இன்று ஆடி 18 பண்டிகை பூக்கள் வாங்க மார்க்கெட்டில் குவிந்த மக்கள்
திருப்பூர், ஆக. 3: ஆடி 18ஆம் நாள் கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் வீடுகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். இன்று ஆடி 18 பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஏராளமானோர் பூக்கள் வாங்குவதற்காக நேற்று திருப்பூர் பெருமாள் கோவில் வீதியில் அமைந்துள்ள மாநகராட்சி பூ மார்க்கெட் வந்திருந்தனர். இந்த பூ மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. ஆடி 18 பண்டிகைக்கு தேவையான பூக்களை வாங்குவதற்காக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர்.
பூக்கள் விலையும் நேற்று சற்று அதிகரித்து காணப்பட்டது. மல்லிகை பூ கிலோ ரூ.720 முதல் 900 வரையிலும், மஞ்சள் செவ்வந்தி கிலோ 400 ரூபாய், அரளி 150 ரூபாய், மரிக்கொழுந்து 40 ரூபாய், முல்லை பூ கிலோ 600 ரூபாய், பெங்களூர் ரோஸ் 320 ரூபாய், வெள்ளை சம்பங்கி 150 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. ஆடி மாதத்தில் சுபமுகூர்த்த விசேஷங்கள் இல்லாத நிலையில் ஆடி மாதத்தில் ஆடி வெள்ளிக்கிழமை, ஆடி அமாவாசை மற்றும் ஆடி 18 நாட்களில் பூக்கள் விலை சற்று சுமாராக இருக்கும் எனவும், காற்று காலம் என்பதால் வரத்து குறைந்து விலை சற்று அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தனர்.