விதை பண்ணை வயல்களை அதிகாரி ஆய்வு ஆரணி, மேற்கு ஆரணி வட்டாரத்தில்
ஆரணி, ஆக. 2: தமிழக அரசு விவசாயிகள் பயிரிடும் நிலக்கடலை பயிர்களில் மகசூல் அதிகரிக்கும் வகையில் வெளிமாநில மணிலா ரகங்களை தருவிக்கப்பட்டு வேளாண் துறையின் மூலம் விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மகசூல் அதிகரிக்க வெளிமாநில ரகங்களான கிர்னார் 4, கிர்னார் 5 ரக நிலக்கடலை விதைகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் 300 ஏக்கர் பரப்பளவில் விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஆரணி, மேற்கு ஆரணி வட்டாரத்தில் அக்ராபாளையம், வண்ணாங்குளம், கீழ்நகர், புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நெல், நிலக்கடலை விதை பண்ணை வயல்களை விதைச்சான்று உதவி இயக்குனர் குணசேகரன் தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஆரணி அடுத்த அகராபாளையம் கிராமத்தில் உள்ள நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள கிர்னார் 4 ரகம் விதைப்பண்ணை வயலில் ஆய்வு செய்து, வெளிமாநில ரக நிலக்கடை பயிர் சாகுபடிகள் குறித்து கேட்டறிந்தனர். ஆய்வின்போது போளூர் விதை சான்று அலுவலர் சதீஷ்குமார், உதவி விதை அலுவலர் சதீஷ்குமா மற்றும் விவசாயிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.