போதைப்பொருட்கள் பதுக்கிய குடோன், மளிகை கடைக்கு சீல் ரூ.50 ஆயிரம் அபராதம்
கீழ்பென்னாத்தூர், ஜூலை 31: வேட்டவலம் பேருந்து நிலையம் எதிரே பெருமாள் என்பவர் மளிகை கடை வைத்துள்ளார். இவருக்கு சொந்தமான குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பதுக்கி விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையிலான அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில் 115 கிலோ குட்கா, 350 கிராம் பான் மசாலா (ஹான்ஸ்), 75 கிராம் பாக்கு, 100 கிராம் கூல் லிப் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து குடோன் மற்றும் மளிகை கடையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள், மளிகை கடை உரிமையாளர் பெருமாளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதே கடைக்காரருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.