மணல் கடத்திய வேன் ஓடை சேற்றில் சிக்கியது ஒருவர் கைது: மற்றொருவருக்கு போலீஸ் வலை செய்யாற்று படுகையில் ெகாட்டும் மழையில்
பெரணமல்லூர், நவ. 7: செய்யாற்று படுகையில் கொட்டு மழையில் மணல் கடத்திய வேன் ஓடை சேற்றில் சிக்கியது. மேலும் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து மற்றொருவரை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த கெங்காபுரம், நாராயணமங்கலம், ஆவணியாபுரம், கொழப்பலூர், முனுகப்பட்டு, கடுகனூர் வழியே செய்யாற்று படுகை செல்கிறது. இந்த ஆற்று படுகையில் மாட்டு வண்டி மற்றும் லாரிகள் மூலம் மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பெரணமல்லூர் அடுத்த கடுகனூர் பகுதி வழியே செல்லும் செய்யாற்றுபடுகையில் மினி லாரியில் மணல் கடத்தும் கும்பல் மணல் கடத்திக்கொண்டு சென்றது. அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் லாரி பாரம் தாங்காமல் ஓடை பகுதி வழியாக உள்ள சேற்றில் சிக்கிக் கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மினிலாரி டிரைவர் எவ்வளவு முயன்றும் லாரியை எடுக்க முடியவில்லை. அப்போது சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்களை விழித்துக் கொண்டு வந்து பார்த்தபோது மணல் கடத்திய மினி லாரி சேற்றில் சிக்கி இருப்பது தெரிய வந்தது.
பொதுமக்களை கண்டதும் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். உடனடியாக அப்பகுதி மக்கள் பெரணமல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று மினி லாரியை மீட்டு காவல் நிலையம் எடுத்து வந்தனர். மேலும் மணல் கடத்தல் தொடர்பான விசாரணையில் ஜெகநாதபுரம் பகுதியை சார்ந்த பழனி(48) மற்றும் ஓட்டுநர் மோரக்கனியனூர் பகுதியைச் சார்ந்த சின்ராசு(30) என தெரியவந்தது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து பழனியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.