ஏர்வாடி அருகே துணிகரம் கோயில் கணக்கர் வீட்டில் திருட்டு
ஏர்வாடி, ஜூலை 28: ஏர்வாடி அருகே கோயில் கணக்கர் வீட்டில் பித்தளை பானை, திருவிளக்குகள், குடங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஏர்வாடி அருகேயுள்ள புலியூர்குறிச்சி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் பார்வதிநாதன். இவர் சாத்தான்குளத்தில் தங்கியிருந்து அங்குள்ள கோயிலில் கணக்கராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இசக்கியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 1 வாரத்திற்கு முன்பு இசக்கியம்மாள், தனது வீட்டை பூட்டி விட்டு, திருச்செந்தூரில் உள்ள தனது தாயார் சங்கரவடிவு பார்ப்பதற்காக சென்றுள்ளனர். வீடு பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டு மாடி கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த பித்தளை பானை, திருவிளக்குகள், குடங்கள், வாளி, செம்பு, தட்டு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருடி சென்றனர்.
இந்நிலையில் நேற்று இசக்கியம்மாள் ஏர்வாடிக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் ஏர்வாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.