15 கிலோ வெள்ளி கொள்ளை வழக்கில் விசாரணை தீவிரம் 500 சிசிடிவி கேமராக்களை தனிப்படை ஆய்வு ஆரணியில் நடந்த சம்பவம்
ஆரணி, ஜூலை 30: ஆரணி அடுத்த ராட்டிணமங்கலம் இ.பி.நகரை சேர்ந்த பெருமாள்(37), என்பவர், ஆரணி-வேலூர் சாலையில் நகைக்கடை வைத்துள்ளார். இவர் கடந்த 27ம் தேதி கடைக்கு வந்தபோது, கடையின் சுவரை துளையிட்ட மர்ம நபர்கள், 15 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றிருந்தனர். மேலும் காஸ் கட்டர் மூலம் லாக்கரை உடைக்க முயன்று முடியாததால் 25 கிலோ நகைகள் தப்பியது. கொள்ளை கும்பல் கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்திவிட்டு, டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரை எடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து புகாரின்பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் அகிலன், சுந்தரேசன், விநாயகமூர்த்தி, மகலட்சுமி தலைமையிலான போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து எஸ்பி சுதாகர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து தனிப்படை போலீசார் ஆரணி டவுன், சேவூர் பைபாஸ் சாலை, வேலூர், விழுப்புரம், வந்தசாவி, செய்யாறு, திருவண்ணாலை செல்லும் சாலைகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் முதற்கட்டமாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது 3 பேர் என்பதும், அவர்கள் கடையில் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து, பையில் எடுத்துக்கொண்டு, ஹெல்மெட் அணிந்தபடி, ஆரணி டவுன் பகுதியில் முக்கிய வீதிகளில் சுற்றியவிட்டு, தப்பி சென்றுள்ளனர். கொள்ளை கும்பல் ஆந்திரா அல்லது வடமாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. குற்றவாளிகள் குறித்து தடயம் சிக்கியுள்ளதால், விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.