செங்கம் அருகே பஸ்சுக்கு காத்திருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி: வாலிபரிடம் விசாரணை
செங்கம், ஆக. 3: செங்கம் அருகே பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி நடந்துள்ளது. இதுதொடர்பாக ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பி.எல். தண்டா கிராமத்தை சேர்ந்தவர் சரிதா. இவர் வெளியூரில் வேலை செய்து வருகிறார். கடந்த 31ம் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்ற சரிதா இரவு 10 மணியளவில் முறையாறு சுங்கச்சாவடி அருகே சொந்த ஊருக்கு செல்ல பேருந்துக்காக காத்திருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர், திடீரென சரிதாவின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சரிதா செயினை இறுக பிடித்துக்கொண்டு கூச்சலிட்டுள்ளார். இருப்பினும் அந்த வாலிபர், செயினை பறிக்க தொடர்ந்து முயற்சி செய்துள்ளார். ஆனால் சரிதா, தனது செயினை விடாமல் அந்த வாலிபரிடம் தொடர்ந்து போராடியுள்ளார். ஒருகட்டத்தில் அந்த வாலிபர் செயின் பறிக்கும் முயற்சியை கைவிட்டு தப்பியோடிவிட்டாராம்.
இதுகுறித்து சரிதா செங்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து சந்தேகத்தின்பேரில் 33வயது மதிக்க தக்க ஒரு வாலிபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.