2 வீடுகளில் கதவு உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு பித்தளை அண்டாவையும் தூக்கி சென்றனர் வந்தவாசி அருகே கும்பல் கைவரிசை
வந்தவாசி, ஜூலை 29: வந்தவாசி அருகே 2 வீடுகளில் கதவு உடைத்து தங்கம், வெள்ளி நகைகளை திருடிச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். வந்தவாசி அடுத்த கொண்டையங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சகாதேவன்(53), மணி(45) ஆகியோரின் வீடுகள் அருகருகே உள்ளது. இந்நிலையில் இருவரும் வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் அவர்களது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். நேற்று சகாதேவன் வீட்டுக்கு வந்தபோது பின்பக்க கதவு உடைத்து திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 6 கிராம் தங்க நகை, அரை கிலோ வெள்ளி கொலுசு ஆகியவற்றை மர்ம கும்பல் திருடிச் சென்றது தெரியவந்தது. அதேபோல் மணி என்பவரது வீட்டில் கதவு உடைத்த மர்ம கும்பல், பித்தளை அண்டாவை திருடிச் சென்றுள்ளது. இதுகுறித்து இருவரும் தெள்ளார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருட்டு கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அடுத்தடுத்து 2 வீடுகளில் கதவு உடைத்து திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.