பீகாரில் இருந்து திருப்பூருக்கு ரயிலில் 2,560 டன் மக்காச்சோளம் வந்தது
திருப்பூர், ஜூலை 24: திருப்பூர் மாவட்டம் பல்லடம், கேத்தனூர், உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோழிப்பண்ணைகள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள கோழிப்பண்ணைகளுக்கு கோழி தீவனங்கள் மக்காச்சோளம், ஆந்திரா, கர்நாடகா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்துகொண்டு வரப்படுவது வழக்கம்.
இந்நிலையில் பீகார் மாநிலத்தில் தற்போது மக்காச்சோள விளைச்சல் அதிகளவு இருந்ததன் காரணமாக பீகாரில் இருந்து சரக்கு ரயில் மூலமாக 2,560 டன் மக்காச்சோளம் திருப்பூர் கூட்ஸ் செட் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. இங்கு 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 80க்கும் மேற்பட்ட லாரிகளில் மக்காச்சோளத்தினை இறக்கினர். இங்கிருந்து பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்காச்சோளம் கொண்டு செல்லப்பட்டது.