குற்றாலத்தில் தொடரும் மழை மெயினருவியில் 7வது நாளாக குளிக்க தடை
தென்காசி, ஜூலை 26: குற்றாலத்தில் தொடரும் மழை காரணமாக 7வது நாளாக மெயின் அருவியில் தடை நீடிக்கிறது. ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் நான்காவது நாளாக நேற்றும் தடை நீடித்தது. குற்றாலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தண்ணீர்வரத்து அதிகரிப்பு காரணமாக போலீசார் சுற்றுலா பயணிகளை பிரதான அருவிகளில் குளிக்க அனுமதிக்கவில்லை. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவைத்தாண்டி தடாகத்தில் தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் அதிகமாக தண்ணீர் விழுகிறது. பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் அதிகமாக விழுகிறது. நேற்று பகலிலும் அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருந்தது. வெயில் அவ்வளவாக இல்லை.
வெள்ளப்பெருக்கு காரணமாக மெயின்அருவியில் ஏழாவது நாளாக நேற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதிக்கவில்லை. ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றிலும் நான்காவது நாளாக சுற்றுலா பகுதிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. புலி அருவி, சிற்றருவி ஆகியவற்றில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். தொடர் தடை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை சுமாராக உள்ளது.