மாநகராட்சி மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு காலாவதியான குளுக்கோஸ்
திருப்பூர், ஜூலை 26: திருப்பூரில் மகப்பேறு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு காலாவதியான குளுக்கோஸ் விநியோகிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பூர் அவிநாசி சாலை பங்களா ஸ்டாப் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் டிஎஸ்கே மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு திருப்பூர் வடக்கு பகுதியைச் சேர்ந்த ஏராளமான கர்ப்பிணி பெண்கள் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முனியன் என்பவரது மனைவி பானுமதி 5 மாத கர்ப்பிணியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று வழக்கமான பரிசோதனைக்கு சென்று இருந்த நிலையில், குளுக்கோஸ் பரிசோதனை மேற்கொள்வதற்காக பானுமதிக்கு குளுக்கோஸ் பாக்கெட் வழங்கி உள்ளனர். இதனை அவர் திறந்த போது தரம் இல்லாத நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து இது குறித்து உறவினர்களுக்கு தெரியப்படுத்தியதையடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அரசு மருத்துவமனையில் குளுக்கோஸ் காலாவதியாக விநியோகிக்கப்பட்டதாக புகார் தெரிவித்தனர்.
அவர்களின் புகாரை தொடர்ந்து மாநகராட்சி உதவி நல அலுவலர் கலைச்செல்வன் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் வழங்கிய குளுக்கோஸ் பாக்கெட்டுகளை பரிசோதனை செய்ததில் அவை சில காலாவதியான நிலையில் இருந்தது தெரியவந்தது. செவிலியர்களின் கவனக்குறைவால் அது வழங்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து காலாவதியான குளுக்கோஸ் பாக்கெட்டுகளை அப்புறப்படுத்திய நிலையில் செவிலியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பான புகாரின் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். நல்வாய்ப்பாக அந்த குளுக்கோஸ் பாக்கெட்டுகள் யாருக்கும் வழங்கப்படாத நிலையில் அதனை அகற்றி விட்டு இருப்பு வைக்கப்பட்டிருந்த குளுக்கோஸ் பாக்கெட்டுகள் உள்ளிட்ட மருந்துகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.