குற்றாலத்தில் மலர் கண்காட்சி நிறைவு
தென்காசி, ஜூலை 26: குற்றாலத்தில் ஆறு நாட்களாக நடைபெற்ற மலர் கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. சுமார் 8000 பேர் பார்வையிட்டனர். குற்றாலம் சாரல் திருவிழா கடந்த 20ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை எட்டு நாட்கள் நடைபெறுகிறது. சாரல் திருவிழாவில் ஒரு அங்கமாக ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் 20ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை தோட்டக்கலை துறை சார்பில் மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, மற்றும் மலைப்பயிர்கள் கண்காட்சி நடைபெற்றது.
சுற்றுலா பயணிகளின் வேண்டுகோளுக்கு இந்த மலர் கண்காட்சி மேலும் இரண்டு தினங்கள் அதாவது 24, 25ம் தேதிகள் என இரண்டு தினங்கள் நீட்டிக்கப்பட்டது. 20ம் தேதி முதல் நேற்று வரை மொத்தம் ஆறு தினங்கள் நடைபெற்ற கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. கண்காட்சியை பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் அதிக அளவில் கண்டு ரசித்தனர். மொத்தம் 8000 பேர் வரை வருகை தந்துள்ளனர். ஆறு நாட்களில் கட்டணமாக சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் வரை வசூலானது.