குலவணிகர்புரத்தில் ரயில்வே மேம்பாலம்
கேடிசி நகர், ஜூலை 28: தமிழ்நாட்டில் நெல்லை- திருச்செந்தூர் ரயில்வே பிரிவில் குலவணிகர்புரத்தில் ‘ஒய்’ வடிவ ரயில்வே மேம்பாலம் கட்டுமானத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நெல்லை எம்.பி., ராபர்ட்புரூஸ் எம்பி பேசினார். இது தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் விதி எண்-377ன் கீழ் பேசியதாவது: நெல்லை- திருச்செந்தூர் ரயில்வே இருப்புப் பாதையில் குலவணிகர்புரம் லெவல் கிராஸிங் எண் 4ல் ‘ஒய்’ வடிவ ரயில்வே மேம்பாலம் கட்டுமானத்திற்கான முன்மொழிவு உள்ளது.
குலவணிகர்புரத்தில் ரயில்வே கேட் ஒரு நாளைக்கு 16 முறை முழுவதுமாக மூடப்படுகிறது. பயண நேரங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் ரயில் பாதை மூடப்படுவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், அரசு அதிகாரிகளும் தங்கள் பயணத்தின் போது தினமும் பாதிக்கப்படுகின்றனர். மாநில அரசு தோராயமாக ரூ.100 கோடிக்கான மதிப்பீட்டை தயார் செய்து மே 2015 முதல் வாரத்தில் தெற்கு ரயில்வே தலைமையகத்திற்கு அனுப்பியுள்ளது.
நானும் கடந்த ஏப்.16ம் தேதி அன்று திருவனந்தபுரத்தில் உள்ள தெற்கு ரயில்வே சென்னை பொது மேலாளரை நேரில் சந்தித்து, இந்த விஷயத்தை விரைவுபடுத்துமாறு வலியுறுத்தினேன். ஆனால் 2 மாதங்கள் கடந்து விட்டன. ரயில்வேயிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. இந்த திட்டத்தை முடிக்க ஒன்றிய அரசும், மாநில அரசும் தலா 50 சதவீதம் தொகை செலுத்த வேண்டும். எனவே திட்டத்தைத் தொடங்க தடையின்மைச் சான்றுடன் 50 சதவீதம் நிதியை ஒதுக்குமாறு ஒன்றிய ரயில்வே நிதியமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ராபர்ட்புரூஸ் எம்பி பேசினார்.