உப்பிலியபுரத்தில் பணம் மோசடி: வாலிபர் கைது
திருச்சி, ஜூலை 31: துறையூர் அருகே உப்பிலியபுரத்தை சேர்ந்த ராமசாமி மகன் ஜெய்சரண்(25). இவர் ரஷ்ய நாட்டில் உள்ள யுனிவர்சிட்டியில் படித்து கொண்டு பகுதி நேர வேலையாக ஆன்லைன் மூலம் பணம் பரிவர்த்தனையும் செய்து வந்தாராம்.ஆந்திர மாநிலம் கிருஷ்ய்யா மாவட்டம், கங்காவரம் பகுதியை சேர்ந்த பேரய்யா மகன் ரவிகுமாரின் மகள் ரஷ்யா நாட்டில் எம்பிபிஎஸ் இரண்டாமாண்டு படிக்கிறார்.
இந்நிலையில் ரவிகுமார் தனது மகளுக்கான படிப்புக் கட்டணம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்தை கல்லூரியில் செலுத்துவதற்காக ஜிபே செயலி மூலம் ஜெய்சரணுக்கு அளித்துள்ளார். ஆனால் ஜெய்சரண் அந்த பணத்தை கல்லூரியில் செலுத்தாமலும், திருப்பி தராமலும் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ரவிகுமார் கொடுத்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் ஜெய்சரணை கைது செய்து துறையூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.