டிராக்டர் கவிழ்ந்து கணவன், மனைவி பலி மற்றொரு பெண் படுகாயம் ஜமுனாமரத்தூர் அருகே சோகம்
கலசப்பாக்கம், ஆக.4: ஜமுனாமரத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் கணவன், மனைவி பரிதாபமாக பலியாகினர். மற்றொரு பெண் படுகாயம் அடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் ஒன்றியம், பாதிரி கிராமத்தை சேர்ந்தவர் குப்பன்(40). இவரது மனைவி பரிமளா(35). இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று கணவன், மனைவி இருவரும் வெளியே சென்று விட்டு மாலை வீடு திரும்பினர். அப்போது, மன்சூர் கிராமத்தை சேர்ந்த கோபி(23) என்பவர் ஓட்டி வந்த டிராக்டரில் அமர்ந்து வந்தனர். அவருடன் குப்பு(55) என்பவரும் வந்தார்.
ஜமுனாமரத்தூர்- போளூர் சாலையில் வேடந்தோப்பு கிராமம் வனப்பகுதி வழியாக வந்தபோது, திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தாறுமாறாக ஓடி தலைகீழாக கவிழ்ந்தது. டிராக்டர் அடியில் சிக்கிய குப்பன், அவரது மனைவி பரிமளா ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். உடன் சென்ற குப்பு படுகாயம் அடைந்தார். டிரைவர் காயமின்றி தப்பினார்.
இதுகுறித்து தகவலறிந்த ஜமுனாமரத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் இருவரது சடலங்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயம் அடைந்த குப்புவை சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, இதுகுறித்து ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் கணவன், மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.