திருப்பூர் நொய்யல் ஆற்றில் மீன் பிடிக்க ஆர்வம் காட்டும் வாலிபர்கள்
திருப்பூர், ஜூலை 28: திருப்பூர் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அப்பகுதி மக்கள் ஆற்றில் ஆர்வமுடன் மீன் பிடித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை கோவை, நீலகிரி மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் தொடங்கி திருப்பூர், ஈரோடு வழியாக கரூரில் நிறைவடையும் நொய்யல் ஆற்றிலும் தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளது. இயல்பான நிலையை விட நேற்றைய தினம் திருப்பூர் மாநகரின் வழியே செல்லும் நொய்யல் ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக காணப்பட்டது.
கோவையிலிருந்து வரும் ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ள சூழ்நிலையில் கழிவுநீர்கள் அடித்துச் செல்லப்பட்டு புதிய நீராக திருப்பூருக்கு வருகிறது. இதில் அதிகப்படியான மீன்களும் இருக்கும் காரணத்தினால் திருப்பூர் மாநகரின் அணைப்பாளையம், ஆத்துப்பாலம், காசிபாளையம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நொய்யல் அணைக்கட்டு பகுதிகளில் வாலிபர்கள் சிலர் தூண்டில் போட்டும், வலைகள் விரித்தும் மீன் பிடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக இறைச்சி கடைகளில் மீதமாகும் இறைச்சிகளை கொண்டு வந்து தூண்டிலில் சிக்க வைத்து ஆற்றில் வீசுகின்றனர். இதில் சிறிய அளவிலான ஜிலேபி மீன்கள் முதல் கெண்டை மீன்கள் வரை கிடைப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வாலிபர்கள் சிலர் கூறுகையில், ‘‘நொய்யல் ஆற்றில் நீரோட்டம் இல்லாத போது மீன்கள் கிடைக்காது. தற்போது நீரோட்டம் வேகமாக உள்ள நிலையில் புதுநீராக வருவதால் மீன்கள் கிடைப்பதாகவும். ஒரு சில பகுதிகளில் மட்டுமே மீன்கள் அதிக அளவு கிடைக்கும். தற்போது நீரோட்டம் நல்ல நிலையில் இருப்பதால் சுமார் 3 கிலோ வரை மீன்கள் கிடைத்திருப்பதாகவும் என்னைப்போல பலரும் மீன்பிடிப்பதில் ஈடுபட்டுள்ளனர்’’ என்றனர்.