தாராபுரத்தில் ஆடிப்பெருக்கு கோலாகலம்
தாராபுரம். ஆக. 4: தாராபுரத்தில் ஆடிப்பெருக்கையொட்டி அமராவதி ஆற்றில் புனித நீராடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றில் நேற்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடந்தது.ஆற்றங்கரையில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் அகஸ்தீஸ்வரர் கோயில், ஸ்ரீ வெங்கடரமண பெருமாள் திருக்கோயிலில் சாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.புதுமண ஜோடிகள் தலை ஆடி பண்டிகையை கொண்டாட பெண்கள் தன் தாய் வீட்டுக்கு வந்து கணவருடன் அமராவதி ஆற்றில் சப்த கன்னியருக்கு பூஜைகள் நடத்தி புது மஞ்சள் தாலி மற்றும் காப்பு கட்டிக்கொண்டனர்.
நேற்று மாலை தாராபுரம், சித்தராவுத்தன்பாளையம், காட்டூர், நாடார் தெரு பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாலிகையுடன் விநாயகர் கோவிலில் திரண்டனர். பின்னர் சின்னக்கடை வீதி, பெரிய கடைவீதி, என்.என்.பேட்டை வீதி வழியாக ஐந்து சாலை சந்திப்பை அடைந்து அங்கிருந்து அமராவதி ஆற்றுக்கு வந்தனர். ஆற்றங்கரையில் சிறப்பு பூஜை நடத்தினர். நேற்று மாலை வரை பல்லாயிரக்கணக்கான பெண்கள் குவிந்து சாமியை வழிபட்டனர்.