காங்கயம், வெள்ளகோவில் கோயில்களில் அலைமோதிய பக்தர்கள்
காங்கயம், ஜூலை 25: ஆடி அமாவாசையை முன்னிட்டு காங்கயம், வெள்ளகோவில் பகுதி கோயில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயிலில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
மடவிளாகம் ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில், நத்தக்காடையூர் ஜெயங்கொண்டேஸ்வரர் கோயில், அகிலாண்டபுரம் அகிலாண்டேஸ்வரர் கோயில், காடையூர் காடேஸ்வரர் கோயில், ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் நேற்று அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதுதவிர முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடுகள் நடத்தினர். பெருமளவிலான குல தெய்வ கோயில்கள் காங்கயத்தை சுற்றியே அமைந்துள்ளதால் காங்கயம் பஸ் நிலையத்திலும் நேற்று பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.