பெரியகுளம் கரையில் குப்பையால் சுகாதார சீர்கேடு
உடுமலை,நவ. 18: உடுமலை அருகே உள்ள பெரியவாளவாடி பிரிவில் பெரியகுளம் உள்ளது. திருமூர்த்தி அணை 8 குளம் பாசனத்தில் உள்ள இந்த குளம் பெரிய அளவில் நீர்பிடிப்பு உள்ள பகுதியாகும். நீர்வரத்து அதிகமாக இருக்கும்போது,இந்த குளம் நிரம்பி வழியும். தற்போது இந்த குளத்தின் கரையில் குப்பை, கூழங்களை குவித்து வைத்துள்ளனர். இறைச்சிக் கழிவுகளையும் கொட்டிச் செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் பெருகி நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.குப்பை கிடங்கு போல் அப்பகுதி காணப்படுகிறது.
மழை காலங்களில் குளம் நிரம்பி வழியும்போது குப்பைகள் அடித்து செல்லப்பட்டு விவசாய நிலங்களில் தேங்கிவிடும். எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதை கண்காணித்து, குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். நீர் நிலைகளை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.