திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு குடும்ப பொருளாதாரமும் உயர்ந்து வருகிறது பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றும் திட்டங்களால்
திருவண்ணாமலை, ஜூலை 29: திருவண்ணாமலை மாநகர திமுக சார்பில், ராஜராஜன் தெருவில் கலைஞரின் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. மாநகர செயலாளர் கார்த்திவேல்மாறன் தலைமை தாங்கினார். மாநகர பகுதி செயலாளர்கள் விஜயராஜ், சீனுவாசன், குட்டி புகழேந்தி, ஷெரீப், சண்முகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர் கோவிந்தன் வரவேற்றார். கூட்டத்தில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: சென்னை முதல் கன்னியாகுமரி வரை தனித்துவமான அடையாளங்களை உருவாக்கிய தமிழ்நாட்டின் நவீன சிற்பி கலைஞர். ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் அவரது அடையாளங்கள் உண்டு. திருவண்ணாமலை மாவட்டத்தை உருவாக்கியவர் கலைஞர். இங்குள்ள கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி, நீதிமன்ற வளாகம் போன்றவை எல்லாம் கலைஞரால் வந்தது. 80 ஆண்டுகால பொது வாழ்வுக்குச் சொந்தக்காரர். அவரது வழியில் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு வீட்டுக்கும் என்னென்ன தேவை என்று பார்த்துப் பார்த்து திட்டங்களை செய்து வருகிறார்.
ஒவ்வொரு குடும்ப பொருளாதாரமும், தனிமனித பொருளாதாரமும் உயர வேண்டும் என்பதற்காக திட்டங்களை வகுக்கிறார். இன்றைக்கு பட்டினி சாவு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டமும் மாநகரமும் திமுக ஆட்சி காலத்தில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்த மாவட்டம் வளர்வதற்கு காரணம் கலைஞரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். அவர்கள் கொண்டுவரும் திட்டங்களால் வளர்ச்சி பெற்று இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.தரன், எம்எல்ஏ மு.பெ.கிரி, மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம் மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், தொமுச மாநில செயலாளர் சவுந்தரராசன், செயற்குழு உறுப்பினர் பொன்முத்து, அவைத்தலைவர் கண்ணன், மாவட்ட அமைப்பாளர் டிவிஎம் நேரு, துணை மேயர் ராஜாங்கம், அமைப்புசாரா தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம், துரைவெங்கட், தகவல் தொழில்நுட்ப அணி கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.