிகளில் தனிப்படை 24மணி நேர கண்காணிப்பு
ஆலங்குளம், ஜூலை 25: ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆலங்குளம், காளத்திமடம், குருவன்கோட்டை, நல்லூர், மருதம்புத்தூர், புதுப்பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 32 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் காரையார் சொரிமுத்து அய்யனார், திருச்செந்தூர் முருகன் கோயில், ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில்களுக்கு குடும்பத்துடன் தரிசிக்க புறப்பட்டுச் சென்றனர். இவ்வாறு ஆடி அமாவாசை திருவிழாவுக்கு வெளியூர் செல்பவர்கள் ஊருக்கு திரும்பிவர இரு தினங்களுக்கு மேலாகும் என்பதால் ஊரே வெறிச்சோடிகாணப்படுவது வழக்கம். இதை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட மர்மநபர்கள் கடந்த சில ஆண்டுகளில் ஆங்காங்கே சில திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி வந்தனர்.
ஆனால், நடப்பாண்டில் இதுபோன்று எந்தவிதமான குற்றச்சம்பவங்களும் ஆலங்குளம் வட்டாரப் பகுதிகளில் நடைபெறாமல் தடுக்கும்பொருட்டு ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ் தனது தலைமையில் இன்ஸ்பெக்டர் எஸ்ஐக்கள், போலீசார், ஊர்க் காவல் படையினர் என சுமார் 200 பேர் கொண்டு அமைக்கப்பட்ட தனிப்படையை அமைத்தார். இதையடுத்து ஒரு கிராமத்திற்கு 4 பேராக பிரிக்கப்பட்ட தனிப்படையினர் பகலில் இருவர், இரவில் இருவர் என இரு பிரிவுகளாக பிரிந்து ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 24 மணி நேர தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.