அண்ணாமலையார் கோயிலில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்: முக்கிய சாலைகளில் கடும் நெரிசல், விடுமுறை நாளில் அலைமோதிய கூட்டம்
திருவண்ணாமலை, ஜூலை 28: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வார இறுதி விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதனால், சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக திகழ்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இத்திருக்கோயிலை தரிசிப்பது பிறவி பெரும் பயன் என்பதால், சமீப காலமாக வெளி மாநில பக்தர்கள் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, பவுர்ணமி நாட்களுக்கு இணையாக அரசு விடுமுறை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்காக திரள்கின்றனர். எனவே, நாள்தோறும் விழாக்கோலமாக திருவண்ணாமலை காட்சியளிக்கிறது. இந்நிலையில், வார இறுதி விடுமுறை தினமான கடந்த 2 நாட்களும் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதன்படி, நேற்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கும்போதே தரிசன வரிசையில் கூட்டம் காத்திருந்தது. பின்னர், படிப்படியாக பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட ரூ.50 கட்டண தரிசனத்திலும், ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட பொது தரிசன வரிசையிலும் கூட்டம் அலைமோதியது. அதனால், சுமார் 4 மணி முதல் 5 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தரிசன வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு, கோயில் உட்பிரகாரங்களில் கூடுதலான வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, 4ம் பிரகாரத்தில் கலையரங்கம் பகுதியில் சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் வரிசையில் செல்லும் வகையில் நிழற்பந்தல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனால், கோயில் வெளி பிரகாரத்தில் வரிசையில் காத்திருக்கும் நிலை தற்போது குறைந்துள்ளது.
மேலும், வழக்கம்போல கடந்த 2 நாட்களாகவே கிரிவல பக்தர்கள் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்திருந்தது. குறிப்பாக, இடுக்குப் பிள்ளையார் கோயிலில் வெளிமாநில பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதனால், அங்கும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. வழக்கம்போல பக்தர்களின் வருகை நேற்று அதிகரித்ததால், திருவண்ணாமலை நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.