மடத்துக்குளம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல பயணிகள் வலியுறுத்தல்
உடுமலை, ஆக. 4: உடுமலை பழனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மடத்துக்குளம். தொகுதி மற்றும் தாலுகா தலைநகராக உள்ளது. இங்கு கருவூலம், நீதிமன்றம், தாலுகா அலுவலகம், காவல்நிலையம், பேரூராட்சி அலுவலகம், வாரச்சந்தை, நெடுஞ்சாலை துறை அலுவலகம், ரயில் நிலையம் ஆகிய அனைத்தும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே பேருந்து நிலையமும், ரயில் நிலையமும் உள்ளன. சுற்றுவட்டார கிராம மக்கள் ரயில் நிலையத்தை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
ரயில் நிலைய வளாகம் புதர் மண்டி காணப்பட்டது. தற்போது பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதர்கள் வெட்டி அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. கோவை, பொள்ளாச்சி, பாலக்காட்டில் இருந்து மதுரை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு மடத்துக்குளம் வழியாக ரயில் இயக்கப்படுகிறது. ஆனால் இந்த ரயில்கள் மடத்துக்குளம் ஸ்டேஷனில் நிற்காததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், “திருச்செந்தூர்- பாலக்காடு ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் மடத்துக்குளத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். முன்பதிவு வசதியுடன் கூடிய டிக்கெட் கவுண்டர் அமைக்க வேண்டும். மேலும், மடத்துக்குளம் பகுதியில் இருந்து விவசாய விளைபொருட்கள், மதிப்பு கூட்டு பொருட்கள், பேப்பர் உள்ளிட் ஆலை உற்பத்தி பொருட்களை வெளியிடங்களுக்கு சென்று விற்பனை செய்யும் வகையில் சரக்கு போக்குவரத்து வசதி உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.