தென்பெண்ணை ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செங்கம் அருகே ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்
செங்கம், ஆக.4: செங்கம் அருகே ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தென்பெண்ணை ஆற்றில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே நீப்பத்துறையில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் மற்றும் சென்னியம்மன் பாறையில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடந்தது. விழாவில் புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடி புதுத்தாலியை அணிந்து கொண்டனர்.
அதேபோல், அண்டை மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு ஆற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். முடி காணிக்கை செலுத்தியும், ஆடு, கோழிகளை பலியிட்டும், பொங்கல் வைத்தும் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், உறவினர், நண்பர்களுக்கு கறி உணவு சமைத்து பரிமாறி மகிழ்ந்தனர்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் கோகுலவாணன் ஆகியோர் செய்திருந்தனர். ஆடிப்பெருக்கு விழாவில் பக்தர்களின் நலன் கருதி மாவட்டம் நிர்வாகம் சார்பில் அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி கொடுத்திருந்தனர். இந்நிலையில், நேற்று தென்பெண்ணை ஆற்றில் மிதமான அளவில் வெள்ளம் சென்று கொண்டிருந்ததால் பக்தர்கள் பாதுகாப்பாக புனித நீராடி ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட முடிந்தது குறிப்பிடத்தக்கது.