மகன் திட்டியதால் தாய் தற்கொலை
கலசபாக்கம், ஜூலை 31: கலசபாக்கம் அருகே மகன் திட்டியதால் தாய் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலசபாக்கம் ஒன்றியம் காப்பலூர் கிராமத்தில் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மினி(70). இவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். பத்மினி மகனுடன் வசித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பத்மினிக்கும் அவரது மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மன உளைச்சலுக்கு ஆளான பத்மினி, அரளி விதையை அரைத்து குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மகன், கதறி அழுதபடி தாயை மீட்டு கலசபாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பத்மினி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.